September 29, 2021

பிளானிங் எங்களிது.. ஆனா பேர் உங்களுக்கா? – கருணாநிதி கேள்வி!

முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது அறிவித்துள்ள முழு உடல் பரிசோதனை திட்டத்தை தி மு க ஆட்சியிலேயே கொண்டு வந்து விட்ட நிலையில் இப்போது அதன் பேர் மட்டும் மாற்றி புது திட்டம் என்ற ரீதியில் அறிவித்துயாரை ஏமாற்றுகிறீர்கள்> என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
karuna_aug 30
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “30-4-2013 அன்று முதல்- அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், “தென் மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கு என தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச்சாலை ஆகியவற்றிற்கு இடையே வண்டலூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். இந்த புறநகர் பேருந்து நிலை யத்தில், புறநகர் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடம், போக்குவரத்து பணிமனை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்களுக்கு தேவையான உணவகங்கள், சிறு கடைகள், பொதுக் கழிப்பிட வசதி ஆகிய எல்லா வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்” என்று ஜெயலலிதா அறிவித்து, அந்த செய்தி அப்போது ஏடுகளில் எல்லாம் பெரிதாக வந்தன. இந்த திட்டத்தை அறிவித்து இரண்டு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ஓடி விட்டன. வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டதா ஜெயலலிதா அந்த அறிவிப்பில் செய்த திட்டங்கள் எல்லாம் வந்து விட்டனவா என்றால்; இல்லை. வேதனைதான் மிச்சம்.

ஜெயலலிதா அறிவித்தது 2013-ம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தாமதமாவது 2014-2015. இந்த சட்டம்தான் பேருந்து நிலையம் அமைய தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்கிறார் அமைச்சர். நில உரிமையாளர்களிடம் எல்லாம் நேரடியாக இனிமேல்தான் பேசப்போகிறார்களாம். அமைச்சர் கூறுகிறார். அப்படியானால் இந்த இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?.

வண்டலூரைப் போலவேதான், 8-9-2011 அன்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் படித்த அறிக்கையில் 2,160 கோடி ரூபாய் செலவில் திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்து நான்காண்டுகள் முடியப்போகிறதே, எங்கே துணைக்கோள் நகரம் என்று கேட்டிருந்தேன். துணைக்கோள் நகரத்தை எங்கே அமைத்திருக்கிறார் என்று தெரிவித்து பதில் கூறியிருக்கிறாரா என்றால் கிடையாது. அதாவது, 2,160 கோடி ரூபாய் செலவில் திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதுபோலவே மதுரை விமான நிலையத்திற்கு அருகே துணைக்கோள் நகரம் ஒன்று 120 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்போவதாக ஜெயலலிதா 4-4-2013 அன்று 110-வது விதியின் கீழ் பேரவையில் படித்தார். அதுவாவது முடிந்துவிட்டதா என்று கேட்டிருந்தேன். அமைச்சர் வைத்தியலிங்கம் நேற்று பேரவையில் அளித்த பதில், ‘‘அந்த திட்டம் தொடக்கக் கட்டத்திலே இருக்கிறதாம். 120 கோடி ரூபாயில் எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது?. அமைச்சர் ஏன் பேரவையிலே அதைத் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முடியாது; ஏன் என்றால் செலவழித்தது, வெறும் 7 லட்சம் ரூபாய்தான்.

அதிலும் முக்கியமான திட்டம் என்னவென்றால், “அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்” தொடங்கப்படும் என்பதுதான். அதுவும் ஏதாவது புதிய திட்டமா என்றால் கிடையாது. ஏற்கனவே மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் திட்டம்தான். அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு உடல் பரிசோதனை திட்டத்தைத் தொடங்கிட தி.மு.க. ஆட்சியிலேயே 11-6-1999 அன்று ஆணையிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கி படித்து தெரிந்து கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் கிராமப்பகுதி மற்றும் நகரப்பகுதிகளில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக “வருமுன் காப்போம் திட்டம்” என்ற பெயரிலே தி.மு.க. ஆட்சியிலேயே 1997-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட இந்த திட்டம் 30-12-2006 அன்று மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு, 28-2-2011 வரை தமிழகம் முழுவதிலும் 19 ஆயிரத்து 272 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

ஆனால் இப்போதுதான் முதல் முறையாக இப்படியொரு திட்டத்தை அறிவிப்பதைப் போலச் செய்கிறார்கள் என்றால், இந்த துறையினர் தமிழக மக்கள் ஏதுமறியாத அப்பாவிகள் என நினைத்து ஏமாற்றுகிறார்களா? அல்லது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்வதைப் போலக் காட்டிக்கொள்வதற்காக ஏதாவது புதிய திட்டத்தை தயாரித்துக்கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காக இப்படி எல்லாம் பெயர்களைச் சூட்டி வேடிக்கை காட்டுகிறார்களா என்பதை வாக்களித்த மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.