September 29, 2021

பிரதமர் மன்மோகன்சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார்!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் புறக்கணிப்பு அறிவிப்பை விரைவில் மத்திய வெளியறவுத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
nov 9 pm_chogm_
இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய உயர்நிலைக்குழுவும் பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும், எனினும், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இலங்கைக்கு எதிராக இருப்பதால், பிரதமர் புறக்கணிப்பு முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று பேட்டி அளிக்கும்போது, பிரதமர் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியது மன்மோகன்சிங்கை மிகவும் யோசிக்க வைத்துவிட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே இலங்கையில் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பிரதமர் மன்மோகன்சிங் பெயர் இடம் பெறவில்லை. எனவே காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் துணை ஜனாதிபதி அன்சாரியும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் புறக்கணிப்பதால், துணை ஜனாதிபதியும் இலங்கை செல்லமாட்டார் என்று கூறப்படுகிறது.

என்றாலும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்காது. பிரதமர் சார்பில் இந்திய குழுவுக்கு வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் தலைமை தாங்கி செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த குழுவில் இலங்கைக்கும், ராஜபக்சேக்கும் ”ஜால்ரா” போடும் அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Reports: Manmohan Singh unlikely to attend the CHOGM summit

******************************************************************
According to reports, Prime Minister Manmohan Singh is unlikely to attend the CHOGM summit in the view of the strong sentiments in Tamil Nadu against the visit.