September 17, 2021

பாக்.கில், பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்கியதில் 132 குழந்தைகள் பலி!

பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.
pak dec 17
ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது. எங்கும் குண்டு வெடிப்பும், மரண ஓலமும், கூச்சலும் கேட்டது.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளிக் கூடத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை, தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ பகுதியை சுற்றி வளைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், இந்த கொடூர தாக்குதல்களில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் 134 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வானொலி அறிவித்தது. இவர்களில் 132 பேர் குழந்தைகள், ஒருவர் ஆசிரியை, மற்றொருவர் பள்ளிக்கூட காவலாளி. குழந்தைகளைப் பறிகொடுத்தோரின் கதறல், கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்தது.

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஆனாலும், பலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார்.
மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 140 ஆகும்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ‘ட்விட்டர்’ சமூக வலைத்தளத்தில்,”அதில் அவர், ‘‘பெஷாவர் பள்ளிக்கூடத்தில் நடந்த கோழைத்தனமான தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது அர்த்தமற்றது. சொல்லவொணா மிருகத்தனமானது. அப்பாவிமக்களை குறிப்பாக இளம்குழந்தைகளை பலி வாங்கிய கொடூர தாக்குதல்’’ என கூறி உள்ளார்.