September 24, 2021

பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை

நாடு முழுவதிலுமுள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இந்த கம்பெனிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
nov 5 Cyclone_

nov 5 - 5 kg cylinder
பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 5 பெருநகரங்களில் உள்ள குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நேற்று வெளியிட்டார்.

இதன்படி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இந்த கம்பெனிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.

மேலும் பிற நிறுவனங்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகளிலும் இந்த சிலிண்டர்களை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன. இதற்காக அந்த பங்க்குகளில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் மானியமற்ற விலையில் அதாவது மார்க்கெட் விலைக்கே விற்பனை செய்யப்படும். அதன்படி முதல் முறை வாங்கும் போது சிலிண்டருக்கு ரூ.1000 மற்றும் வரியும், ஒரு ரெகுலேட்டருக்கு 250-ம் வரியும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகை, அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுடன் இந்த சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம். சரியான அடையாள அட்டை மற்றும் முகவரிச்சான்று இல்லாதவர்கள் சிலிண்டர் பெற முடியாது. இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும், சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி டெல்லி, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.