பெற்றெடுக்கும் குழந்தைக்கு அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள்!

பெரு விருப்பம் கொண்டு, வரம் இருந்து, உடலை, உயிரைப் பணயம் வைத்து தங்களின் வாரிசாக்கப் பெற்றெடுக்கும் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாயும் தந்தையுமே நெருக்கடிதாரர்கள் என்றால் நம்ப முடியாதுதானே? ஆனால், உண்மை அதுதான். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சமத்துவமற்ற நிலையினாலும், குடும்பத்தில் ஆண் பெண் ணுக்கு இருக்கும் ஜனநாயகமற்றத் தன்மையினாலும் குழந்தைகள் இந்த நெருக் கடியை சந்தித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

edit jan 17

இங்கு குடும்பங்கள் விளையாடும் பகடைக்காயில் குழந்தைகளே வெட்டு வாங்க முன்னி றுத்தப்படும் பிஞ்சுக் காய்கள். குடும்பங்களில் குழந்தைகள்மேல் பெற்றோர்கள் திணிக் கும் வன்முறைகளை நினைத்துப் பார்த்தால், இவர்கள் பெற்றோர்கள்தானா என்பதே சந்தேகமாக இருக்கும். இதில் அடிப்படையான சோகமே தாங்கள் செய்வது மிகப் பெரிய வன்முறை என்பதையே உணராமல் காலம் காலமாக வரும் பழக்கத்தில் பெற்றோர்கள் இவ்வன்முறையை மேற்கொள்கிறார்கள்.

நாம் முன்பு பேசியதுபோல், குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக் கும் இரண்டுவிதமான வாழ்க்கை குடும்பத்திற்குள் இருக்கிறது. அக வாழ்வில் கணவ னும் மனைவியும் குறிப்பிட்ட காலம் வரை பிணக்கின்றி இணக்கமாக இருப்பார் கள். பிறகு குடும்பத்திற்குள் நிகழும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் தீர்வும் வடிகாலும் கிடைக்காமல் போனால், அந்த பிளவு அக வாழ்வில்தான் பிரதிபலிக்கும். ஒரே வீட்டில் இருந்தாலும், மனைவியிடம் பேச்சே வைத்துக் கொள்ள மாட்டான் கணவன். கணவ னைப்  பார்த்தால் மனைவியின் முகம் மலராது. இருவரும் சிரித்துப் பேசி எத்தனை நாட்களானது எனக் கணக்கெடுத்தால், அதிர்ச்சியாக இருக்கும். சிலருக்கு ஆண்டுக் கணக்கில்கூட இடைவெளி இருக்கும்.

நகைச்சுவைகளை, அரசியல் நடப்புகளை, காய்கறி விலையேற்றத்தை இருவரும் அவரவர் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் இருவரும் பரஸ் பரம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து தங்களின் வாழ்வின் தொடக்கக் கால மகிழ்ச்சிகளைக் கூட நினைவுகூர்ந்து பேச விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.குடும்பத்தின் சரி செய்யப்படாத இந்த இடைவெளி ஒவ்வொரு குடும்பத் திலும் அன்பின் புரையோடிய புண் போல் உள்ளுக்குள் அழுகிக் கொண்டே இருக்கும். இந்தப் புண்ணின் வலி மீதூறும் நேரங்களில் எல்லாம் கணவனும் மனைவியும் பிள்ளைகளையே பெரும்பாலும் கசந்து தீர்ப்பார்கள்.

சிறு வாய்ப் பேச்சுக்குக் கூட, சிறு மாற்றுக் கருத்துக்குக்கூட வாரக் கணக்கில் பேசிக் கொள்ளாத கணவன் மனைவிகள் இருக்கிறார்கள். குடும்பத்தின் இரண்டு சக்கரங்களான இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாத நேரத்தில், வீட்டில் இருக்கும் குழந்தைகளின் பாடு சொல்லி மாளாது. குழந்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக கணவன் மனைவி இருவருக்குமிடையே நடைபெறும் துவந்த யுத்தம் ரத்தம் சிந்தாமலேயே மரண வலி யைத் தரக்கூடியது. இந்த யுத்தத்தில் ஆண்களைவிட பெண்கள் குழந்தைகளை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள அதீத முயற்சி செய்வார்கள். இது ஒருதலைபட்சமான நடத்தை, குரூரமானது என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அடிப்படையில் பெண்ணுக்கு, தன் புகுந்த வீட்டில் இருக்கும் பாதுகாப்பற்ற நிலையே இவ்வித நடவடிக்கைக்குக் காரணமாகும்.

