September 24, 2021

’பாயும் புலி’ வர்ற வாரம் ரிலீஸ் ஆகும்! – ஆனா ஆகாது!? – தொடரும் குழப்பம் + ஆல்பம்

விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளபடம் ‘பாயும் புலி’. சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், ‘பாயும் புலி’ படத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திடீர் தடைவிதித்துள்ளது. செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி போன்ற பகுதிகளில் மட்டும் இந்த படத்தை திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர். கோவை, மதுரை, சேலம் சென்னை போன்ற பகுதிகளில் படத்தை வெளியிடுவதற்கு பிரச்சினை இல்லை. ‘லிங்கா’ படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இன்னும் ஈடுகட்டாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.


இதற்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல் என்றும் கண்டித்துள்ளது. தடையை நீக்காவிட்டால் தமிழக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ‘பாயும் புலி’ படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. சென்னையில் நேற்று மாலை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரிடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும், இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.