June 30, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி பறி போனது?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடன் கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், நாடாளுமன்றத்தில் மார்ச் 28 ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது ஏப்ரல் 3 ந் தேதி ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிவிடும். அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் அரசு விலக நேரிடும்.

ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி. க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், இம்ரான் கட்சியுடன் கூட்டணியில் இருந்த எம்.க்யூ.எம் கட்சி இம்ரான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது. மேலும் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.

இதனால், இம்ரான் கான் கட்சியின் பலம் 161 ஆக குறைந்தது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 3 ந்தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கும் சூழலில் இம்ரான் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளதால், இம்ரான் பதவி பறிப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.