பரம்பரை என்பது பலமல்ல, சுமையாக்கும்!

உலகில் ஒவ்வொரு நாட்டின் பண்டைய வரலாறும் மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக் காலங்கள், நடைபெற்ற போர்களின் முடிவுகள், அரச குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பங்கள் -குத்துவெட்டு – கொலைகள் பற்றிய காலப் பட்டியல்களின் தொகுப்பாகவே இருக்கும். பல நாடுகளில் பிரபுக்கள் குடும்பங்களும் வம்சாவளி முறையில் மூத்த மகனுக்கு பதவி -அதிகாரம் – உரிமைகள் சேர்ந்துவிடும் முறையும் இருந்தது.
23 -= edit dynasty
1789-99-இல் பிரெஞ்சு நாட்டு மக்கள் நடத்திய புரட்சிக்குப் பிறகு ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி அகற்றப்பட்டு வெவ்வேறு வகையிலான மக்களாட்சி நிலை பெற்றது. இருப்பினும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்களாட்சிக்குக் கட்டுப்பட்ட மன்னராட்சி முறை தொடந்து வருகிறது.

இந்தியாவில் கிமு 413-இல் துவங்கிய நந்தர்கள் பரம்பரையிலிருந்து கிபி 1857 மொகலாயர் பரம்பரையின் முடிவுவரை 22 பேரரசுகளும் சிற்றரசுகளும் அரசோச்சிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இடையில் கிழக்கிந்தியக் கம்பெனி சிறுகச் சிறுக தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. சிப்பாய் கலகத்துக்குப் பிறகு. 1858-இல் ஆங்கில ஏகாதிபத்தியத்தின்கீழ் நேரடியாக இந்தியா வந்தது.

1947 ஆகஸ்டில் விடுதலைபெற்ற இந்தியா, மக்களாட்சி முறையில் தனது அரசியல் அமைப்பை நிர்ணயித்துக் கொண்டது.

அண்மையில் ஜனவரி 20-23 நாள்களில் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்திற்குப் பிறகு ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த முடிவை அமெரிக்க “அசோசியேட் பிரஸ்’, நேரு – காந்தி ஆட்சிப் பரம்பரையின் வாரிசாக உள்ள ராகுல் காந்திக்கு உயர் பதவி என்று குறிப்பிட்டது.

ஆஸ்திரேலிய ஏபிசி நிறுவனம், இந்திய அரசியலில் பலம் வாய்ந்த நேரு-காந்தி மரபின் நான்காவது வாரிசான ராகுல் காந்தி என்ற விளக்கத்தைத் தந்தது.

நேரு குடும்பத்தினர் காஷ்மீரத்தைச் சேர்ந்த ஹிந்து பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். ஜவாஹர்லால் நேருவின் மகள் “இந்திரா பிரியதர்ஷினி’, பார்ஸி குலத்தைச் சேர்ந்த பிரோஸ் காந்தியை மணந்ததால், “இந்திரா காந்தி’ என்று ஆனார். திருமணத்துக்குப் பிறகு பெண்ணின் பெயருக்குப்பின் கணவரின் பெயர் இணைக்கப்படுவது பொதுவான வழக்கம். ஆனால் இந்திரா காந்தியின் பெயருக்குப் பின்னாலுள்ள “காந்தி’ வேறு “தேசப்பிதா’ அண்ணல் காந்தியடிகளைக் குறிப்பிடும் “காந்தி’ என்பது வேறு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி – மகாத்மா காந்தியின் இயற்பெயர் – குஜராத் மாநிலத்தின் ஹிந்து பணியா (வைசியர்) குலத்தில் பிறந்தவர்.”

பிரபல செய்தித் தொகுப்பான விக்கிபிடியா, பிரோஸ் காந்தி வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைத் தரும்பொழுது பிரோஸ் காந்தி, மகாத்மா காந்தியின் உறவினர் அல்ல என்பதைக் குறிப்பிடுகிறது.

மோதிலால் நேரு – ஜவாஹர்லால் நேரு ஆகியோர் 1920 முதல் மகாத்மா காந்தியின் போராட்டங்களில் தீவிரப் பங்கு பெற்றவர்கள். அதனால் அரசியலில் நெருங்கிய நட்பு ஏற்பட்டதே தவிர, மதம்-சாதி வகைகளில் குடும்ப உறவு எதுவும் ஏற்படவில்லை.

