October 19, 2021

பருவமழை காலம் 20-ந் தேதி தொடக்கம்! – ஹெல்த் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் 20-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த மழை காலத்துக்கான முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு, அனைத்துதுறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர். வருவாய்த் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பருவமழை காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
rain oct 11
இந்நிலையில் பருவமழை தொடங்கப் போகும் இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.

*பெரும்பாலும் நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.

* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.

* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.

* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.

* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.

* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

மேலும் சாப்பாடு விஷ்யத்தை எடுத்துக் கொண்டால் மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.

எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு உடனடியாக கொடுக்க நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.

இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி,பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர்இ வெண்ணெய்,நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது, ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

4. நம் உணவில் காரம்இ கசப்புஇ துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

6. இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள்,மிளகுத்தூள்,பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்,பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

8. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

9. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு,கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

10. மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

11. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும் விட்டமின் சி சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.

ஆனால் ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

12. மழை சீசனில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.