September 17, 2021

புழல் ஜெயிலில் நந்தினி!

டாஸ்மாக் மூலம் மதுப்படுகொலைகள் செய்துவரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு “மண் வாரித் தூற்றும் போராட்டம்” (ஏப் 22) நடத்துவதற்கு சென்னை வந்த சட்ட கல்லூரி மாணவி நந்தினி, அவரின் தந்தை ஆனந்தன் இருவருமே, போராட்டத்திற்கு முன்தினம்(ஏப் 21) இரவு 7 மணிக்கு கைது செய்யப்பட்டு சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்(15 நாள் சிறை):நேற்று(ஏப் 23) அன்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியம் ஆகியோர் நந்தினியைப் புழல் சிறையில் சந்தித்தனர்.
nandhi in jail
5 அடி தூரத்தில் இருபக்கமும் கம்பிவலைக்கு பின்னர் நின்றுகொண்டு, சுமார் 20 நிமிடம் பேசினோம்.
முகநூலில் ஏராளமான நண்பர்கள் உனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். “.. நன்றி. இதுதொடக்கம்தான் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது”

போலீஸ் தொந்தரவு ஏதேனும் உள்ளதா ? “… இல்லை. நான் நலம். எந்தவித தொந்தரவும் இல்லை. சிறைக்கு வருவது இது இரண்டாவது முறை என்பதால் பழகிவிட்டது. சமூகத்திற்காகப் போராடுவோர் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும்”

பிரெட், பிஸ்கெட், மாற்று உடைகள் கொடுத்தபோது, அடுத்தமுறை உணவெல்லாம் எடுத்துவரவேண்டாம். இங்கு தரப்படும் உணவே போதுமானது என்றார்.

மே 3 அன்று செமஸ்டர் தேர்வு உள்ளதே, தேர்வு எழுத சிறப்பு அனுமதி கேட்கக் கூடாதா என்று கேட்டோம். ” மன்னிப்புக் கடிதம் அல்லது கருணை மனு எழுதித் தர கேட்பார்கள்.. மன்னிப்பு/கருணை கேட்க விருப்பமில்லை. அடுத்தமுறையில் எழுதிக் கொள்கிறேன்”

இயக்க நண்பர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறாய் “.. மதுக்கடைகள் மூடும்வரை போராட வேண்டும். இப்போதைக்கு NOTAவில் வாக்களியுங்கள்”

போராட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லையே என்று பலர் வருத்தப்படுகிறார்கள் என்றபோது உடன் வந்த பதில் “….வருத்தப்பட்டது போதும். களத்திற்கு வாருங்கள்”

மாற்று உடை இல்லாமல் சிறைக்கு வந்தாயே? எப்படி 2 நாள் சமாளித்தாய் ? “.. உடனிருக்கும் சிறைத்தோழிகள் தங்கள் உடைகொடுத்து உதவினார்கள்”

அப்பாவிற்கு உன் செய்தி. “… நான் தளரமாட்டேன், எதையும் எதிர்கொள்வேன் என்று அவருக்குத் தெரியும். அவர் சொல்லித்தந்ததுதானே. ஆகையால், சிறப்புச் செய்தி ஒன்றுமில்லை”

உன் தாய்க்கு நீ சொல்ல விரும்பும் செய்தி ? . “நான் நலம். பெயில் எடுக்க முயற்சிக்க வேண்டாம்”

நந்தினியின் மன உறுதி கண்டு, பாரதி பாடிய புதுமைப்பெண் இவள்தானோ என்று வியந்தபடியேயும், இவளின் மன உறுதிக்கு உரமிட்ட அப்பா ஆனந்தன் அவர்களின் தியாகத்தை நினைந்தபடியேயும் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறினோம்.

”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”