March 27, 2023

பெங்களூரு ; சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான்!

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, ”சிறையில் சசிகலாவுக்கு நவீன சமையல் அறை, பிரத்யேக மருத்துவ வசதி, பணிப்பெண்கள், பார்வையாளர், யோகாசன அறை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சசிகலா தரப்பு டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது”என புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சசிகலா சிறையில் சீருடை அணியாமல் வலம் வருவது, அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பது, அதிக அறைகளை பயன்படுத்துவது போன்ற வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறை முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

சிறையில் 3 நாள் ஆய்வு

வினய்குமார் தலைமையிலான அதிகாரிகள் 3 நாட்கள் சிறைக்குச் சென்று பல கட்டமாக ஆய்வு செய்தனர். சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, வருகை பதிவேடு உள்ளிட்ட வற்றையும் ஆய்வு செய்தனர். சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் 30-க்கும் மேற்பட்ட கைதிகளை விசாரித்தனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த விசாரணை தொடர்பான அறிக்கையை உயர்நிலை விசாரணைக்குழு கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து உள்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ” பெங்களூரு மத்திய சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான உயர்நிலை விசாரணை குழுவின் அறிக்கை வந்துள்ளது. முறைகேடு நடந்தது உண்மைதான் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த முறை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகு, ராமலிங்க ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இல்லையென்றால் முதல்வர் சித்தராமையாவுடன் கலந்து பேசிவிட்டு, அவர் அறிவிப்பார். இதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

இந்த விவகாரம் கர்நாடக சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.