September 23, 2021

புகுந்த வீட்டுக்கு சீர்வரிசையாக கழிப்பறையுடன் சென்ற மணப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு!

இந்தியாவில் 60 கோடிப் பேர் – அதாவது நம் மக்கள் தொகையில் சரிபாதியினர் கழிவறை வசதி இல்லாதவர்கள் என்கிறது யுனிசெஃபின் ஆய்வு. இதில் 80 சதவீதம் பேர் பெண்கள். ஆக கழிப்பறை வசதியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான்.இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க, பெண்கள் சூரியன் மறையும் வரை காத்திருந்து ஆண் துணையோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டியும் அவர்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தால் குறைந்தது 400 பெண்களாவது பாலியல் வல்லுறவிலிருந்து தப்பித்திருக்கலாம் என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி.
toilet bride
இதனிடையே கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய செய்தியையும் கூடவே ஒரு நம்பிக்கயூட்டும் செயலையும் செய்துக் காட்டிய புதுமணப் பெண்ணுக்கு ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனம் 10 லட்சம் ரூபாய் பரிசளித்து கெளரவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டம், அண்டுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணான சைட்டால்லி கலாக்கே என்பவருக்கும், யவடாமால் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரா மக்கோடே என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவாரத்துக்கு பின்னர், தனது வருங்கால கணவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட அந்த மணப்பெண் தனக்கு சீதனமாக தரும் தங்க நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் ஒரு ஆயத்த கழிப்பறையையும் (ரெடிமேட் டாய்லட்) வாங்கித்தரும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.

அவர்களும் அதற்கு சம்மதிக்க, தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்ட ஆயத்த கழிப்பறையை சீதனமாக புகுந்தவீட்டுக்கு கொண்டு சென்ற அந்த அபூர்வ புதுப்பெண்ணை தேவேந்திரா மக்கோடே வாழும் கிராமத்தை சேர்ந்த மக்கள் புதுமையாக பார்த்து, ஆச்சரியப்பட்டனர்.

திருமண சீதனமாக கொடுக்கும் தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களை விடவும். இந்த ஆயத்த கழிப்பறை மிகவும் பயனுள்ளது என்று கூறிய சைட்டால்லி கலாக்கேவின் விளக்கத்தை கேட்ட அவர்கள் வாயடைத்து நின்றனர். இந்த செய்தி நேற்று நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

இதனையடுத்து, நாடு முழுவதும் இலவச கழிப்பறைகளை கட்டி நிர்வகித்துவரும் ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனம், அந்தப் பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளித்துள்ளது.

அந்தப் பெண்ணின் செயல் அனைவருக்கும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் ஒரு நற்சேதியாக அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் தூய்மையான இந்தியா திட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் செயலாற்றிய அந்தப் பெண்ணுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம் என ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரான பின்டேஷ்வர் பதக் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.