August 12, 2022

புளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்!

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை என்று பல வித சோஷியல் மீடியாக்களில் வந்த செய்தியை புறக்கணித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நேர்ந்த கொடுமை ஹாட் டாபிக்-காகி விட்டது.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர். முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் “தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா” அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது என்பது தனிக் கதை.

ஆனால் நேற்று நடந்த சம்பவத்தைக் கேளுங்களேன். எழுத்தாளர் ஜெயமோகன் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்துவருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் தோசை மாவு வாங்கி வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளார். பின்னர் வீட்டில் சென்று மாவு பாக்கெட்டைப் பார்த்தபோது புளித்து இருந்துள்ளது. எனவே அந்த கடைக்கு சென்று தோசை மாவு கெட்டுப்போனதாகப் புகார் கூறியுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் செல்வம் என்பவர் ஜெயமோகனிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம் அங்கும் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில், ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். புகாரின் பேரில் நேசமணிநகர் போலீஸார் கடைக்காரர் செல்வத்தைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இப்படி புளித்த மாவுக்காக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர், ‘இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார். நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன், பெரிய குடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான்.

என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும், மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர் தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன’ என்று தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.