September 26, 2021

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது – அமைச்சரவையில் முக்கிய முடிவுகள்!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23–ந்தேதி தொடங்கியது. இரு கட்டங்களாக நடந்த இந்த தொடர் கடந்த 8–ந்தேதி முடிவடைவதாக இருந்தது. எனினும், மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவு அடைந்தது.
india may 14
முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம்,”இந்த தொடரில் மொத்தம் 25 முக்கிய மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிக அதிக அளவாகும். தொடரில் இந்திய–வங்காளதேச எல்லை வரம்பு மசோதா, சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா, கருப்பு பண தடுப்பு மசோதா, காப்பீட்டு சட்ட திருத்த மசோதா ஆகிய முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதவிர இயற்கை வளங்களை வெளிப்படையாக ஏல முறையில் நிர்ணயம் செய்யும் கனிமவள மசோதா, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு மசோதா ஆகியவையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேறின.

3 மாதங்கள் நீடித்த இந்த தொடரில் பாராளுமன்றம் மொத்தம் 35 அமர்வுகளாக நடந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அமர்வுகளைவிட அதிகம். டெல்லி மேல்–சபை 32 அமர்வுகள் நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி பதவி ஏற்ற இந்த ஓராண்டில் பாராளுமன்றம் மொத்தம் 90 அமர்வுகள் நடந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத சாதனையாகும்.”என்றார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில், கங்கை நதியை சுத்தப்படுத்த அடுத்து 5 ஆண்டுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் கங்கை நதியை பாதுகாக்க ஒதுக்கீடு செய்த தொகையை விட இது 5 மடங்கு அதிகம்.

இந்த தொகை தற்போது கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக இருக்கும். இதன் மூலம் விரிவான முறையில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதை நடைமுறைப்படுத்தும் விதமாக பினாமி பெயரில் சொத்துகளை நிர்வகிப்பதை தடுக்க, அந்த சொத்துகளை பறிமுதல் செய்ய, சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் பினாமி பணபரிவர்த்தனை தடுப்பு சட்ட திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்ட மசோதா சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் அளிப்பதுடன் பினாமி பெயரில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது வழக்கு தொடருவதற்கும் வகை செய்கிறது.

குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கருப்பு பணத்தை இந்த மசோதா தடுக்கும். இச்சட்டம் காரணமாக வருவாய் பெருகும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மத்திய வருவாய்த்துறை, சட்ட இலாகாவுடன் இணைந்து இந்த சட்ட திருத்த மசோதாவை செயல்படுத்தும்.

இதற்கு முன்பு 1988–ல் இயற்றப்பட்ட பினாமி பணபரிவர்த்தனை சட்டம் பலவீனமாக இருந்ததால் 2011–ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 1988–ம் ஆண்டு சட்டத்தை நீக்குவதற்கு பரிந்துரை செய்யும் வகையில் ஒரு மசோதாவை கொண்டு வந்தது.எனினும் 15–வது பாராளுமன்றம் கடந்த ஆண்டு முடிவடைந்ததை அடுத்து இந்த மசோதா காலாவதியாகிப் போனது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த கூட்டத்தில், இந்திய எண்ணைக் கழகத்தின் 10 சதவீத பங்குகளையும், தேசிய அனல்மின் கழகத்தின் 5 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.41 ஆயிரம் கோடியை திரட்டுவதன் ஒரு பகுதியாக இந்த பங்குகளை விற்க மந்திரி சபை முடிவு எடுத்து இருக்கிறது.

பங்குகள் விற்பனைக்காக நடப்பு நிதியாண்டில் 10–க்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு அடையாளம் கண்டும் உள்ளது.இதில், இயற்கை எரிவாயு எண்ணை கழகம் 5 சதவீதமும், பாரத மிகு மின் நிறுவனம்(பெல்) 10 சதவீதமும் பங்குகளை விற்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.