October 21, 2021

பஸ் ஓட்டை வழியாக விழுந்து இறந்த சிறுமியின் தந்தைக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32), ஆட்டோ டிரைவர். மனைவி பிரியா (28). இவர்களது மகன் பிரணவ் (9), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மகள் ஸ்ருதி (6), சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் 2012 ஜூலை மாதம் மாலை வகுப்பு முடிந்ததும் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பள்ளி பஸ்சில் 60 மாணவர்கள் இருந்தனர்.
school bus jan 20
முடிச்சூர் இ.பி. காலனி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறிய சிறுமி ஸ்ருதி, இருக்கைக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அதுகூட தெரியாமல் டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். ஸ்ருதி விழுந்ததும் சக மாணவிகள் அலறினர். சாலையில் சென்றவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்களை இறக்கிவிட்டு, பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் படைப்பையை சேர்ந்த சீமானை (58) கைது செய்தனர். பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர். மேலும் ஹைகோர்ட் இந்த விபத்தை தானாக முனவந்து விசாரித்து பள்ளி பஸ்களுக்கு பலவித கட்டுபாடுகள் விதிக்க வைத்தது

இதனிடையேதமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில், முடிச்சூரை சேர்ந்த சேது மாதவன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில்,” என்னுடைய மகள் சுருதி, சேலையூரில் உள்ள சியான் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2–ம்வகுப்பு படித்து வந்தார். தினமும் அவர் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கூடம் சென்று வந்தாள். கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 25–ந்தேதி பள்ளி பஸ்சில் வீடு திரும்பினார்.அப்போது அந்த பஸ் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. பஸ்சின் 6–வது வரிசையில் மிகப் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டையை ஒரு பலகையை போட்டு மறைத்து இருந்தனர். 6–வது வரிசையின் இருக்கையில் அமர்ந்திருந்த என் மகள், அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். அப்போது பஸ்சின் பின் சக்கரம் என் மகள் மீது ஏறி இறங்கியது. என் மகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானாள். என் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த என் மனைவி, இந்த சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் உடலாலும், மனதாலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். பஸ்சை முறையாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம் எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜெ.ஜெயராம், உறுப்பினர் பி.பாக்கியவதி ஆகியோர் விசாரித்தனர். பின்னர், “பஸ்சை பள்ளி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. எனவே, பலியான சுருதியின் தந்தைக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.