October 19, 2021

பார்வையற்றோருக்கான புதிய வெப்சைட்!

கணினி யுகமாக விளங்கும் இந்தக் காலத்தில், பார்வையற்றவர்கள் கணினியைப் பயன்படுத்துவது அரிதான விஷயமாக உள்ளது. இனி அவர்களும் கணினி இயக்கலாம் என்கிறார்கள் ஜார்ஜியா தொழில்நுட்ப மைய ஆய்வாளர்கள். நவீன கையுறை ஒன்றை உருவாக்கி உள்ள அவர்கள், அதை அணிந்து கொண்டால் பார்வையற்றவர்களும் கணினி மொழியை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். அந்தக் கையுறையானது கணினி தகவல்களை பார்வையற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் மொழி பெயர்த்து விடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்.பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் புதிய வைப்சைட் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் திரிபுரா மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஈடுபட்டுள்ளார்.
ias tripura
அரியானா மாநிலம் கெரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார் யாதவ். பார்வையற்றவரான இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று தற்போது திரிபுரா மாநிலத்தில் உள்ள தலாய் மாவட்டத்தில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வருகிறார். தன்னைப் போன்றே பார்வையற்றவர்களுக்கு உதவிபுரிவதற்காக புதிய வெப்சைட் ஒன்றை அஜித் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அஜித் தற்போது உபயோகப்படுத்தி வரும் மொபைல் போன் மற்றும் லேப் டாப் ஆகியவற்றில் புதிய வகை சாப்ட்வேரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாப்ட்வேர் யாரிடமிருந்து போன் வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இதே போல், இந்த சாப்ட்வேர் மூலம் லேப் டாப்பையும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்த சாப்ட்வேர் மூலம்தான் பார்வையற்றவர்களும் பயன்பெறும் வகையில் புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அஜித் ஈடுபட்டுள்ளார்.

அஜித் குறித்து திரிபுரா மாநில தலைமைச் செயலாளர் காமேஸ்வர் ராவ் கூறுகையில், அஜித் போன்ற திறமையான, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அதிகாரி, மிகவும் பின்தங்கிய பகுதியான தலாய் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளார். அவருக்கு பார்வை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிர்வாகத்தை நடத்தும் விதம் பார்வையுள்ள ஒருவருக்கும் சிறிதும் சளைத்ததல்ல என்று தெரிவித்துள்ளார்.