October 24, 2021

பொங்கல் ரேசில் போட்டியில்லாமல் ஓடும் “ரஜினி முருகன்”! – விமர்சனம்

வெட்டு, குத்து, அரிவாள், ரத்தம் என்ற பின்னணியை கொண்டே மதுரை கதைகள் வலம் வருகிறது. ரஜினிமுருகன் படமும் மதுரை பின்னணியை கொண்டுதான் வந்திருக்கிறது. மேலே சொன்ன எதுவும் இல்லாமல் தாத்தா பேரன், வெளிநாட்டு வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை கூடவே வழக்கமான காமெடி மசாலா கலந்து வந்திருக்கிறது.

rajanimuru jan 15
கதை: மதுரையில் பெரிய குடும்பத்து தலைவர் ராஜ்கிரண். இவர் மகன்களை நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டில் செட்டில் செய்து விடுகிறார். ஒரு மகனும், பேரனும் மட்டும் ராஜ்கிரண் கூடவே இருக் கிறார்கள். பேரன் சிவகார்த்திகேயன் எந்த வேலையும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் அப்பாவும், சிவகார்த்திகேயன் அப்பாவும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். குழந்தை களாக இருக்கும்போதே சிவகார்த்திகேயனுக்கு கீர்த்திசுரேஷ்தான் என முடிவு செய்கிறார்கள். வழக்கம் போல நண்பர்கள் இருவருக்கும் சின்னதாக தொடங்கிய பிரச்சனை பெரிதாக இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

வளர்ந்ததும் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் துரத்தி துரத்தி காதலிக்கிறார். இதற்காக காதலி வீட்டு முன்பு டீ கடை போட்டு டீ மாஸ்டர் ஆகிறார். பல தகிடுதத்தங்கள் செய்தும் காதல் கை கூடவில்லை. வழக்கம்போல இந்த படத்திலும் சிவகார்த்திகேயனின் நண்பனாக சூரி.

பாத ஜோதிடரை பார்க்கப்போகிறார்கள். அவரோ கால்ரேகையை பார்த்துவிட்டு இன்னும் 60 நாளில் ஆடி காரில் போவீர்கள். அதை ஊரே நின்று வேடிக்கை பார்க்கும் என்று சொல்ல அதை நம்பி ஆடி கார் ஷோருமுக்கு கார் பார்க்க போகிறார்கள். டெஸ்ட் டிரைவ் எடுத்து போகிறேன் என்று காரை ஓட்டிச் சென்று கம்பத்தில் மோத… ஊரே அவர்களை வேடிக்கை பார்க்கிறது. அங்கே சேல்ஸ் பெண்ணாக இருக்கும் ஹீரோயின் வேலை போகிறது.

சும்மா ஊர் சுற்றி வரும் பேரனுக்கு வீட்டை விற்று தொழிலுக்கு பணம் தருவதற்கு தாத்தா ராஜ்கிரண் முயற்சி எடுக்கிறார். அப்போது சொத்தில் பங்கு தரவேண்டும் என்று வில்லனாக சமுத்திரகனி உள்ளே நுழைகிறார். ராஜ்கிரண் வீடு விற்பனை ஆனதா?

வெட்டியாக ஊர் சுற்றிய சிவகார்த்திகேயன் தொழிலுக்கு வழி பிறந்ததா?

சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது?

வில்லன் சமுத்திரகனி என்ன ஆகிறான்?

என்பதை கதையின் பின்பாதியில் இயக்குனர் பொன்ராம் வழக்கமான தனது பாணியில் காட்சிபடுத்தியிருக்கிறார்.

முதல் படத்தில் எடுத்த மெனக்கெடல் எதையும் இந்த படத்திற்காக பொன்ராம் எடுக்க வில்லை என்பது படம் தொடங்கும்போதே தெரிந்துவிடுகிறது. அதே கூட்டணி… அதே கலர் கலர் சட்டைகள்… கூலிங் கிளாஸ்… கிராமத்து திருவிழா… சிவகார்த்தி கேயனின் நடன அசைவுகள்… சூரியின் காமெடி… என எதுவும் பெருசாக மாற வில்லை. ஒரே ஒரு மாற்றம் ஹீரோயின் மட்டும்தான். கீர்த்தி சுரேஷூக்கும் பெருசாக நடிக்க வாய்ப்பு எதுவும் இல்லை. ராஜ்கிரண் தாத்தா கேரக்டரில் வழக்கம்போல ஸ்கோர் எடுக்கிறார். வெளிநாட்டில் செட்டில் ஆன பிள்ளைகள் ஊர் திரும்ப வேண்டும் என்பதற்காக ‘செத்த’ வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் காட்சியிலும், பிள்ளைகள் பெற்ற வர்களை கவனித்து கொள்ள வேண்டும் என்று பேசும் காட்சிகளிலும் ராஜ்கிரண் ராஜ் கிரண்தான்… ஆக்ஷனி லும்  சிவகார்த்திகேயனுக்கு இணையாக கடைசியில் அடித்து ஆடுகிறார் ராஜ்கிரண்.

