September 25, 2021

புதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”! + நியூ டிரைலர்

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலு அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக் காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். இத்திரைப்பட, குறித்து பிலிம் நியூஸ் ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்த போது, “நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்டமான வெற்றி எம்.ஜி.ஆருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. அதனால் சிவாஜிகணேசனின் ஆதரவாளர்கள், அதுபோல சிவாஜிக்கும் பிரமாண்டமான ஒரு வெற்றிப் படம் வர வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். ஏற்கெனவே கட்டபொம்மன் கதையை சிறந்த முறையில் வடிவ மைத்து சிவாஜி நாடக மன்றத்தார் நாடகமாக நடித்து பிரபலமாகியிருந்தது. சக்தி கிருஷ்ணசாமி எழுதிய அந்த நாடகத்தில் நடித்து வந்தார் சிவாஜி. மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா, இந்த நாடகத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.


அப்படி வெள்ளையனை எதிர்த்துக் குரல் கொடுத்த பாஞ்சாலங்குறிச்சி சிங்கமான வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை படமாக்க முடிவு செய்தார் பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலு. அவரே டைரக்ட் செய்யத் திட்டமிட்டார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியே சினிமாவுக்கும் எழுத வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். வழக்கமாக நாடகங்களில் எழுதப்படும் வசனங்களைப் போல் அல்லாமல், புதிய பாணியில் அவரது வசனங்கள் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தன. சிவாஜிக்கு மட்டுமல்ல தமிழ் திரை உலக வரலாற்றிலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சரித்திர சாதனைப் படமாக அமைந்தது. சிவாஜியின் புகழ் தரணி எங்கும் பரவியது.இன்னொரு சிறப்பு இந்தப் படத்தின் கதை ஆலோசனை குழுத் தலைவர் பொறுப்பை ம.பொ. சிவஞானம் அவர்கள் ஏற்றுப் பணிபுரிந்தார்.

இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பற்றி பல ருசிகர தகவல்கள் உண்டு. கட்டபொம்மன் நெல்லைச் சீமையில், பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்ந்த விடுதலை போராட்ட வீரன். கட்டபொம்மன் வாழ்ந்த, இடங்கள் பொட்டல் காடாக இருந்ததால் இப்படத்தை எங்கு எப்படிப் படமாக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருமுறை பார்லிமெண்டில் கே.டி.கே. தங்கமணியின் ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி டாக்டர் கேஸ்கர் பதில் அளிக்கையில், “”கட்டபொம்மன் வரலாற்றை யாராவது சினிமாவாக எடுத்தால், அரசு அவர்களுக்கு உதவிகளைச் செய்யும் என்று அறிவித்திருந்தார்.பி.ஆர். பந்துலு அதை நினைவில் கொண்டு, மத்திய அரசை அணுகினார். மத்திய அரசு ஜெய்ப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்படமாக்க அனுமதி கொடுத்ததோடு, இராணுவத்தின் குதிரைப் படைகளையும் தந்து உதவியது. திரைப்படத்தின் பெரும் பகுதிக் காட்சிகளை ஜெய்ப்பூரிலே படமாக்கினர்.

காதல் இல்லாமல் சினிமா முழுமை பெறாது என்பதால், அழகான ஒரு காதல் கதையை, பத்மினி ஜெமினி கணேசனுக்காக சிறப்பாக உருவாக்கி இருந்தார் பி.ஆர். பந்துலு. இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடலை ரசிக் காதவர்களே இருக்க முடியாது. அதுபோல போகாதே போகாதே என் கணவா பாடலும், மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டிய பாடல் காட்சிகளாகும்.

ஜெமினிகணேசன் நடித்த பாத்திரத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்ம னுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சிவகங்கை சீமை படத்தில் அவர் நடித்ததால், இப்படத்தில் நடிக்கவில்லை. கேவா கலரில் உருவாக்கப்பட்டு, லண்டர் போய் டெக்னிக் கலராக மாற்றி வெளியிட்டார்கள். பல ஊர்களிலும் 100 நாள் விழா கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்பட உலகின் பெருமையை உயர்த்தி இமயம் மாதிரி நிமிர்ந்து நின்றது.எல்லாவற்றிற்கும் முத்தாப்பு வைத்தது போல, 1960 ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்பிரிக்கா திரைப்பட விழாவில், சிறந்த நடிகர் என்ற உயர்ந்த பரிசை சிவாஜிக்கு பெற்றுத் தந்தது. அத்துடன் இசை அமைப்பாளர் ஜி. இராமநாதனுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்தது” என்றார்

இப்படி சாதனைப் படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தற்போதும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே , சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.