October 21, 2021

பாரீஸ் ஒப்பந்தம் செயல்வடிவமாகணுமுங்கோ!

சர்வதேச பருவநிலை மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்றது. வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் 12 நாள்கள் நடைபெறும் பருவநிலை மாநாடு இந் தாண்டு 13 நாள்கள் நடைபெற்றது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்ட இழுபறியால் கூடுதலாக ஒரு நாள் (டிசம்பர் 12) எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் முக்கிய முடிவாக புவி வெப்பமயமாவதை இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டுமென மாநாட்டின் நிறைவு நாளன்று வரைவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
climate-summit-par_3510360b
சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. றிப்பாக, மனித செயல்பாட்டால் வெளியாகும் பசுமைக் குடில் வாயுக்களால் வளிமண்டலத்தில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படும் என ஊகிக்கப்பட்டது (புவி வெப்பமயமாவதற்கு பசுமைக் குடில் வாயுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு, ஹெக்சா புளோரைடு, ஹைட்ரோ புளோரைடு, பெர் புளோரைடு ஆகியவை பசுமைக் குடில் வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு சூரிய வெப்ப சக்தியை பூமியில் பிடித்து வைக்கும் தன்மை அதிகம் உள்ளது.

பசுமைக் குடில் வாயுக்களில் கரியமில வாயுவின் வெளியேற்றமே அதிகமானது. எனவேதான், கரிய மில வாயுவைக் குறைப்பது குறித்து வலியுறுத்தப்படுகிறது). அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்வது, கட்டுப்படுத்த செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள சர்வதேச அளவில் முயற்சி மேற்கொள்வது மட்டுமே சாத்தியமாகக் கருதப் பட்டது. அதன்படி, 1988-ஆம் ஆண்டு டிசம்பரில் பருவநிலை மாற்றம் பற்றிய தீர்மானம் ஒன்றை ஐ.நா. பொதுச் சபை நிறைவேற்றியது. இதையடுத்து, 1992-ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோ நகரில் ஐ.நா. புவி உச்சி மாநாடு நடத்தப்பட்டது.

மாசுபடுத்தியவர்கள் அதை சரி செய்வதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனும் முறையில் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதில் வளர்ந்த நாடுகள் கூடுதல் பங்களிக்க வேண்டும் என ஐ.நா. கோட்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக, 1997-ஆம் ஆண்டு ஜப்பானின் கியாட்டோ நகரில் பருவநிலை குறித்து நடைபெற்ற மாநாட்டில் ஓர் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது. அதுவே கியாட்டோ உடன்படிக்கையாகும்.

வளர்ந்த நாடுகள் தங்களது பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து 1990-ஆம் ஆண்டில் வெளியிட்ட பசுமைக்குடில் வாயுக்களை விட 5.2 விழுக்காடு குறைவாக வெளியிடும் நிலையை அடைய வேண்டும் என்பதுதான் கியாட்டோ உடன்படிக்கையாகும். கியாட்டோ உடன்படிக்கைக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள், மாற்றங்கள், புதிய முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு பாரீஸில் பருவநிலை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் 195 நாடுகளுடன் நடைபெற்ற கடினமான பேச்சுவார்த்தைக்குப் பின் ஓர் ஒப்பந்தம் இறுதி நாளில் வெளியிடப்பட்டது. பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் அதற்கான வரைவுத் தீர்மானத்தை வெளியிட்டார். அதில் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த வெப்பநிலையைக் காட்டிலும், இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவிவெப்பமயமாதைக் குறைக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிவ எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறி சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு ஏதுவாக 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரூ.6,70,000 கோடி நிதி ஆதாரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் வரைவு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநாட்டில் புவிவெப்பமயமாவதை 1.5 டிகிரி செல்சியஸாக குறைக்க சில நாடுகள் விரும்பின. ஆனால், இதற்கு இந்தியா, சீனா நாடுகள் தெரிவித்த எதிர்ப்பால் முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனாலேயே மாநாடு ஒரு நாள் கூடுதலாக நடத்தப்பட்டது.

இந்திய, சீன நாடுகள் மின் தேவைக்கு நிலக்கரியை எரித்து உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையங்களையே பெரும்பாலும் சார்ந்துள்ளதால் இந்த எதிர்ப்பை தெரிவித்திருந்தன. பாரீஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. கியாட்டோ ஒப்பந்தத்துக்குப் பின் உலக நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் பாரீஸ் ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாகவே கருதப்படுகிறது.

எனினும், பாரீஸ் ஒப்பந்தமும்கூட உறுப்பு நாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியது அல்ல. ஒப்பந்தத்தின் பல ஷரத்துக்கள் உறுப்பு நாடுகளின் விருப்பத்துக்கு விடப்பட்டிருப்பது கவலை தரும் அம்சமாகவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கருதப்படுகிறது. எனவே, ஒப்பந்தத்தோடு நின்று விடாமல் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அடுத்த மாநாட்டை நடத்தவுள்ள மொராக்கோ இதற்கான பணிகளை இப்போதிருந்தே முயற்சிக்க வேண்டும்.

என்.எஸ். சுகுமார்