October 20, 2021

பீகார்:தசரா கூட்ட நெரிசலில் 32 பேர் பலி

பீகாரில் நேற்று நடந்த தசரா விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் ராவணன் தகனம் விழாவில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்கள் பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
patna dhasara
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று மாலை தசரா பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.அந்நிகழ்ச்சியின் முடிவாக, அங்கிருந்த 60 அடி உயர ராவணன் உருவப் பொம்மைக்கு தீவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து பொது மக்கள் வெளியேறியபோது பெரும் கூட்ட நெரிசல் நேரிட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 32 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்து, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு என்ன காரணம்? என்று விசாரித்த போது ”காந்தி மைதானத்தின் அருகே உள்ள கண்காட்சிச் சாலையில், கூட்ட நெரிசல் நேரிட்டிருக்கிறது. தசரா பண்டிகைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடையே, மின்சார ஒயர் அறுந்து விழுந்து விட்டதாக வதந்தி பரவியதால், மக்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 32 பேர் உயிரிழந்து விட்டர்கள்” என்று அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்ட நெரிசல் குறித்து பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அந்த துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.