October 18, 2021

பிரதமர் மோடி இன்று ரேடியோவில் பேசுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று ரேடியோ வழியாக முதன் முறையாக உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ரேடியோ வழியாக நாட்டு மக்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதாகவும் தன் மனதின் வார்த்தைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி நவம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் வானொலியில் பேசுகிறார்.
Modi radio-
இன்று காலை 11 மணிக்கு அனைத்து வானொலி நிலையங்களிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பாகிறது.பிரதமரின் முதல் வானொலி உரை குறித்து அகில இந்திய வானொலி நிலையம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. சென்னை, மும்பை, அகமதாபாத், பெங்களூர், போபால் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 நகரங்களில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் பிரதமர் மோடி ரேடியோவில் ஆற்றிய உரையை 66 சதவீத மக்கள் கேட்டுள்ளனர் என்றும் அந்த உரை தங்களுக்கு மிகுந்த பயன் அளித்ததாகவும் மக்கள் தெரிவித்தனர் என்று அகில இந்திய வானொலி நிலையம் தெரிவித்தது.