November 29, 2021

பொங்கல் பரிசு ரூ2500- இது சுயநல அறிவிப்புதானே? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது முதல்வர் பழனிசாமி நிவாரணம் வழங்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது சுயநலத்துக்காக பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் இதை நான் வரவேற்கிறேன் என கூறி, கொரோனா மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரு மடங்கு உயர்த்தி முதல்வர் அறிவித்து உள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 19) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர், பின்னர் சேலம் சுற்று வட்டார பகுதிகளில், மினி வேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது, இருப்பாளி என்ற பகுதியில் பேசிய முதல்வர், இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் வரும் ஆண்டு 2.06கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையில், “பொது விநியோகத் திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இவற்றைச் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்ததும் நினைவு கூறத்தக்கது.