September 25, 2021

பிளட் டெஸ்ட் மூலம் மாரடைப்பை தெரிந்து கொள்ளலாம்!

விஞ்ஞானமும், மருத்துவத்துறையும் நாளுக்குநாள் வளர்ச்சியைப் பெற்றுவரும் வேளையில் ஆரோக்கியம் குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளில் மருத்துவர்களின் பங்கு மகத்தானதாகும். அமெரிக்காவின் இதய நோய் மருத்துவத்துறையில் பணியாற்றிவரும் டாக்டர் சாமுவேல் சி.டட்லி இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கும் நோயாளிகளுக்கு முன்னதாகவே பேட்டரி இணைந்த மின் அதிர்வு சாதனத்தை (ஐசிடி) அவர்களது உடலில் பொருத்துவதன்மூலம் நோய் தடுக்கும் பணியைச் செய்து வருகின்றார். இவ்வாறு பொறுத்திக் கொள்ளுவது பாதுகாப்பானது என்ற போதிலும் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் தற்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன.இதனைத் தவிர்க்கும் வகையில் விரைவில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபடப்போவதாக டட்லி தெரிவித்துள்ளார். ஒருவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்வதன் மூலமே அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
blood.test.
அவ்வாறு உடனடி ஆபத்து வாய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும்போது அந்த நோயாளிகளுக்கு வெளிப்புற மின்அதிர்வு டிபைபிரில்லேட்டர்ஸ் சாதனங்களைப் பொருத்துவது எளிதாகும் என்றும், தேவையில்லாமல் ஐசிடி சாதனங்கள் பொருத்தப்படுவது குறையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பகட்ட அளவில் இருக்கும் இந்த ரத்தப் பரிசோதனை விரைவில் பெரிய அளவிலான சோதனை முயற்சிக்கு உட்படுத்தப்படும் என்றும், ஆயுட்கால மின்னணு உதவி சாதனங்கள் குறித்த ஆராய்ச்சி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இதயவியல் கல்லூரியின் ஆன்லைன் மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.