September 27, 2021

பிளாஸ்டிக் தடை! – எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அம்மா! – வணிகர் குரல்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகள் குறித்து அதிகாரிகள் சட்டப்பூர்வ ஆதாரங்கள் மூலம் விளக்க வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
plastic-bags
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் முதல்வரின் தனிப்பிரிவில் புதன்கிழமை அளித்துள்ள மனுவில், “ கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் (பராமரித்தல், நிர்வகித்தல்) சட்டப்படி 40 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள “கேரி பிளாஸ்டிக்’ பைகள் மட்டுமே மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற பிளாஸ்டிக் வகைகளைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 40 மைக்ரான் அளவுக்கு கீழே உள்ள பைகளைப் பயன்படுத்தக் கூடாது என வணிகர் சங்கங்கள் மூலமாக வணிகர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் வகை கப்புகள், தம்ளர்களையும் கூட பயன்படுத்தக் கூடாது என்று கூறி ஹோட்டல்கள், சிறு டிபன் கடைகள் மீது அதிகாரிகள் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, எந்தெந்த வகை பிளாஸ்டிக் வகைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு அதிகாரிகள் சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டுகிறோம். சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது