September 25, 2021

பல கட்சிக்கு நான் மாறினேன் என்ற தகவலே தவறு. ! – எஸ். வீ. சேகர் பளீர் பேட்டி

எஸ்.வீ. சேகர் என்று எல்லோராலும் அறியப்படும் சட்டநாதபுரம் வெங்கட்ரமணன் சேகர். மேடை நாடக-திரைப்பட நடிகர், இயக்குனர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர் என்ற பல்திறன் படைப்பாளி. இதுவரை 24 நாடகங்களை எழுதி தயாரித்து கிட்டத்தட்ட 5200 முறைகளுக்கும் அதிகமாக அவற்றை மேடைகளில் வழங்கியது மட்டுமல்லாமல் நாடக கலையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எஸ்.வீ. சேகர் 90 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்து இருக்கிறார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் இருந்தபோது மக்கள் எம்.எல்.ஏ என்று பெயர் பெற்றவர். அதி.மு.க. காங்கிரஸ் தற்போது பா.ஜ.கவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அவரிடம் பல கேள்விகளை வைத்தோம்.
s v sekar
பல கட்சிகளில் அங்கம் வகித்தவர் நீங்கள்?

முதலில் பல கட்சிக்கு நான் மாறினேன் என்ற தகவலே தவறு. நான் அதிமுகவில் இருந்த நிலையில் அக்கட்சியிலிருந்து நான் விலக்கப் பட்டேன். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் மார்ச் மாதம் சேர்ந்தேன் மே மாதம் நீக்கப்பட்டேன் .ஒரு தனிப்பட்ட மனிதர் கொள்கை அடிப்படையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறினால் கட்சி தாவிவிட்டார் என்று சொல்கிறீர் கள். அதே சமயம் கட்சிகள் சுய லாபத்திற்காக, போட்டியிட சீட் வேண்டும், பணம் வேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி கூட்டணி வைக்கும்போது அதை கூட்டணி தர்மம் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எந்தக்கட்சி என்பதையெல்லாம் தாண்டி நாம் குறை சொல்பவர் நேர்மையானவரா, ஊழலற்றவரா, மக்களுடன் எப்போதும் தொடர்பு கொண்டவரா என்பதை தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் நான் நேர்மையானவன்.நான் எங்கு இருந்தாலும் எனது சுய மரியாதையை இழக்கமுடியாது.

பிஜேபி யில் சேர்ந்த நோக்கம்?

1991 இல் இருந்து 2004 வரை பிஜேபி யின் அனுதாபியாக தேர்தல் பிரசாரம் செய்து வந்துள்ளேன். 2009இல் இருந்து மோடி என்னை எப்போது சந்தித்தாலும் நண்பரே என்று அன்போடு அழைப்பார். பிறகு பலமுறை குஜராத் நேரில் சென்று மோடி அவர்களின் செயல்பாடுகளில் வியந்து அதன் காரணமாக மோடி பிரதமராக வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் பிஜேபி யில் சேர்ந்து நான் மோடிக்கு ஆதரவளித்து வருகிறேன்.

மோடி ஹிட்லர் ரேஞ்ஜக்கு வர்ணிக்கப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

பாரதத்தில் தர்மருக்கு தான் பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாகத் தெரிந்தது. அதே சமயம் துரியோதனனுக்கு தான் பார்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களாகவே தெரிந்தது. இந்தியா எதிர்காலத்தில் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மோடி பிரதமராக வரவேண்டு என்று விரும்புகின்றனர். பிரிட்டிஷ்காரன் பிளவுபடுத்தி வைத்துவிட்டுப்போன சாதி, சிறுபான்மை, பெரும்பான்மையினர் என்ற ஏற்றத்தாழ்வுகளையே வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வந்த மத சார்பற்ற என்ற பெயரில் கட்சி நடத்தும் போலிகளால் இனியும் காலம் ஓட்டமுடியாது என்ற அச்சம் உருவாகிவிட்டது. இதுதான் உண்மை. திருடனுக்கு போலிஸ்காரன் கெட்டவனாகத்தான் தெரிவார். கோர்ட்டில் தண்டனை பெற்றவருக்கு ஜட்ஜ் கெட்டவராகத்தான் தெரிவார். தோற்றுப்போகப் போபவர்களுக்கு மோடி ஹிட்லராகத்தான் தெரிவார்

இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய காங்கிரஸ் கட்சியை எதிர்த்தல்லவா கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் ? எதற்காக மோடியை எதிர்க்கிறார் ?

அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் “B” டீம். அடுத்த கட்ட டீம். அவரைத் தேர்தலில் ஈடுபடுத்தியதற்கு காரணமே மோடியின் ஓட்டுக்களைப் பிரிக்கும் எண்ணம்தான். அவர் எந்த சமூக ஒழுக்கமும் இல்லாதவர். இன்கம் டாக்ஸ், மின்சார பில்கூட சரியாக கட்டாதவர். டெல்லியில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் யாருடனும் கூட்டு கிடையாது என்று தன் குழந்தைகள் தலை மீது கைவைத்து சத்தியம் செய்த அவர் அந்தக் கையை எடுப்பதற்குள் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போட்டு ஆட்சி அமைத்தவர். இந்திய அரசியலில் பாகிஸ்தானிடம் ஃபண்டு வாங்கிய ஒரு தேசத்துரோகி அவர். துடைப்பக்கட்டையை வாசல்படியில்தான் வைக்கவேண்டும். பட்டுக்குஞ்சம் கட்டி பூஜை அறையில் வைக்கக்கூடாது. நான் துடைப்பத்தைப் பற்றித்தான் சொன்னேன் இதற்கு முன்னர் சொன்னதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

இது காங்கிரசுக்கு வீழ்ச்சியா அல்லது சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணமா ?

காங்கிரசுக்கு இது கெட்ட நேரம். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். கட்டாயம் மூன்று ஐந்தாண்டுகள் மோடி பிரதமராக நீடிப்பார். நாஸ்டர்டாமஸ் சொன்னது தற்போது நிரூபணமாகிறது.

திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் ?

மாநிலக்கட்சிகள் மாநில செல்வாக்கோடு தேர்தலில் நிற்பவை. மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது இலவச கம்ப்யூட்டர், இலவச ஆடு, இலவசப் பொருட்கள்தான், கட்சிகள் அல்ல. இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இலவசங்களை வழங்கி உழைக்காமல் கிடைக்கக்கூடியதைப் பெற்று மக்களை சோம்பேறிகளாக மாற்றி அவர்களை சிந்திக்கவே விடாமல் வைத்திருக்கும் டெக்னிக் இது. உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. ஒவ்வொரு முறை ஒரு பொருளும் இலவசமாகக் கொடுக்கப்படும்போது கட்டாயம் அதற்கு ஒரு உள் நோக்கம் இருக்கும். நாம் ஏமாந்து போவற்கும், ஏமாற்றப்பட்டதற்கும்., ஏமாறப்படப்போவதற்கும் கொடுக்கப்படுபவையே இலவசம் என்பது. குஜராத்தில் ஒரு இலவசங்களும் கொடுக்காமலேயே நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் முதல்வராக வந்தார்.நம்ம ஊர்ல விவரம் தெரிஞ்சவங்க ஓட்டே போடறது இல்லை. இலவசத்தையும், பணத்தையும் வாங்கினவர் காலைல 7 மணிக்கெல்லாம் ஓட்டுச்சாவடில வரிசைல நிக்கறார். வழக்கம்போல அவரு ஓட்டைப் போட்டுட்டு வந்துடறார். SO…மக்கள் தொடர்ந்து இயந்திரம் மாதிரி தப்பு தப்பாவே தேர்ந்தெடுத்துட்டு இருக்காங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே வித்தியாசம் “அ” மட்டுமே.


இந்த தேர்தலில் பா.ஜ.க வென்றால் அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? காங்கிரஸ் வென்றால் என்ன காரணமாக இருக்கும்

காங்கிரஸ் பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன். மோடி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார். இந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் மோடி என்ற முகம். இந்த வெற்றிக்கு மோடி என்ற ஒரே ஒருவர்தான் காரணமாக இருக்கப்போகிறார். எந்த தேர்தலிலும் அனுதாப அலை என்பதைவிட எதிர்ப்பு அலைதான் வாக்குகளை தீர்மானிக்கும். காங்கிரஸ் கட்சி அத்தனை எதிர்க்கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்தாலும்கூட ஜெயிக்க முடியாது. ப.சிதம்பரம் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதை. ஆனால், அவர் சொகுசுக் காருக்கு 8 சதவீத வரியும், விவசாயத்திற்கு வாங்கும் ட்ராக்டருக்கு 14 சதவீத வரியும் விதித்திருந்தார். பலவிதமான அறிவிப்புகள் வெளியிடலாம், பல வங்கி கிளைகள் திறக்கலாம். என்ன பலன் ? வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு அதற்கு காசு கொடுப்பதற்குள் விலை ஏறிப்போகிறது.

மக்களுக்கு இந்த தேர்தலின் போது நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன ?

