September 24, 2021

பிளாக் மெயில் காண்டிராக்டர்கள்! லஞ்ச புகாரில் முதலிடம் பிடித்த பி டபிள்யூ டி அதிகாரி பேட்டி

தமிழகப் பொதுப்பணித் துறையில் பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்ய 45 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர்கள் இப்படி அதிகம் லஞ்சம் கேட்கும் 10 அதிகாரிகள் பெயர் பட்டியலை ஊழல் தடுப்பு பிரிவில் புகாராக கொடுத்து உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பொதுப்பணித் துறை பொறியாளர் சங்க மாநில தலைவர் மோகன்ராஜ்.
pwd
இது குறித்து மோகன் ராஜ் அளித்த பேட்டியின் போது,”சென்னையைப் பொறுத்தவரை பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கிட்டத்தட்ட 150 பேர் உள்ளனர். இவர்களில் பலர் அமைதியாக தங்களின் பணிகளை கவனித்து வரும் நிலையில் சுமார் 10 ஒப்பந்ததாரர்கள் மட்டும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை பொறியாளர்கள் மீதும் அரசு மீதும் கூறுகின்றனர். இவர்கள் எல்லாம் ஃபீல்டில் ‘பிளாக் மெயில்’ பேர்வழிகள் என பெயர் எடுத்தவர்கள்.

மருத்துவப் பணிகள் பிரிவில் நடக்கும் பணிகளுக்கு டெண்டர் இல்லாமல் ‘நாமினேஷன்’ முறையில் பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறும் ‘நாமினேஷன்’ என்பது அவசரகால பணி; மருத்துவ மனைகள், அரசியல் வி.ஐ.பி.,க்கள், நீதிபதிகள் பங்களாக்களில், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் போது இதுபோன்ற பணிகள் நடக்கும். அத்தகைய நேரத்தில் ஒப்பந்தப் புள்ளி கோரினால் இரண்டு மாதங்களாகும் என்பதால் ‘நாமினேஷன்’ முறையில் பணிகள் நடக்கும். பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை ‘நாமினேஷன்’ முறையில் பணிகள் தரலாம் என, விதி உள்ளது. புகார் கூறும் ஒப்பந்ததாரர்கள் இது போன்ற கடினமான பணிகளை செய்ய மாட்டார்கள். ‘பெயின்ட்’ அடித்தல், டைல்ஸ் பதித்தல் போன்ற அதிக லாபம் தரும் பணிகளை மட்டுமே செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

அதிலும் பொறியாளர்கள் தரமான, ‘பெயின்ட்’ பயன்படுத்த வேண்டுமென கூறினால் சிந்தாதிரிபேட்டையில் தயாராகும் தரமற்ற ‘பெயின்ட்’ வாங்கி பயன்படுத்துவர்; பணியிலும் தரம் இருக்காது.

பணிகளை முறையாக செய்யாமல், ‘பில்’ கேட்கின்றனர். தர மறுப்போர் மீது லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தல், மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். பணியை முறையாக செய்யாத ஒப்பந்ததாரருக்கு பணிந்து போக வேண்டாமென பொறியாளர்களுக்கு சமீபத்தில் உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில் தான், 10 பொறியாளர்கள் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கிருஷ்ணமூர்த்தி, கிரிமினல் கான்ட்ராக்டர் என்று தெரிந்தே அவரிடம், ‘மொபைல் போனில்’ எஸ்.டி.ஓ., பேசியுள்ளார். இதனால் அவருக்கும், நடந்து வரும் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. அவர், மொபைல் போனை, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், உறுதிப்படுத்த முடியவில்லை.

பணிகளை செய்ய, 45 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தர தயாராக உள்ளோம். நாங்கள் நிரபராதிகள் என்பதை சட்டப்படி நிரூபிப்போம். புகார் கூறிய ஒப்பந்ததாரர்களை சும்மா விடமாட்டோம்; அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம்.ஒப்பந்ததாரர் சங்க தலைவர் குணமணி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்கின்றனர். அவருடன் உள்ள பிரகாஷ் என்ற ஒப்பந்ததாரருக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. எனவே, இதில் அரசியல் பின்னணி உள்ளதா என உறுதிப்படுத்த முடியவில்லை”என்று விளக்கம் அளித்துள்ளார்.