September 17, 2021

பிரன்சில் வீக்லி அலுவலத்தில் நடந்த துப்பாகிச் சூட்டில் 12 பேர் பலி!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘சார்லி ஹெப்டோ’ வாரப் பத்திரிகை, நையாண்டித் தனமாக எழுதுவதில் புகழ்பெற்றது. பாரீசின் மையப்பகுதியில் பத்திரிகையின் தலைமை அலுவலகம் உள்ளது. இன்று, பத்திரிகை அலுவலகத்துக்குள் அதிநவீன துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சருடன் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பத்திரிகை அலுவலகத்துக்குள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர் சாலைக்கு வந்தும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். காரை கடத்தி துப்பாக்கியால் சுட்ட வண்ணம் தப்பிவிட்டனர். அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஸ்டெபான் உள்பட 4 கார்டூனிஸ்ட்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.
charlie-hebdo
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்ட ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மறுபிரசுரம் செய்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்தது. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், மீண்டும் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதையடுத்து, அதன் அலுவலகம் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இனவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அந்த பத்திரிகை மீது வழக்கு தொடரப்பட்ட போதிலும், திரும்பத்திரும்ப நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு வந்தது.

கடந்த 2012-ம் ஆண்டு, ‘இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்’ என்ற அமெரிக்க படத்தை கண்டித்து பல நாடுகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தபோது, மீண்டும் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அஞ்சி, சுமார் 20 நாடுகளில் பிரெஞ்சு பள்ளிகளும், பிரான்சு தூதரகங்களும், கலாச்சார மையங்களும் சிறிது காலம் மூடப்பட்டன. அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெபான் சார்போனியருக்கு கொலை மிரட்டல் வந்தது. அதையடுத்து, அவர் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடினார். இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் அடுத்த இதழ் குறித்த ஆசிரியர் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த இரண்டு பேர், ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் கொண்டு சரமாரியாக சுட்டனர்.

அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய பெயர்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் குழுக் கூட்டம் நடைபெற்ற அறைக்குச் சென்ற இருவரும் சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க முயன்றனர். அப்போது சாலையில் இருந்த ஒரு போலீஸ்காரர், தன்னை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரையும் சுட்டுக் கொன்ற அந்த 2 பேர் தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும்போது தங்களது மதத்துக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.