September 27, 2021

புதிய ஆட்சியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்!

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கி விட்டது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 7 தொடங்கி மே 12 அன்று தேர்தல் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கான தேர்தல் ஏப்ரல் 24 அன்று நிகழவிருக்கிறது. வாக்குகளின் எண்ணிக்கை மே 16. அதற்கு பிறகு மத்தியில் புதிய அரசு அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரை 2.3 கோடி பேர் புதிதாக வாக்களிக்கப் போகிறார்கள். இதனால் ஏற்படப் போகும் மாற்றத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறோம்.
Elections-2014
தேசிய அளவில் பா.ஜ.க.வும், தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மற்ற கட்சிகளைவிட முன்னதாகவே தங்களின் பிரசாரங்களை ஆரம்பித்து விட்டன. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் புறப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுகள் மும்முரமாக நடந்து வந்து, இறுதியாக யார் யாருடன் கூட்டணி என்கிற விஷயங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

அகில இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி, கொள்கைகளைப் பற்றி எந்தக் கட்சியும் கவலைப்படவில்லை. எப்படியாவது கூட்டணி அமைப்பதையே கொள்கைகளாகக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலைப் பொருத்தவரை “சீட்டும் வேண்டும், நோட்டும் வேண்டும்’ என்ற புதிய கொள்கை அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்ததால்தான் கூட்டணி முடிவுக்கு வர தாமதமானது.

தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளைப் புறக்கணித்த நிலைமை மாறி, இப்போது மாநிலக் கட்சிகளின் உதவி இல்லாமல் தேசிய கட்சிகள் தனித்து நின்று வெற்றி பெற இயலாது என்ற புதிய திருப்பத்தைக் காலம் உண்டாக்கியுள்ளது. இதனால் பெரிய தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் மாநிலம் தோறும் அந்தந்த மாநிலக் கட்சிகளோடு கூட்டணியமைக்கத் துடித்தன.

இதுவரை ஆண்டு கொண்டிருக்கிற காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ.க. இவற்றோடு இடதுசாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அணி ஆகியவை ஆட்சியைப் பிடித்துவிட ஆர்வம் காட்டுகின்றன. புதிய புயலாகப் புறப்பட்டுள்ள “ஆம் ஆத்மி’ கட்சியின் அறைகூவலை அவ்வளவு எளிதாக நாம் ஒதுக்கிவிட இயலாது.

ஆளும் கட்சிகளின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ள நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் குரல்களாக எழும் புதிய சக்திகள் இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை. பண பலம், அதிகார பலம் வீழ்ச்சியுறும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில கொள்ள வேண்டும்.

பிரதமர் வேட்பாளர் என்ற பெயரோடு நரேந்திர மோடியை பாரதிய ஜனதா முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக பிரதமர் வேட்பாளர் எனஅறிவிக்காமல் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகளின் வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா “நாளைய பிரதமர்’ என அறிமுகப்படுத்தப்படுகிறார். “பிரதமராகும் தகுதி எனக்குத்தான் அதிகம்’ என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ்குமாரும் கூறியுள்ளார்.

தனிக் கட்சிகளின் ஆட்சி ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கூட்டணிகளின் ஆட்சிதான் இனி என்ற நிலை ஏன் ஏற்பட்டது? தனிக்கட்சிகளில் காங்கிரஸ் கட்சி மட்டுமே, சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற பெயரில் இதுவரை ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தது. சிறிது காலம் பா.ஜ.க.வும் வாஜ்பாய் தலைமையில் இருந்தது. எனினும் நாட்டை அதிக காலம் ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கே உரியது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் பாயும் என்று கூறினார்கள். பாமர மக்களும் அதனை நம்பினர்; வாக்களித்தனர்; ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தனர்; அழகு பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்ட பலன் என்ன? “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

ஊழல் உச்ச கட்டத்தைத் தொட்டது. விலைவாசிகள் வான மண்டலத்தைத் தடவியது; நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோலும், டீசலும் விலை உயர்ந்து மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதியாக உறங்கககூட முடியவில்லை.

ஆனால் இந்தியாவில் செல்வந்தர்களின் வருமானம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பணக்காரர்கள் உலகப் பணக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருப்பதாக வாய் கூசாமல் கூறுகின்றனர்.

