September 20, 2021

பீகார் எலெக்‌ஷன் டேட் அறிவிச்சிடாங்க!

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டசபையின் தற்போதைய பதவி காலம் நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அங்கு தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
bihar election sep 10
இது குறித்து, டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நிருபர்களிடம், “பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 12, 16, 28, நவம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. சமஸ்திபூர், பெகுசாரை, பாகல்பூர் உள்ளிட்ட 49 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் மனுதாக்கல் வருகிற 16–ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 23–ந்தேதி ஆகும். மனுக்கள் மீது பரிசீலனை 24–ந்தேதி நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 26–ந்தேதி. இங்கு அக்டோபர் 12–ந்தேதி ஓட்டுப் பதிவு நடைபெறும்.

ஜெகனாபாத், கயா, அவுரங்காபாத் உள்ளிட்ட 32 தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 21–ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 28–ந்தேதி. மனுக்கள் மீது பரிசீலனை 29–ந் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 1–ந்தேதி. இந்த 32 தொகுதிகளிலும் அக்டோபர் 16–ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

3–வது கட்டமாக வைஷாலி, சரன், பாட்னா உள்ளிட்ட 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மனுதாக்கல் அக்டோபர் 1–ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 8–ந்தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 9–ந்தேதியும், மனுக்கள் வாபஸ் அக்டோபர் 12–ந்தேதியும் நடைபெறுகிறது. ஓட்டுப் பதிவு நாள் அக்டோபர் 28.

4–வது கட்டமாக சிவான், சீத்யநர்கி, பாஸ்சிமி சம்பரான், பூர்வி சம்பரான் உள்பட 55 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இங்கு மனுதாக்கல் அக்டோபர் 7–ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள், அக்டோபர் 14. மனுக்கள் மீது பரிசீலனை அக்டோபர் 15. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 17. இங்கு ஓட்டுப் பதிவு நவம்பர் 1–ந்தேதி நடக்கிறது.

5–வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் மதுபானி, கிஷன்கஞ்ச், பூர்ணியா, கத்திகார், மாதேபுரா உள்ளிட்ட 57 சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது.

இங்கு மனுதாக்கல் அக்டோபர் 8–ந்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 15–ந்தேதி. மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 17. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 19. ஓட்டுப்பதிவு நவம்பர் 5–ந்தேதி நடைபெறும்.

அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின்னர், நவம்பர் மாதம் 8–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நவம்பர் 12–ந்தேதிக்குள் பீகாரில் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடையும்.

தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. தேர்தலின்போது தசரா, பக்ரீத், மொகரம், தீபாவளி, சாத் பண்டிகைகள் வருவதால் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் உறுதி செய்யவேண்டிய அவசியமும் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.

மாநிலத்தின் தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுமே கோரிக்கை விடுத்து இருக்கின்றன.

மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகள் மாவோயிஸ்டுகளின் பாதிப்புக்கு உள்ளானவை. இப்பகுதிகளில் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.”என்று அவர் கூறினார். பீகாரில் மொத்தம் 6 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் தேர்தல் கமிஷன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.