தேர்தல் ஆணையம் யாரும் பணம் வாங்க வேண்டாம் என்று கூறுகிறது. பணம் வாங்காதே என்று சொன்னால் மக்களுக்கு கோபம்தான் வரும். அதே சமயம், பணம் கொடுப்பவரை முதலில் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். பொதுமக்கள் என்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல . அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டால் எதற்காக அவர்கள் கையேந்தி நிற்கப்போகிறார்கள். இலவசங்களே இல்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொள்ளும்படியாகச் செய்தாலே போதுமானது. தேர்தல் ஆணையம் என்பது தேர்தல்போது மட்டுமல்ல எல்லா நாட்களுமே செயல்படவேண்டும். தேர்தலுக்கு மட்டும் சட்டதிட்டங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு அதிகாரம் செய்யும் ஆணையம் அதற்கு பிறகும் தினசரி நாட்டு நிகழ்வில் பங்கேற்று கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாதவருக்கு உணவளித்தால் அதற்கு பெயர் அன்னதானம். கார் உள்ளவனுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் விருந்தளித்தால் அது கொழுப்பு. நாலே முக்கால் வருசம் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு கடைசி நேரத்துல வந்து மக்களே இலவசத்தை பெறாதீங்க…காசு கொடுத்தா வாங்காதீங்க…ஓட்டை விக்காதீங்க அப்படீன்னா யார் சார் கேப்பாங்க. என்னைப் பொறுத்தவரை யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிங்க. அதே சமயம் நாட்டுக்கு யார் நல்லவர், உங்களுக்கு அந்த வேட்பாளர் நல்லது செய்வாரா? எப்போது வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ள முடியுமா என்றெல்லாம் பார்த்து யார் நல்லவரோ அவருக்கு ஓட்டுபோடுங்க.

வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?

தேர்தல் முறைகள் மாற்றப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை அவசியம். பிரச்சாரம் என்பது எதற்காக. அது மாப்பிள்ளை அழைப்பு மாதிரி. இதோ பாருங்க இவர்தான் மாப்பிள்ளை. இந்த ஆளைத்தான் எங்க பொண்ணுக்கு திருமணம் செய்யப்போறோம்…இந்த ஆள் பற்றி எங்களுக்கு சொல்லுங்க. இவர் எங்காவது ஏடாகூடம் செஞ்சிருந்தாக்கூட சொல்லிட்டிங்கன்னா திருமணம் செய்யலாமா வேண்டாமா அப்படீங்கறதை கடைசி நேரத்துல கூட முடிவு செய்யலாம் அப்படீங்கற மாதிரிதான். மயிலாப்பூர் தொகுதியில் நான் நின்றேன். வெற்றி பெற்றேன். எனது தொகுதியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு வேலைகள் நடைபெற்றன. ஒரு பைசாக்கூட நான் கமிஷன் வாங்கவில்லை. இன்னிக்கும் எஸ்.வி.சேகர் அதே போலத்தான் இருக்கிறேன். எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் என்னை அப்போதும் சரி இப்போதும் சரி சாமானிய மக்கள்கூட என்னை தொடர்பு கொள்ளலாம் (98410 23545).
இவ்வளவெல்லாம் செய்யறாங்களே …காங்கிரஸ் கட்சிக்கு எப்படி கைச்சின்னம் கொடுத்தாங்க. முதலில் அந்த சின்த்தை மாற்றவேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்று எம்.பிக்களாகவோ, எம்.எல்.ஏக்களாகவோ போட்டியிட 15 ஆண்டுகள் வரை தடை விதிக்க வேண்டும். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காரணம் தனக்கு கீழே பணிபுரிந்தவர்களை வைத்து அவர் சுலபமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு அதிகார துஷ்பிரயோகம்தான்.

மோடிக்கு இவ்வளது ஆதரவு தருகிறீர்களே..தமிழ்நாடு பா.ஜ.க உங்களை பிரசாரத்திற்கு அழைக்கவில்லையா ?

எல்லா கூட்டணி கட்சிகளும் என்னை அழைக்கிறார்கள். தமிழ்நாடு பா.ஜ.க தவிர. ஆனாலும் நான் மோடிக்காக பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் பா.ஜ.க பிரமுகராக. சன்டிவி, தந்திடிவி மற்ற எல்லா டிவியிலும் நான் பிரச்சாரம் செஞ்சுட்டுதான் இருக்கேன். என்னைப் பொறுத்தவரை என்னை BJP கட்சி பயன்படுத்திக்கொண்டால் அது கட்சிக்குத்தான் லாபம். இல்லையெனில் எனக்கு எந்தவித இழப்பும் இல்லை. எனது சுயமரியாதைக்கு பங்கம் வராத வகையில் நான் செயல்படுவேன். இதற்கு காரணம் சோ என்ற எனது மானசீக குரு என்னை அப்படி வளர ஊக்குவித்து இருக்கிறார்.

நேர்மையான, ஊழல் இல்லாத அரசியல் பார்வை, பாதை உங்களுடையது. ஆனால்…இன்றைய அரசியல் சூழலில் இது சாத்தியமா ?

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. என்னை பொறுத்த வரை அரசியல் என்பது சம்பாதிப்பதற்கான இடம் அல்ல. சமூக சேவைக்கானது. வாய்ப்பு கிடைத்தால் நல்லது. இல்லையெனில் ஒரு பிரச்னையும் இல்லை. IF GOD BE WITH US, WHO CAN BE AGAINST US என்று கூறி முடித்துக்கொண்டார் எஸ்.வீ.சேகர்

– விஷ்வா விஸ்வநாத், TNTV-SBNN News Service