வில்லனாக சமுத்திரகனி... ஹூஹூம்… ஒட்டவே மறுக்கிறது. நல்ல கதாபாத்தி ரங்களாகவும், சமுதாய கருத்துகளை சொல்லும் கேரக்டர்களாகவும் நடித்து பழக்கப்பட்ட சமுத்திரகனிக்கு வில்லன் வேஷம் பொறுந்தவே இல்லை… மிஸ்டர் கனி இனிமே இது மாதிரி வில்லன் வேஷத்துக்கு ஓகே சொல்லாம வழக்கமான உங்க பாணி நடிப்பை மட்டும் காட்டுங்க. ஜனங்க அதைதான் உங்க கிட்ட எதிர்பார்க்கிறாங்க.

காமடியன் சூரி... ஒரே மாதிரி டயலாக். ஒரே மாதிரி மாடுலேஷன். ஒரே மாதிரி ஆக்ஷன். தம்பி சூரி சரக்கு எதுவும் புதுசா இல்லனா பீல்டுல நிக்க முடியாதுங்க. பாடிலேங்வேஜ்ல கண்டிப்பா கவனம் செலுத்துங்க. சும்மா பேசிகிட்டே இருந்தீங்கன்னா அதை காமெடின்னு ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க. அப்பப்ப நடிக்கவும் செய்யுங்க.

இசை போட்ட இமான் இந்த கூட்டணியில தன் பாணிய மாத்திக்கணும். ஒரே மாதிரி இசை. ஒவ்வொரு படமும் முதல்படம்னு நினைச்சி இசை போடுங்க இமான். இசையை பொறுத்தவரை இமானை விட அவரை இயக்குனர் பொன்ராம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த கதைய வெளிய விடமாட்டோம்னு பல தடைகள் போடவேண்டியதே இல்லை. ஆனா அதை எல்லாம் தாண்டி வெளிய வந்திருக்கு.

பொங்கல் ரேக்ளா பந்தயத்துல ஓட்டத்துக்கு வந்த 4 படத்துல ஒண்ணு புறப்பட்ட கொஞ்ச நேரத்துல காளைங்க பிச்சிகிட்டு தனியாக கதகளி ஆட வண்டி மட்டும் பக்கத்து வயக்காட்டுல கவுந்துடுச்சி…

இன்னொன்னு வேகமா புறப்பட்டு போற வேகத்துல அச்சாணி கழண்டு படம் பாக்க வந்தவங்க, வேடிக்கை பாக்க வந்தவங்களை எல்லாம் அடிச்சி பத்தி தாரதப்பட்ட கிழிய ரத்தகளறியாக்கி விட்டுடுச்சி…

கெத்தா புறப்பட்ட வண்டியும் வாயில நுரை தள்ள மூச்ச புடிக்க கெத்தா ஓடிகிட்டிருக்கு… தள்ளன நுரைக்கு மாடு மடிஞ்சிடுமா… வெற்றிக்கோட்டை தாண்டுமான்னு போனாதான் தெரியும்…

ரொம்ப போராட்டத்துக்கு பின்னாடி வண்டி புறப்பட்டாலும் கலர் கலரா தோரணம் கட்டி… குடுத்த காசுக்கு சலங்கையும் கட்டி மக்கர் பண்ண மாடுங்களை ரேக்ளாவுல பூட்டி ஜல்லிகட்டு நடக்காம போனாலும் வெற்றி என்னமோ எங்களுக்குத்தான்னு சொல்லிகிட்டே ரஜினிமுருகன்தான் ஓடிகிட்டிருக்குது.

கும்பிட போன சாமி குறுக்கே வந்தா கோச்சிகிட்ட போன சாமியார் கோயிலுக்கு போயிடுவார் இல்ல அது மாதிரிதான்…இதுவும்..!

கோடங்கி