புகுந்த வீட்டில் தனக்கே தனக்கென்று நம்பிச் சென்ற கணவனே தன்னைப் புறக்கணிப் பதாக, தன் நம்பிக்கைக்கு முழுமையற்றவனாக மாறிவிட்டதாக பெண் நினைத்து விட்டாலோ, அல்லது அப்படிப்பட்ட சூழலே நிஜத்தில் இருக்கும்போதும் பெண் கடைசி யாக கையில் எடுக்கும் ஆயுதம்தான் குழந்தை. தன்மூலம் உயிர்பெற்று வளரத் தொடங்கிய அந்தக் குழந்தையே இருவருக்கும் ஆதாரம் என்றாலும் பெண், முழுக்க முழுக்க தன் நிலையை ஆதரிக்கும்படி குழந்தையை தயார் செய்ய நினைக்கிறாள். சில நேரங்களில் உண்மையான காரணங்களோடு இச்செயல் நடைபெற்றாலும், பல நேரங்களில் இது வெறும் ஈகோ விளையாட்டாகவே மாறிவிடுகிறது.

வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் மனைவி தன்னுடைய குழந்தைகளிடம் கணவனைப் பற்றிய குறைகளை, பெரிய மனிதர்களிடம் சொல்வதுபோல் சொல்லிக் கொண்டே இருப்பாள். யுத்தக் காலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தந்தை என்று சொல்லிக் கொள்வதற்கான எந்தத் தகுதியுமே இல்லாத ஒரு நபராக அந்தக் குழந்தை தன் தந்தையை நினைத்துக் கொள்வதற்கான எல்லா சாத்தியங்களும் அந்தக் குற்றப்பத்திரிக்கையில் நிச்சயம் இருக்கும். குடும்பமே தன்னுடைய தியாகத்தாலும், விட்டுக் கொடுத்தலாலும் மட்டுமே இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக இருக்கும் பெண் பேச்சின் சாராம்சம்.
தன் கணவனைப் பற்றிய எல்லா கீழ்மைகளையும் சொல்லி முடித்தப் பின், இவ்வளவை யும் சகித்துக் கொண்டு ஏன் தான் உயிர் வாழ்கிறோம் என்றால், உனக்காகத்தான்… நீயா வது என்னைப் புரிந்து கொண்டு கடைசி வரை மரியாதையாக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடனும், ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து விட்டு, அழுகையை மெல்ல குறைப்பார்கள். மரியாதையாக வைத்துக் காப்பாற்றுவது என்றால் என்ன என்று தெரியாமல், குழந்தை முழித்துக் கொண்டிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அந்தக் குழந்தைக்குத் தெளிவாக புரிந்துவிடும் அப்போது, தன் அப்பாவை ஆதரித்து அந்த நேரத்தில் எதுவும் பேசி விடக்கூடாது என்று.

இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். தங்கள் கணவனின் குறைகளை, குடும்பத்தில் உண்டாகும் சின்ன சின்ன முரண்பாடுகளையும்கூட கோபத்தில் கண்ணில் படுபவர் களிடம் கொட்டிவிடுவார்கள். தற்காலிக மன ஆறுதலாக இருந்தாலும், மற்றவர்களிடம் சொல்லப்படும் கருத்துக்கள் இருவருக்குமான அன்னியோன்யத்தை குலைக்கும் செயல் என்பதை ஆத்திரத்தில் மறந்து போவார்கள்.

இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் முன்னால்தான் பிரச்சனைகளைப் பேச ஆரம்பிப் பார்கள். குறிப்பாக சாப்பிடும் நேரத்தில். மிகப் பெரிய ரசாபாசங்கள் நிகழ்ந்துவிடும் நேரமது. சமைத்த சாப்பாடு ஆறிபோய்க் கிடக்க சண்டை சூடாகி, கை கலப்பாகி, வீடு களில் தட்டுக்கள் பறந்து, மூலைக்கொருவர் அழுது கொண்டு படுத்திருப்பார்கள். குழந் தைகள் வெறும் வயிற்றோடு படுத்து, தூக்கத்தில் அலறி எழுந்து அழுதபடி தூங்கு வார்கள்.

வீட்டில் குழந்தைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வாய்ப்புகளையும் முயற்சி களையும் பெரும்பாலும் ஆண்கள் மேற்கொள்ள இயலாது. காரணம் மனைவியுடன் சுமூக உறவு இருக்கும் நேரங்களில் மட்டுமே ஆண் தன் வீட்டில் சகஜமாக நடமாட முடியும். ஒரு வீட்டின் மொத்த இடமும் பெண்ணின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆண் தன்னுடைய வசதிக்காக வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நடமாடுவது, சண்டை நடக்கும் நேரத்தில் பெரும் பலவீனமாக இருக்கும். வீட்டில் நடைபெற வேண்டிய எல்லா செயல்களுக்கும் மனைவியின் உதவி வேண்டியிருக்கும். மனைவி யுடன் சண்டை என்றால் வேறு வழியே இருக்காது ஆண்களுக்கு.

