September 27, 2021

புறம்போக்கு என்னும் பொதுவுடைமை! – திரைப்பார்வை

புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படம் பார்த்தேன். நல்ல அரசியல் படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன. கண்டிப்பாக இந்த படத்தில் ஹீரோ மின்சாரத்தை நிறுத்திவிட்டு சில்லறைக்காசுகளை கீழே சிதறவிட்டு எதிரிகளை பந்தாட மாட்டான். கம்யூனிசத்துக்கு அபத்தமாக இட்லி உவமை தரமாட்டான் என்று நம்பி சென்றேன். காரணம் ஜனநாதன். பேராண்மை படத்தில் கிளைமாக்சில் கணபதிராம் என்ற பிராமண மேலதிகாரி வருவார். தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பற்றியதற்காக இந்திய ராணுவத்தின் சார்பில் விருது வழங்குவார்கள். கணபதிராம் மேடையில் நிற்க ஜெயம்ரவி மேடையின் கீழே நிற்பார். அந்த ஒரு காட்சி போதும்.
porampokku
ஓர் இஸ்லாமிய பெண்ணை உடன் படிக்கும் உயர்ஜாதி பெண்கள் எப்படி தங்களை விட கீழாக நடத்துகிறார்கள் என்பதை நுட்பமாக சித்தரித்த காட்சிகள் என்று அந்த படம் முழுக்க மிக தெளிவாக தனது அரசியல் பார்வையை வைத்திருப்பார். ஜனநாதனின் முந்தையை இரண்டு படங்களை விட இந்த படத்தில் இன்னும் நுட்பமான வர்க்க அரசியலும், பொதுவுடைமை கருத்தும் வருகிறது.

சில இடங்களில் அரசியல் குழப்பங்கள் வருகின்றன. ஆனால் அதை ஜனநாதனின் லட்சியக்கனவு என்றுதான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். படத்தில் ஒரு காட்சியில் தமிழ் தேசியத்துக்கு போராடும் ஒருவர் சிறையில் இறந்துவிடுவார். அவர் இறக்கும்போது அவரை பற்றி சக கைதிகளிடம் தோழர் பாலு சொல்லும்போது வர்க்க வேறுபாடுகளை புரிந்துக் கொள்ளாமல் எந்த தேசிய இன போராட்டங்களும் சாத்தியமில்லை என்பார். தமிழ் தேசியமும் வர்க்க வேறுபாட்டை எதிர்த்து போராடும் இடதுசாரிகளுக்கும் எந்த புள்ளி ஒன்று சேர்க்கிறது என்று தெரியவில்லை.

ஈழ விடுதலை விஷயத்தில் இடதுசாரிகளின் கள்ள மவுனம் நாம் பார்த்ததே. ஆனாலும் வர்க்க வேறுபாடுகளை புரிந்துக்கொள்ளாமல் நாம் எந்த விடுதலை போராட்டத்தை பற்றியும் பேசமுடியாது என்பதை மிக தெளிவாக இரண்டு காட்சிகளில் வேறு வேறு அர்த்தத்தில் பாலுவே சொல்வதாக வசனம் வருகிறது. ஆர்யாவின் மோசமான வசன உச்சரிப்பினால் அவர் வரும் காட்சியில் எல்லாம் இடம்பெறும் கூர்மையான வசனங்களை சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருந்தது வேறு விஷயம்.

ஒரு நடுத்தர இளைஞன். அன்றாட செய்திகளில் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லாத, அரசியல் ஆர்வமற்றவன். நடுத்தர வர்க்கத்துக்குரிய நீதி,நியாயம், மனசாட்சிகளுடன் போராடும் எமலிங்கம். இரண்டாவது அதிகாரவர்க்கம் என்ன சொல்கிறதோ அதை செய்யும் உய ர்வர்க்கத்திலிருந்து படித்து காவல்துறை உயரதிகாரியாக வேலைக்கு வரும் மெக்காலே என்ற இன்னொரு இளைஞன். மூன்றாவதாக தோழர் பாலு என்ற இன்னொரு இளைஞன். கம்யூனிஸ்ட். இவர்களுக்குள் நடக்கும் ஒருவித முரண் போராட்டம் படத்தின் ஊடாக இழையோடிக் கொண்டே இருப்பது படத்தின் பலம்.

