September 20, 2021

பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்!

அமெரிக்காவுடன் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியா வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்; அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்; அவர்களுக்கு என்ன சம்பளம்; டாலராக தரப்படுகிறதா, ரூபாயா என்பதை தெரிவிக்க வேண்டும்; தூதரகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிச்சலுகை ரத்து; விமான நிலையங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வருவதற்கான விஐபி பாஸ்கள் ரத்து… என்று அதிரடியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.அமெரிக்க தூதரகம் முன்பு நிரந்தரமாக வைத்திருந்த போக்குவரத்து தடுப்புகளை அரசின் ஆணைப்படி அப்புறப்படுத்தியுள்ளது டெல்லி காவல்துறை. அரசின் தீவிரத்தை பார்த்து அத்தனை நாட்டு தூதரகங்களும் விழி பிதுங்குகின்றன. இது போதாது, இன்னும் வேண்டும்; அமெரிக்கா மன்னிப்பு கேட்கும் வரை விடக் கூடாது என எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.
manmohan and obama owl 18
அமெரிக்க அதிகாரிகள் பலர் ஓரின துணையுடன் வசிக்கின்றனர். ஓரின சேர்க்கை குற்றம் என நமது சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டதால், அந்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்கிறார் பா.ஜ தலைவர். ஏனிந்த கோபம்? இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி தேவயானியை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது. இங்கிருந்து அழைத்துச் சென்றுள்ள வேலைக்கார பெண்ணுக்கு சட்டரீதியான சம்பளம் கொடுக்கவில்லை; அவர் தனக்கு சொந்தக்காரி என பொய் தகவல் கொடுத்து விசா பெற்றார்; மனித உரிமைகளை மதிக்காமல் மோசமாக நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. அந்த பெண் கொடுத்த புகார்தான் அடிப்படை.

இந்த வழக்கு, கைது பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை. தேவயானி குழந்தைகளை பள்ளியில் விட்டு திரும்பும்போது மடக்கி கைது செய்தது, விலங்கு மாட்டியது, ஆடை களைந்து சோதனை செய்தது, பாலியல் தொழிலாளிகளுடன் ஒரே அறையில் அடைத்தது போன்ற மனிதாபிமானம் இல்லாத – வியன்னா கோட்பாடுகளுக்கு விரோதமான – அணுகுமுறைதான் நமது அதிகார வர்க்கத்தின் ஆத்திரத்தை தூண்டியுள்ளது. இந்தியாவின் கோபம் நியாயமானது. அமெரிக் காவின் அணுகுமுறை பழக்கமானது. நட்பு நாடு, எதிரி நாடு என அது பார்ப்பதில்லை. எந்த நாட்டுக்கும் சலுகை காட்டுவதும் இல்லை. உலகின் முதல்தர குடிமக்கள் நாம். ஏனைய எல்லா நாட்டு மக்களும் இரண்டாம் தரம். அமெரிக்க சட்டங்கள் உலகம் முழுவதற்கும் பொருந்தும். எந்த நாட்டு சட்டமும் அமெரிக்கர்களை கட்டுப்படுத்தாது என்பது அந்த வல்லரசின் நம்பிக்கை.

செல்வாக்கு மிகுந்த நமது தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் அமெரிக்க அதிகாரிகளால் அவமானத்துக்கு உள்ளானாலும், விசாவுக்காக அமெரிக்க துணைத் தூதரகங்கள் முன்பு கால் கடுக்க வரிசையில் நிற்கும் கூட்டம் குறையவில்லை என்பதை பார்க்கும்போது அந்த நம்பிக்கை இன்னும் வலுக்கிறது.தேவயானி குற்றவாளியாகவே இருந்தால்கூட அமெரிக்க போலீஸ் நடந்துகொண்டது மனித உரிமை மீறல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பாதுகாப்புக்காக அமைத்த போக்குவரத்து தடைகளை நீக்குவது போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்? இந்திய பிரதமர் மீது அளவற்ற மரியாதை வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பலமுறை கூறியிருக்கிறார். ஒபாமாவுக்கு மன்மோகன் ஒரு போன் போட்டு, ‘இந்த மாதிரியான அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாது என சொன்னாலே போதும். நிச்சயம் உறைக்கும். பிரஜைகளின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கவுரவத்துக்கும் பிரதமர்தான் காப்பாளர். அவர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்.

தினகரன்