September 18, 2021

புல்லரின் தூக்கு ஆயுள் தண்டனையானது – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

காலிஸ்தான் பயங்கரவாதி தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.முன்னதாக புல்லரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைப்பதில் ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
BHULLAR_and SC
டெல்லியில் கடந்த 1993ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 9 பேர் இறந்தனர். இது தொடர்பாக காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி புல்லர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் செய்த இறுதி மேல் முறையீடு மனுவை, 2002ல் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், புல்லர் தனது தண்டனையை குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், அது 8 ஆண்டுக்கு பின்னர் நிராகரிக்கப்பட்டது.இதற்கிடையே, கருணை மனுவை நிராகரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் ராஜிவ் காந்தி கொலையாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையே காரணம் காட்டி புல்லரின் தூக்கை நிறைவேற்றக் கூடாது என்றும் அவரது தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் அவரது மனைவி சுப்ரீம் கோர்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 31ம் தேதி புல்லரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

தொடந்து இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘புல்லரின் தூக்கை குறைக்கும்படி டெல்லி ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதால் அவரை தூக்கிலிட மாட்டோம்’ என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும், ஆளுநரின் பரிந்துரை மீது மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்தது. இதில், தலையிட்ட உச்ச நீதிமன்றம், புல்லரின் கருணை மனுவை ஆளுநர் ஏற்றிருப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு வந்த போது புல்லரின் மனைவி நவ்னீத் கவுரின் கோரிக்கையை ஏற்று தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இன்று தீர்ப்பளித்துள்ளது.புல்லரின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க காலதாமதமானதை காரணம் காட்டி கோர்ட் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.