October 20, 2021

புனித நூல்களின் பெயரை பயன்படுத்தி பொருட்களை விற்பதா? சுப்ரீம் கோர்ட் தடை!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால் பாபு பிரியதர்ஷி என்பவர், தான் தயாரிக்கும் ஊதுவத்தி பாக்கெட் மற்றும் நறுமணப் பொருட்களுக்கு ‘ராமாயண்’ என்ற பெயரை வணிக உரிமைக்குறியீடாக பயன்படுத்த விண்ணப்பித்தார். அதற்கு எதிராக அம்ரித்பால் சிங் என்பவர், அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையிட்டார். புனித நூல்களின் பெயரை வணிக உரிமைக்குறியீடாக பதிவு செய்யக்கூடாது என்று அவர் கூறினார். அந்த வாரியமும் அதை ஏற்றுக் கொண்டு தீர்ப்பு அளித்தது.
court 26
அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் லால் பாபு பிரியதர்ஷி மேல்முறையீடு செய்தார். அதில், புனித நூல்களின் பெயரை பயன்படுத்த சட்டம் தடை விதிக்கவில்லை என்றும், இதனால் இந்துக்களின் மனம் புண்படுவதாக கூறு வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகய், ஆர்.கே.அக்ரவால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரடி தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் அளித்த அந்ந்தத் தீர்ப்பில்,”குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப், ராமாயணம் போன்ற எண்ணற்ற புனித மற்றும் மத நூல்கள் உள்ளன. தங்களது பொருட்களை விற்பதற்கு அந்த நூல்களின் பெயரை வணிக உரிமைக் குறியீடாக பயன்படுத்தலாமா என்று கேட்டால், ‘கூடாது’ என்பதே எங்கள் பதில். அதை அனுமதிப்பது மக்களின் உணர்வுகளை அவமதித்து விடும்.‘ராமாயணம்’ என்பது மகரிஷி வால்மீகி எழுதிய நூலின் பெயர். அது இந்துக்களின் மத நூலாக கருதப்படுகிறது. எனவே, அதை வணிக உரிமைக்குறியீடாக பதிவு செய்வது, வணிக குறியீடு சட்டத்தின் கீழ் அனுமதிக்கத்தக்கது அல்ல.

மனுதாரர் ஏற்கனவே தனது ஊதுவத்தி பாக்கெட்டுகளில் ராமர், சீதை, லட்சுமணர் போன்ற படங்களை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், கடவுள்களை அவர் தனது ஆதாயத்துக்கு பயன்படுத்துவது தெளிவாகிறது. இதை அனுமதிக்க முடியாது. லாபம் சம்பாதிப்பதற்காக கடவுள்கள் மற்றும் புனித நூல்கள் மீது யாருக்கும் பிரத்யேக உரிமை அளிக்க முடியாது.”என்று நீதிபதிகள் கூறினர்.