மனைவி கோபத்தில் இருந்தால் வெளியில் சாப்பிட்டுவிட்டு, தாமதமாக வீட்டுக்கு வந்து சத்தமில்லாமல் அறைக்குள் முடங்கிக் கொள்வார்கள். பிள்ளைகளுடனும் பெரும் நெருக்கத்தை, மனைவி இல்லாத நேரங்களில் ஆண்கள் கோருவதில்லை. தன் மனைவி யைப் போல் வெளிப்படையாக பிள்ளைகளிடம் ஆதரவு வேண்டி நிற்கும் அளவிற்கு பலவீனமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் ஆணுக்கு ஈகோ இடம் கொடுக்காது. யாரிடமும் இறங்கிப் போக வேண்டிய தேவை தனக்கு இல்லை என்ற வறட்டுப் பிடிவாதத்தைக் குடும்பங்களிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பதால், ஆண் அந்தக் கெத்திலிருந்து இறங்க மறுப்பான்.

எல்லாவற்றையும்விட மிக இரக்கமான, பரிதாபமான, அன்பான ஓர் இடம் குடும்பத்திற் குள் இருக்கிறது. ஆண்களாலேயே உணர முடியாத, ஆனால் ஆணின் இயல்பானது அந்த குணம். ஆண் தன் மனைவியின் வழியாகவே குடும்பத்தின் எல்லா உறவுகளையும் அணுகுகிறான். பல நேரம் மனைவி சொல்லும், வெளிப்படுத்தும் பிம்பங்களே ஆணுக் கானது. ”பையன், உங்கள மாதிரியேங்க, பிடிவாதம் அப்படியே, பாப்பா  இருக்கா ளே …  ப்பா… அப்படியே உங்க பெரிய அக்காதான், யாருக்கும் ஒன்னும் கொடுக்கக் கூடாது… வாங்கி வச்சுப்பா” என்று சொல்வதாகட்டும், கணவன் இல்லாத நேரத்தில், ”அப்பா வந்தார்ன்னா என்ன நடக்கும்னு தெரியும்ல” என்று தன்னைப் பற்றி மனைவி உண்டாக் கும் பிம்பத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகட்டும்… ஆண்களைப் பார்க்க பாவமாக இருக்கும் சில நேரங்களில். மனைவி கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது, குடும்பத் தில் மற்ற உறவுகளை அணுக முடியாமல் ஆண் தடுமாறிப் போவது என்னவோ பரிதாபத்திற்குரிய உண்மைதான்.
இன்னும் பின்னோக்கி யோசித்துப் பார்த்தாலும், ஆண் தன் இளம் பிராயத்தில் குடும்பத்தி னரை அணுக தன் தாயை ஒட்டி இருந்தது புரிய வரும். ஆனால், தாய்க்குப் பிள்ளை என்ற இடம், மனைவிக்குக் கணவன் என்ற இடத்திற்கு அருகில்கூட வரமுடியாதல்லவா?

ஆண் தன் மனைவி, பிள்ளைகளிடம் பலவீனமான உறவை, அல்லது நெருக்கத்தைக் காட்ட முடியாமல் போனாலும், அவனிடம் குவிந்திருக்கும் அதிகாரம் எல்லாரையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். குடும்பத்தின் பொருளாதாரம், சொத்துரிமை போன்ற வலிமையான விஷயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருப்பதால் ஆண் எதற்கும் அஞ்சுவதில்லை. குடும்பத்தின் அச்சு தன்னிடம் இருப்பதால் யார் வந்தாலும் போனாலும் உறவுகளின் பிரிவுகள் கொடுக்கும் துயரத்தை ஆண் கடந்துபோக நினைக்கிறான். அல்லது உறவுகளைப் பிரிந்து போகவும் தயாராக இருக்கிறான்.

மனைவிக்கு அழுகையும் அன்பும் இயலாமையும் ஆயுதம் என்றால், கணவன் அதிகாரம் மிக்க இந்த ஒற்றை ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். அன்புக்கும் அதிகாரத் துக்கும் இடையில் அகப்பட்டு வளரும் குழந்தைகளின் நிலையை, இருப்பைப் பற்றி நம் குடும்பங்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கின்றனவா? குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமான ஆடை வேண்டும் என்பதையே இந்த நூற்றாண்டில் உணர்ந்தவர்கள் தானே நாம்? நாமெப்படி குழந்தைகளுக்கு என்று தனித்த மன உலகம் இருப்பதை அறிவோம்?

அ. வெண்ணிலா