September 20, 2021

பேஸ்புக்கில் நடிகை என்று ஏமாற்றி பல லடசம் மோசடி செய்த பெண்ணுக்கு சென்னை போலீஸ் வலை!

பேஸ்புக் உள்ளிட்ட இணைய தளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகத்துடன் ஏமாற்றி சாட்டிங்கில் சிக்கும் தொழிலதிபர்களை மயக்கி மணமும் புரிந்து பல லட்ச ரூபாய் சுருட்டிய மோசடி ராணி ஒருவரை போலீசார் தேடி வரும நிலையில் அவர் கேரளாவில் அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும ஏமாற்றி பல லட்சம் பறித்து விட்டு தலை மறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக சென்னையில் இணையதளம் மூலம் வயதான தொழிலதிபர்களுக்கு காதல் வலைவிரித்து அவர்களை சட்டபடி திருமணம செய்து கொண்டு லட்சக்கணக்கான பணத்தையும் சுருட்டிக் கொண்டு அவர்களை மோசம் செய்துவிட்டு தப்பியோடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போன்ற கிரிமினல் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் பட்டதாரி பெண் ஒருவர் இதுபோன்ற காதல் மற்றும் திருமண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

தற்போது இது போன்ற ஒரு மோசடி ராணி சென்னை மற்றும் பெங்களூரைத் தொடர்ந்து கேரளாவிலும் வலம் வருவதாக திடுக்கிடும் புகார்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. தற்போது கேரளா அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும் ஏமாற்றியதாகக் கூறப்படும் அந்த மோசடி ராணி இணையதளத்தில் தனது பெயர்களை லீனா, ரீனா, ஷீனா மற்றும் மீனா என்று பலவாறு தெரிவித்துள்ளார்.


இவர் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளத்தில் தன்னை ஒரு மலையாள நடிகை என்று அறிமுகம் செய்து கொண்டு தன்னிடம் சிக்குபவர்களிடம் காதல் பேச்சை தொடங்குவார். அடுத்து சாட்டிங்கில் இனிக்கும் காதல் தூது அனுப்புவார்.இதையடுத்து செல்போன் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு பேசுவார். இவரது வலையில் விழும் தொழிலதிபர்களை உங்கள் குரலில் ஸ்பெஷல் ஆண்மை இருக்கிறது. உங்களை போன்ற ஒருவரைதான் திருமணம் செய்து கொண்டு எனது வாழ்நாளை ரொம்ப சுகமாக கழிக்க விரும்புகிறேன் என்று காதல் மொழிகளை அள்ளி வீசுவார்.

இந்த மோசடி ராணியின் காதல் வலையில் சிக்கி அவரை பதிவு திருமணம் செய்து கொண்டு ஒரு வருடம் இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டு தற்போது ரூ.31 லட்சம் பணத்தையும் பறி கொடுத்துவிட்டு சென்னை நகர வீதிகளில் அந்த மோசடி ராணியை இலங்கை தொழிலதிபர் ஒருவர் தேடி அலைகிறார்.

அவரது பெயர் இலங்கேஸ்வரன் (வயது 53). அவர் கடந்த வாரம் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து தான் மோசம் போன காதல் திருமண கதையை சொல்லி கண்ணீர்விட்டு அழுது கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில்,”நான் இலங்கையைச் சேர்ந்தவன். இலங்கையில் நல்ல வசதியோடு வாழ்ந்தேன். எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2004–ம் ஆண்டு நடந்த சுனாமி தாக்குதலில் என் குடும்பம் சின்னாபின்னமாகிவிட்டது. சுனாமியில் எனது மனைவி இறந்து போனார். சொத்து, சுகங்களை இழந்த நான் கனடா நாட்டிற்கு எனது குழந்தைகளோடு சென்றேன். அங்கு புதிய தொழில் தொடங்கினேன். நல்லபடியாகவும் வாழ்ந்து வந்தேன்.

அப்போதுதான் இந்த மோசடி பெண் இணையதளம் வாயிலாக எனது வாழ்க்கையில் குறுக்கிட்டாள். உங்களைப்போல நானும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். மலையாள சினிமாவில் நடித்துள்ளேன். அது எனக்கு கைகொடுக்கவில்லை. தற்போது ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறேன். எனது தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் கஷ்டத்தோடு வாழ்கிறேன் என்றார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னை சென்னைக்கு வரச்சொன்னார்.

கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், சென்னை ஜெ.ஜெ. நகரில் ஒரு கோவிலில் எனக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். அவரோடு ஒரு சில மாதங்கள் இங்கு குடும்பம் நடத்திவிட்டு மீண்டும் நான் கனடா சென்றுவிட்டேன். அந்த பெண் எனக்கு மனைவிக்கு ஆகிவிட்டதால் அவள் கேட்டபோதெல்லாம் வங்கி வாயிலாக பணம் அனுப்பினேன். ரூ.15 லட்சம் வரை கொடுத்தேன்.

அதன் பிறகு ஐந்து முறை சென்னை வந்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கெல்லாம் சுற்றினோம். அதிலும் ரூ.14 லட்சம் வரை செலவானது. அந்தபெண்மணியால் ரூ.31 லட்சம் வரை இழந்துள்ளேன். தற்போது அந்த பெண் என்னை ஏமாற்றி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

நான் தற்போது சென்னையில் தங்கியுள்ளேன். அந்த பெண் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்தது. என்னைப் போல இன்னொரு தொழிலதிபரிடம் இணையதளம் வாயிலாக பல லட்சங்களை பறித்துள்ளார். அவர் இதை ஒரு தொழிலாக செய்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்ணை கண்டு பிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மீது கமிஷனர் உத்தரவின் பேரில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் விசாரணை மேற்கொண்டு புகார் கூறப்பட்டுள்ள மோசடிராணியை தேடிவருகிறார்.இதற்கிடையில் இந்த மோசடி ராணி கேரளாவில் முகாமிட்டு அமைச்சர் உதவியாளர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு எஸ்கேப்பாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.