ஒரு காட்சியில் ஜெயிலில் சிறைக்கைதிகளுக்கு தினசரிகளை வழங்கும் அதிகாரிகள் அதில் பல செய்திகளை சென்சார் செய்து அனுப்புவார்கள். அதை அப்படியே அனுப்பு என்று மெக்காலே சொல்வான். அதுபோல வயதான கைதிகள் இருக்கும் செல்லை மருத்துவமனை பிரிவுக்கு அருகில் வைக்க வேண்டும் என்பான். அதே மனசாட்சி உள்ள மெக்காலேதான் எமலிங்கத்துக்கு தூக்குபோடும் வேலை பிடிக்கவில்லை. அதனால் வரவில்லை என்று இன்னொரு அதிகாரி சொன்னதும் என்னோட கேரியரே இந்த ஜெயில் அதிகாரி வேலையிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்வான்.

கிளைமாக்சில் பத்தாம் தேதி போட வேண்டிய தூக்கி ஒன்பதாம் தேதியே போட முடிவெடுப்பான். மெக்காலேவுக்கு முழுக்க முழுக்க உத்தரவு போடுவது அவனது மேலதிகாரிகள்தான். எங்கேயோ நரைத்த பிரெஞ்ச் தாடி வைத்துக்கொண்டு (அவர் வரும் காட்சியில் பின்னணியில் டெல்லி செங்கோட்டையின் படம் சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள்) அமர்ந்தபடி ஆட்டுவிப்பவர்களின் பொம்மைகள்தான் மெக்காலே போன்ற அதிகாரிகள். இதுதான் எல்லா கார்பரேட் கம்பெனிகளிலும் நடக்கிறது.

இன்னொருபுறம் அதிகாரத்துக்கு எதிராக போராட வழியின்றி உள்ளுக்குள் குற்றவுணர்வுடன் போராடும் எமலிங்கம் போன்ற நடுத்தர வர்க்க ஆட்கள். பைத்தியமாக மாறுவதை தவிர வேறு வழியில்லை.

அம்மன் சிலை முன்னால் தூக்குப்போட முயற்சிக்கும் எமலிங்கம் பெண்குரல் கேட்டு யார் அம்பாளா பேசியது என்பான். பராசக்தி படத்தின் உயிரோட்டமான அந்த காட்சி இத்தனை வருடங்கள் கழித்து இன்னுமும் மக்களால் நினைவூட்டப்பட்டு ரசிக்க வைக்கிறது என்பதை அரங்கில் எழுந்த கைதட்டல்கள், சிரிப்பால் உணரமுடிகிறது.

படங்களில் நிறைய சமரசங்கள் தெரிந்தாலும் (உதாரணம்:- காஷ்மீர் வரைக்கும் வந்துட்டீங்க. பனி பெய்யுது. கால்ஷீட் இருக்கு. ஒரு குத்து டான்ஸ் போட்டுட்டு போங்க ஆர்யா) ஜனநாதன் போன்றோர் நமக்கு தேவை. கம்யூனிஸ்ட்டுகளை அழகாகவும் தொழில்நுட்பம் ரீதியில் பிரமாண்டமாகவும் காட்டியுள்ளார்கள். இதுபற்றி ஒரு தோழர் விசனப்பட்டார். எத்தனை நாள்தான் தமிழ்சினிமாவில் உங்களை சவரம் செய்யாத தாடியுடன் ஜிப்பா,தோளில் தொங்கும் ஜோல்னாபை, மூக்குக்கண்ணாடியுடன் காட்டுவார்கள். நீங்களும் லீ ஜீன்சும், டெர்பி சட்டையும் அணிந்து தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாமா? உதாரணம் சாரு மஜூம்தார் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் பெயரை வைத்துக்கொண்டு எழுதும் எங்கள் தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைத்தரத்தை பாருங்கள் என்றேன். இன்றைய நிலையில் குறைந்தபட்ச சமரசத்துடன் இயங்குபவர்களை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஒரு தூக்குப்போடும் அதிகாரி. தூக்குத்தண்டனை நிறைவேற்றும் ஹேங்மேன் இரண்டு பேரை மட்டும் அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களை மட்டும் மையப்படுத்தி ஒரு எளிய கதை பின்னியிருந்தால் இந்த படம் வேறொரு தளத்துக்கு சென்றிருக்கும்.

விநாயக முருகன்