June 21, 2021

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் புதிய இணையதளம்!

பெண்கள் நலன் குறித்த அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இணையதளத்தை நேற்று (ஜனவரி 2) அறிமுகம் செய்து வைத்தார். இதில் பெண்கள் நலம்பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் வயது அடிப்படையில் நான்கு பிரிவினராகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் வயது, மாநிலம், எந்தப் பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

வன்முறைகள், சைபர் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் பெண்கள் தங்களைப் பாதுகாத்து   கொள்வது குறித்த வழிமுறைகளும் இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இலவச சட்ட உதவி பெறுவது குறித்தும், மாநிலங்களில் உள்ள பெண்கள் உதவி மைய எண்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் வழங்கும் திட்டங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் குறை தீர்க்கும் பகுதியும் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்களின் வேலைவாய்ப்புக்கான தேடலும் இதில் உள்ளது. நேர்காணல்கள், முதலீடு, சேமிப்பு ஆகியவை குறித்த அறிவுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொதுவான நலத்திட்டங்கள் தாண்டி, ஊட்டச் சத்துக்கான குறிப்புகள், உடல் பரிசோதனைக்கான பரிந்துரைகள் ஆகியவையும் இதில் உள்ளன. இவை தவிர வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கும் வழிமுறைகள், பாஸ்போர்ட் பெறுவது ஆகியவை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது