March 26, 2023

பீகார் பெண்ணுக்கு சர்வதேச விருது!

பீகார் மாநிலம் ரத்தன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சோத்தி குமாரி சிங் (வயது 20). ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்.
ரத்தன்பூர் பகுதியில் முஸாகர்கள் எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சாதி ஒடுக்குமுறையின் காரணமாக இந்த மக்கள் ஏழ்மை நிலையில் கல்வியில் பின்தங்கியவர்களாக இருந்தனர். பெரும் பாலானவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை. கல்வியறிவு இல்லாத காரணத்தால் இச்சமூக மக்களிடம் குழந்தை திருமணம் சாதாரண ஒன்றாக இருந்து வந்தது.

மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் ரத்தன்பூர் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சோத்தி குமாரி சிங்கும் அதில் இணைந்தார்.முஸாகர் சமூக மக்களின் இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கத் துவங்கினார். இப்போது அவரிடம் 108 குழந்தைகள் கல்வி கற்று வருகிறார்கள். அத்தோடு, அந்தப் பகுதியில் சுய உதவிக்குழு ஒன்றை துவங்கி அதன் மூலம் அந்தப் பகுதி பெண்களை மாதம் ரூ.20 வீதம் சேமிக்கச் செய்கிறார். அந்தத் தொகை பொதுவான வங்கிக்கணக்கு ஒன்றில் போடப்படுகிறது. அந்தத் தொகை முஸாகர் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

சோத்தி குமாரி சிங்கின் சேவைகளைப் பாராட்டி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பு இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. விருதுடன் 1,000 டாலர் (சுமார் ரூ.65,000) பரிசுத்தொகையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
சோத்தி குமாரி சிங் கூறும்போது, “வீடு வீடாகச் சென்று குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை முஸாகர் சமூக மக்களிடம் சொல்லுவேன். முதலில் எனக்கு திட்டு தான் பரிசாகக் கிடைத்தது. ஆனால், நமது பணியால் வரும் மாற்றங்களை புரிந்து கொண்டு பலரும் கல்வி கற்க வரத்துவங்கினார்கள். இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.