March 22, 2023

பார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்!

அர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட்டு மிக பிரபலம். கொரோனா பாதிப்பால் அனைத்து விளையாட்டுகளும் தடைபட்டுள்ளதால் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுவதில் வீரர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர். மைதானத்தை 12 கட்டங்களாக பிரித்து, வீரர்கள் அவரவர் கட்டங்களுக்கு உள்ளே நின்று விளையாட வேண்டும் என்பது தான். அதற்கேற்றாற் போல் பந்துகளை வைத்து விளையாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தனக்கு விளையாட அனுமதிக்கப்பட்ட செவ்வக வடிவ கட்டத்தை மீறி வெளியே செல்பவர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ள அவர்கள், இதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்கின்றனர். இதனை metegol humano அல்லது human foosball என அழைக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக வீரர்கள் கூறுகின்றனர். பெர்மிகானோவில்தான் இந்த புதிய விளையாட்டு முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 11 வீரர்களுக்கு பதிலாக வெறும் 5 வீரர்களை வைத்து விளையாடினர்.

இருப்பினும் பழைய கால்பந்து விளையாட்டு முறையில் உள்ள மேஜிக் இதில் இல்லை எனக்கூறும் வீரர்கள், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு பந்தை அடிப்பது, தெரியாமல் உதைத்ததற்காக மன்னிப்பு கேட்பது உள்ளிட்ட சிறிய சிறிய அழகிய விஷயங்கள் இதில் இல்லை என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மன அழுத்தத்தில் உள்ள மக்கள், அதில் இருந்து மீண்டு வர இந்த புதிய வகை கால்பந்து விளையாட்டு உதவுவதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். வீரர்கள் மைதானத்தில் மட்டும் முகக்கவசம் இல்லாமல் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.