பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவெடுக்க விஜயகாந்துக்கு அதிகாரம்: தே.மு.தி.க. கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, தே.மு.தி.க. தலைவர் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் குறித்து எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கியது உட்பட அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
sep 1 - d m d k.mini
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை (1 ஆம் தேதி) செயற்குழு கூட்டம் நடந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பிற அணி செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த செயற்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், பாராளுமன்றத் தேர்தல் குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்குவது எனவும், கட்சியின் 9வது ஆண்டு மாநில மாநாட்டை வரும் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, தே.மு.தி.க. தலைவர் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். கடந்த ஆட்சியின் போது வகுக்கப்பட்ட மின் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என தமிழக அரசை கண்டித்தும்,

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கவலை அளிக்கிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு உத்தரவாத மசோதா குறித்து மத்திய அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் மத்திய அரசு வஞ்சகம் செய்து விட்டது என மத்திய அரசை கண்டித்தும் சுமார் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.