March 25, 2023

பூமிக்கு நாச காலம்தான்!

இந்த ஆண்டு மே 9-ஆம் நாள் சந்தடியின்றி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய விஷயமல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியது கரியமில வாயு. அன்றைய தினம் வளிமண்டலத்தில் அதன் செறிவு, மில்லியனில் 400 பங்கு என்ற மைல் கல்லைத் தாண்டியது. அத்துடன் அது நின்று விடுமென்று தோன்றவில்லை. அது உயர உயர உலகத்துக்கு ஊறுதான்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணைக் குப்பைக் கிடங்கின் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு 515 – 399 ஆகியுள்ளது. சமீபகாலமாகவே கரியமில வாயுவின் வளிமண்டலச் செறிவு அதிகரிக்கும் வேகம் கூடிக் கொண்டேயிருக்கிறது.

1958, மார்ச்சில் சார்லஸ் கீலிங் என்ற வானிலை அறிவியல் ஆய்வர் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவை அளவிடத் தொடங்கியபோது, முதல் பத்தாண்டுகளில் அது ஆண்டுக்கு மில்லியனில் அரைப் பங்கு என்ற அளவில்தான் உயர்ந்து வந்தது.
sep 2 - c o 2
அப்போது உலகின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் விகிதம் இன்றைக்கிருப்பதைவிட மிகவும் குறைவாக இருந்தது. அதன் காரணமாக வளிமண்டலத்தில் கலக்கப்படும் கரியமில வாயுவின் அளவும் குறைவாக இருந்தது.

1990-களின் பிற்பகுதியில்தான் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு வேகமாக உயரத் தொடங்கியது. சீனாவிலும், இந்தியாவிலும் புதைபடிவ எரியன்களை எரிக்கும் தொழிற்சாலைகள் அதிகரித்ததை இதற்குக் காரணமாகக் காட்டுகிறார்கள். இது எதனால் ஏற்பட்டது என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை.

முதலாளித்துவ நாடுகள் தத்தம் சுற்றுச்சூழல்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆற்றல் மற்றும் தொழிலாளர் கூலிச் செலவைக் குறைக்கவும் வளிமண்டலத்தை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை சீனாவில் கொண்டு போய் மறு நிர்மாணம் செய்தன. ஆனால், அவை தொழில்துறைக் கழிவுகளையும், மாசுகளையும் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்ப உத்திகளையும், அதற்கான கருவிகளையும் வளரும் நாடுகளுக்கு அளிக்கவில்லை.

இதற்கு அமெரிக்கா ஒரு முன்னோடி. அது தன் வயல்களிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பை வெளியே எடுக்காமல் அரபு நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்து கொள்கிறது. அதற்காகும் பணச் செலவை அது அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று ஈடுகட்டிக் கொள்கிறது. இன்னும் நூறாண்டுகளுக்குள் அரபுகளின் எண்ணெய் வயல்கள் வறண்டு போகும். அதன்பின் அமெரிக்காவிடமுள்ள எண்ணெய் வயல்களில் உற்பத்தியைத் தொடங்கலாம் என்ற ஒரு நீண்டகாலத் திட்டமிடலே இது.

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு வெகுவேகமாக உயர்ந்து ஆய்வர்களை அதிர்ச்சியுற வைத்தது. 2007-ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பொருளாதாரம் தளர்ச்சியுற்று தொழில் துறை தொய்வடைந்த போதும் புதைபடிவ எரியன்களை எரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கரியமில வாயுவின் அளவு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

தற்போது தொழிற்சாலைகளிலிருந்து ஆண்டுக்கு 32 பில்லியன் டன் அளவில் கரியமில வாயு வெளிப்படுகிறது. அத்துடன் காடுகள் அழிக்கப்படுவதால் மேலும் நான்கு பில்லியன் டன் கரியமில வாயு வளிமண்டலத்தில் கலக்கிறது. தொழில்துறைப் பசுங்குடில் வாயுக்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

மில்லியனில் ஒரு பங்கு என்பது எட்டு பில்லியன் டன். 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே பூமியும், கடலும் ஆண்டுக்கு 17 -18 பில்லியன் டன் கரியமில வாயுவை உட்கவர்கின்றன. ஆனாலும், கடந்த பத்தாண்டுகளில் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு ஆண்டுக்கு மில்லியனில் இரண்டு பங்கு என்ற அளவுக்கும் மேலாக உயர்ந்து வருகிறது.

தாவரங்கள் சூரிய ஒளியின் உதவியுடன் பகலில் கரியமில வாயுவை உட்கவர்ந்து தமது வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளைத் தயாரித்துக் கொள்கின்றன. உபரியான கரியமில வாயுவை இரவில் வெளியிடுகின்றன. பிற உயிரினங்கள் சுவாசத்தின்போது பிராண வாயுவை உட்கவர்ந்து கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.

தாவரங்களும் அவற்றை உண்டு வாழ்கிற உயிரினங்களும் அவற்றை வேட்டையாடி உணவாகக் கொள்கிற ஊனுண்ணி உயிரினங்களும் மிகப் பெருமளவில் கார்பன் சேர்மங்களாலான உடல்களைக் கொண்டவை.

அவை யாவும் மரித்து மண்ணோடு மண்ணாகிப் போகும்போது ஏராளமான கரியமில வாயு வெளியாகிக் காற்றில் கலக்கிறது. அது இவ்வாறு வளிமண்டலத்திலிருந்து உயிரினங்களால் உட்கவரப்பட்டுப் பின்னர் வளிமண்டலத்துக்கு மீண்டும் திரும்புவது கார்பன் சுழற்சி எனப்படும்.