சர்வதேச அளவில் பெரும் செல்வந்த நாடு வரிசையில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது என்றும், இந்திய அளவில் 70 பேர் சர்வதேச அளவில் செல்வந்தர்களாக உள்ளனர் என்றும் சீன நிறுவனம் ஒன்று தளது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் செல்வந்தர் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பன்னாட்டு அளவில் 41ஆவது இடத்திலும், லட்சுமி மிட்டல் 49ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதைக் கேட்க நமக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி எல்லாருக்குமானதாக இல்லையே! மனித உறுப்புகளில் எல்லாம் ஒரே சீராக வளர்ச்சியடைய வேண்டும். ஒரு சில உறுப்புகள் மட்டுமே பெரிதாவது வளர்ச்சியாகாது. அந்த வீக்கம் ஒரு நோயாகும்.

2004-05ஆம் ஆண்டில் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தோர் எண்ணிக்கை 40.71 கோடியாக இருந்தது. வறுமைக் கோட்டின் அளவைக் குறைத்துக் காட்டிவிட்டு, 2011-12இல் அது 26.93 கோடியாக, நம் மக்கள்தொகையில் 21.9 விழுக்காடாகக் குறைந்து விட்டது என்று மத்திய அரசு அறிவித்தபோது மக்கள் கேலியாக சிரித்தனர்.

இவ்வாறு மக்களின் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மற்றக் கட்சிகள் தயங்குவதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் இதுவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, மத்திய ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றிருந்த தி.மு.க. இப்போது, “காங்கிரஸ் உறவு வேண்டாம்’ என்று முடிவெடுத்து விட்டது. மற்றக் கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணியமைக்க முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி காங்கிரஸ் தனித்தே தேர்தலை சந்திக்கிறது.

தமிழக மீனவர் சிறைபிடிப்பு பற்றித் தகுந்த நடவடிக்கை எடுக்காதது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு வர அனுமதித்தது, தொடர்ந்து உயர்ந்து வந்த விலைவாசி ஏற்றத்தைத் தடுக்காதது, ராஜீவ் கொலையாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பது, எங்கும் எதிலும் ஊழல்மயம் – இவையெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம். இந்தக் கோபம் நிச்சயம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும்.

“திராவிடக் கட்சிகளை ஒழித்தே தீருவேன்’ என்று போர்க்கோலம் பூண்டுள்ள ராமதாஸின் பா.ம.க., ஈழத் தமிழர்களுக்காக இடைவிடாமல் குரல் கொடுக்கும் வைகோவின் ம.தி.மு.க. மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகியவை இப்போது பா.ஜ.க.வுடன் கைகோத்துள்ளன.

பா.ஜ.க.வின் கொள்கைகளில் முரண்பட்ட இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதன் நோக்கம் என்ன? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் இவர்கள் இணைவதன் பின்னணி என்ன?

நாட்டின் பிற மாநிலங்களில் செல்வாக்குடன் இருக்கும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அமைச்சரவையில் பங்கு பெறலாம் என்பதும், தேர்தல் செலவுக்குப் பணம் கிடைக்கும் என்பதைத் தவிர வேறு என்ன? இதில் கொள்கைகளுக்கும், மக்கள் தொண்டுக்கும் எங்கேயாவது இடம் இருக்கிறதா? தேடித்தான் பார்க்க வேண்டும்.

“பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். தேர்தல் நேரத்தில் பணம் அதற்கு மேலும் செய்யும் என்பதில் ஐயமில்லை. தேர்தல் சமயத்தில் கட்சி மாறுவதும், அணி மாறுவதும் சாதாரணமாகி விட்டது. அதற்கு கூறப்படும் காரணங்கள் உண்மையல்ல என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும்.

தேர்தலையே சந்திக்காமலும், மக்களிடம் வாக்குகளையே வாங்காமலும் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் நம் நாட்டை ஆண்டு முடித்துவிட்டார். நமது அரசமைப்புக்கு மாறாக “பிரதமர் வேட்பாளர்’ என்று கூறிக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் எத்தனை மாற்றங்களை இந்த நாடு சந்திக்கப் போகிறதோ, யார் கண்டார்கள்?

“ஜனங்கள் தங்களது துயரங்களைத் தாங்களே தேடிக் கொள்வதற்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல் என்பது’ என்று கவிஞர் கண்ணதாசன் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார். காலம் போகிற போக்கைப் பார்த்தால் அதுவே உண்மையாகிவிடும் போல இருக்கிறது.

எல்லா கட்சிகளுமே நல்லாட்சிக்கான வாக்குறுதிகளையே அளித்து வருகின்றன. மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வென்று அமையப்போகும் புதிய ஆட்சியாவது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் என்று நம்புவோமாக!

உதயை மு. வீரையன்