September 18, 2021

பலவீனமான வெளியுறவுக் கொள்கை!

நமது நாட்டின் நலன்களுக்கு உகந்த உலகளாவிய சூழலை உருவாக்குவதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான ஒரே நோக்கம்’ என்று தில்லியில் அண்மையில் தொடங்கிய பிற நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். ஆனால், அவருடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நமது வெளியுறவுக் கொள்கையானது மிகவும் பலவீனமாகவும், நமது நாட்டின் நலன்களுக்கு எதிராகவும்தான் மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
nov 9 - edit International-relations
அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் ஒப்பந்தம், அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்னை, நமது நாட்டுக்கு எதிராக அன்னிய மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளன என்பது ஏற்கெனவே வெட்டவெளிச்சமாகியுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, மன்மோகன் சிங், தனது அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து இவ்வாறு பேசியிருப்பது நகைமுரண்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில், அந்த நாட்டு நிறுவனங்கள் பயனடையும் விதமாக நமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை நீர்த்துப்போகச் செய்தது மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். இதேபோல, ரஷியாவிடமிருந்து அணு நீர்மூழ்கிக் கப்பலைக் கொள்முதல் செய்யும் பேரத்திலும் இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுத்து, அதிக விலை அளிக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியதும் இதே அரசுதான்.

“சர்வதேச விவகாரங்களில் நமது அணுகுமுறை நமது நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தியாக இருக்கும்’ என்றும் இந்தியத் தூதர்கள் மாநாட்டில் பிரதமர் பேசியிருக்கிறார். ஆனால், எந்தவொரு சர்வதேச பிரச்னையிலும் இந்தியாவின் அணுகுமுறை மெச்சத்தகுந்த விதத்தில் இல்லை.

சீனாவுடனான எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தையில் சிறிய அளவிலான முன்னேற்றம்கூட ஏற்படவில்லை. இன்னமும் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். அதனால்தான், சீனா நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பல நாள்களுக்கு முகாமிட்டிருந்தாலும், நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடிகிறதே தவிர, துணிச்சலான நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை. சீனாவுக்கு செல்ல விரும்பும் ஜம்மு-காஷ்மீர், அருணாசலபிரதேச மாநில மக்களுக்கு முறையான விசா அளிக்காமல், காகிதங்களில் அனுமதி அளித்து நம்மை அவமதித்து வருகிறது அந்த நாடு. இதற்கு முடிவு கட்ட மன்மோகன் அரசு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதை விடுத்து, இன்னமும் அந்த நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தே மன்மோகன் அரசு ஆலோசித்து வருகிறது. வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைபவர்களைக் கட்டுப்படுத்துவது, நதிநீர்ப் பங்கீடு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையே இன்னமும் பிரச்னை நீடித்து வருகிறது. பக்கத்து நாடான இலங்கையில், இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவுடைய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது மன்மோகன் தலைமையிலான அரசு. விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. அப்போது, இந்தியா இதில் நேரடியாகத் தலையிட்டிருந்தால், இலங்கையின் தமிழின அழிப்பு நடவடிக்கையைத் தடுத்திருக்க முடியும்.

தற்போது இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுவிஷயத்திலும் மன்மோகன் அரசு உறுதியான முடிவை எடுக்காமல் இன்னமும் ஊசலாட்டதிலேயே உள்ளது.

சர்வதேச விவகாரங்களில் மாநிலங்களின் நிர்பந்தத்துக்கு பணிந்து நமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்தால், உலக நாடுகளின் பார்வையில் அது நமக்கு பெருமை சேர்ப்பதாக இருக்காது; சிறுமையைத்தான் ஏற்படுத்தும்.

அடுத்து வரும் ஆட்சியிலாவது நமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால்தான், சர்வதேச அரங்கில் நமது குரலுக்கு மரியாதை கிடைக்கும்.

நா. குருசாமி