இது ஒரு நீண்டகால நிகழ்வு. தற்போது மனிதச் செயல்பாடுகள் காரணமாக அதைவிட 20,000 மடங்கு அதிகமான கரியமில வாயு வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகிறது. அது கடல் நீரில் கரையும்போது கடல் நீரின் அமிலத்தன்மை அதிகமாகிக் கால்சியச் சேர்மங்களாலான பவளப்பாறைகளும் வேறு பல கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும்.

கரியமில வாயு வேகமாக வளிமண்டலத்தில் கலக்க, அதன் விளைவாக வளிமண்டல வெப்பநிலை உயரும். ஆனால் அதற்கேற்ப சுற்றுச்சூழலும் உயிரினங்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள போதுமான அவகாசமளிப்பதில்லை. உலகளாவிய அளவில் வேட்டையாடிகள் அவற்றின் இரைகள், பூக்கும் தாவரங்கள் மற்றும் அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் ஆகியவற்றின் வாழ்க்கைச் சூழல்கள் குலைக்கப்படுவதாக டெக்சாஸ் பல்கலையைச் சேர்ந்த கமில் பர்மேசன் என்ற ஆய்வர் கண்டறிந்திருக்கிறார்.

பறவைகள் பருவமடைவதற்கு முன்பே முட்டையிடத் தொடங்குகின்றன. சூழல் வெப்பநிலை உயர்வதால் உயிரினங்கள் நில நடுக்கோட்டை விட்டு விலகி தெற்கிலும் வடக்கிலும் உள்ள குளிர்ந்த பகுதிகளுக்கும் மலைப் பிரதேசங்களுக்கும் குடிபெயர்கின்றன. அதன் விளைவாக துருவப்பகுதிகளிலும் மலையுச்சிகளிலும் வசிக்கும் சுதேசி உயிரினங்களின் நடமாட்டப் பரப்பு குறைகிறது. அண்மைக்கால வானிலை மாற்றங்களுக்கு அவற்றின் பல சிற்றினங்கள், களப்பலியாகி முற்றாய் அழிந்து வருகின்றன.

மில்லியனில் 400 பங்கு கரியமில வாயு என்பது பாதுகாப்பான வரம்பைத் தாண்டியதாகும். மில்லியனில் 350 பங்குதான் பாதுகாப்பான வரம்பாக விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஜேம்ஸ் ஹான்சன் என்ற வானிலையியல் வல்லுநர் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவை அதற்கும் கீழே குறைத்தால் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனுள்ள உயிரினங்கள் வசிக்க ஏற்றதாயும், மனித சமூகக் கட்டமைப்புகளும் நாகரிகங்களும் செழித்து வளரும் வசதிகளும் வாய்ப்புகளும் உள்ளதாயும் பூமி நீடிக்க முடியும் என 2008-ஆம் ஆண்டிலேயே எச்சரித்துவிட்டார்.

உலகளாவிய அளவில் இக் கருத்தைப் பரப்ப 350. ஓ.ஆர்.ஜி. என்ற இயக்கம் முயன்று வருகிறது. வளிமண்டலத்தின் கரியமில வாயுச் செறிவு வளிமண்டல சராசரி வெப்பநிலையிலும் அதன் மூலமாகப் பூமியின் வானிலையிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் உலகளாவிய அளவில் நிகழும் கார்பன் சுழற்சியைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிற டேவிட் ஆர்ச்சர் என்ற பேராசிரியர் தென் துருவத்தில் வளிமண்டலக் கரியமில வாயுச் செறிவுக்கும் சுற்றுச் சூழல் வெப்ப நிலைக்குமிடையில் ஒரு காரணகாரிய உறவு உள்ளதாகக் கூறுகிறார்.

34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளிமண்டலக் கரியமில வாயுச் செறிவு குறைந்தபோது தென் துருவத்தில் பனிமலைகள் உருவாயின. மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது கிட்டத்தட்ட மில்லியனில் 240 பங்கு அளவுக்குக் குறைந்தபோது வடதுருவத்திலும் பனி மலைகள் உருவாகிற அளவுக்கு வளி மண்டல வெப்பநிலை வீழ்ச்சியடைந்தது.

இப்போது வளிமண்டல வெப்பநிலை உயர்கிறபோது வடதுருவப் பனிமலைகள்தான் முதலில் உருகத் தொடங்கின. அவை முழுவதும் கரைந்து மறையுமானால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் வானிலைகளில் கடுமையான பாதக விளைவுகள் ஏற்படுவது உறுதி.

கடந்த இரண்டரை மில்லியன் ஆண்டுகளில் பலமுறை பூமி பனியுகங்களுக்கு இலக்காகி மீண்டிருக்கிறது. அதனால், கரியமில வாயுச் செறிவை மேலும் அதிகரிக்க அனுமதிப்பது ஆபத்து. வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்படியே தங்கி விடுகிறது. கரியமில வாயு வளிமண்டலத்தில் மேலும் சேராமல் இக்கணமே முற்றிலுமாகத் தடுத்துவிட்டால்கூட வானிலையில் ஏற்பட்டுவிட்ட சேதம் இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கு நீடிக்கும்.

இன்று உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் கலக்க விடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்திலிருக்கிறது. இந்தியா கையொப்பமிட்டுள்ள கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின்படி, உலகத்திலுள்ள எந்த நாடும் தரைக்கடியிலுள்ள நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளில் 80 சதவீதத்தை வெளியே எடுக்கக் கூடாது. அப்போதுதான் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு செல்சியஸ் டிகிரிக்கு மேல் வளிமண்டல சராசரி வெப்பநிலை உயராமல் தடுக்க முடியும்.

இதற்கு எல்லா நாடுகளும் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் மூலங்களை முழு அளவில் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூமிக்கு நாச காலம்தான்! நாம் என்ன செய்யப் போகிறோம்?

கே.என். ராமசந்திரன்