June 24, 2021

பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள உதவும் ஷாக்கிங் கிளவுஸ்

நம் நாட்டில் மட்டுமல்ல.. உலகம் முழுக்க 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப் பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.
shock gloves feb 129


இன்றைய சூழ்நிலையில் பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப் போடு பணி செய்ய முடிகிறதா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர். இந்நிலையில் பெண்களிடம் ‘செக்ஸ்’ சில் மிஷத்தில் ஈடுபடும் ஆண்களை வீழ்த்த ‘ஷாக்கிங் கிளவுஸ்’ என்ற புதிய ஆயுதத்தை பள்ளி மாணவன் தயாரித்து உள்ளார்.அந்த மாணவர் பெயர் நிரஞ்சன் சுதார். 17 வயதான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் அகோர் அரசு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறான்.

கலைத்துறை பாடம் எடுத்துள்ள நிரஞ்சன் சுதாருக்கு மின்கருவியை கையாள்வதிலும், எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். டெல்லியில் சமீபத்தில் நடந்த மாணவி நிர்பயா கொலை சம்பவம் நிரஞ்சன் மனதை பெரிதும் பாதித்ததாம். இதையடுத்து காம கொடூரர்களிடம் இருந்து பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

அவரது 2 ஆண்டு ஆராய்ச்சியில் உருவானது தான் ‘ஷாக்கிங் கிளவுஸ்’ 150 கிராம் எடையில் கையுறை போன்ற வடிவ மைக்கப்பட்ட இதனுள் சிம்கார்டு, சி.சி.டி. கேமிரா மற்றும் 3.4 வால்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி போன்றவை பொருத்தப்பட்டு உள்ளது. தனியாக செல்லும் பெண்கள் இந்த கையுறையை அணிந்து கொண்டால் போதும். ஆண்கள் யாராவது அவர்களிடம் வம்பு செய்து தொட்டால் ஷாக்கிங் கிளவுசில் உள்ள 3.4 வால்ட் மின்சாரம் 240 வால்ட் மின்சார சக்தியாக மாறி அவனை வீழ்த்திவிடும்.அதோடு அதில் உள்ள கேமிரா அந்த ஆண்களை படம்பிடிக்கும். அந்த பெண் இருக்கும் இடம் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தெரியவரும்.இந்த கருவியை தயாரிக்க 500 ரூபாய்தான் செலவானதாக மாணவன் நிரஞ்சன் சுதார் தெரிவித்தார் என்பது அடிசினல் தகவல்.