1984 அக்டோபர் 31-இல் இந்திரா காந்தி இறந்தார் என்ற செய்தி வந்ததும், லண்டனின் பிரபலமான “டைம்ஸ்’ நாளிதழ், முதல் பக்கத்தில் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியவர்களின் படங்களைப் போட்டு, “காந்தியின் பேத்தி இந்திரா’ என்று எழுதியது.

தவறை ஒரு வாசகர் சுட்டிக்காட்டியதும், உடனடியாக “காந்தியின் சிஷ்யை இந்திரா’ என்ற தலைப்புடன் திருத்தப்பட்ட வெளியீட்டை “டைம்ஸ்’ பத்திரிகை தந்தது.

மக்களாட்சி நாடுகளிலும் அரசியலில் குடும்ப வம்சாவளி சில சமயங்களில் தலையெடுப்பதுண்டு, அமெரிக்காவில் கென்னடி குடும்பம், ரூஸ்வெல்ட் குடும்பம், புஷ் குடும்பம் என்று அரசியல் தலைவர்கள் தொகுக்கப்பட்டது உண்டு. ஆயினும் நீண்ட காலம் அத்தகைய குடும்ப அரசியல் நிலைபெற்றதில்லை.

பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1964 -ல் இறந்தபொழுது, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக அப்போது இருந்த காமராஜர், அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். சாஸ்திரி அமைச்சரவையில் நேருவின் மகள் இந்திரா காந்தி செய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சராகச் சேர்க்கப்பட்டார்.

1966 ஜனவரி 11 அன்று தாஷ்கண்டில் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும், அடுத்த பிரதமர் பதவிக்கு மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா, ஒய்.பி.சவாண் போன்ற மூத்த தலைவர்கள் போட்டியாளர்களாக இருந்தார்கள்.

ஆயினும் காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு அப்பொழுது இருந்த கவலை 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்விதத்தில் மக்களின் செல்வாக்குள்ள ஒருவரைப் பிரதமராக ஆக்கவேண்டும் என்பதுதான். தீவிர ஆலோசனைக்குப் பிறகு நேருவின் மகள் இந்திரா காந்தியைப் பிரதமராக ஆக்குவது என்று முடிவுசெய்து, மற்ற தலைவர்களையும் கலந்து, இந்திரா காந்திக்கு ஆதரவு திரட்டினார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் 1966 ஜனவரி 19-இல் நடைபெற்றது. அதில் இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும் எதிர்த்து நின்ற மொரார்ஜி தேசாய்க்கு 283 வாக்குகளும் கிடைத்தன.

1966 ஜனவரி 24-ஆம் தேதியில் இந்திரா காந்தி பிரதமர் பதவி ஏற்றார். பிறகு காமராஜருக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்து, அவருடைய ஆசியுடனும் ஆலோசனையுடனும் தமது ஆட்சி நடைபெறுமென அடக்கத்துடன் அறிவித்தார்.

1967 பொதுத் தேர்தலில் 520 இடங்கள் உள்ள மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 283 இடங்கள் கிடைத்தன. மீண்டும் இந்திரா காந்தி தலைமையில் மத்திய அமைச்சரவை அமைந்தது.

ஆயினும் ஏழு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட்டுவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று அண்ணா முதலமைச்சராக ஆனார். காமராஜரும் மற்ற அமைச்சர்கள் பலரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய அளவில் மாநிலங்கள் பலவற்றில் காங்கிரஸ் கட்சி சரிவடைந்ததின் ஒரு பகுதிதான் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தோல்வி.

1969-இல் குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் செயற்குழு தீர்மானப்படி போட்டியிட்ட சஞ்சீவி ரெட்டியை எதிர்த்து பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சியால் வி.வி.கிரி வெற்றி பெற்றார். இதில் ஒரு வினோதம், சஞ்சீவி ரெட்டி வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டவர் இந்திரா காந்திதான். அதனால் காங்கிரஸ் கட்சி உடைந்து, நெருக்கடி காலங்கள் வந்து, மக்கள் ஆட்சிமுறை அலங்கோலமடைந்த இந்திய அரசியல் வரலாற்றை இங்கு விவரிக்கவேண்டியத் தேவையில்லை.

நேரு-காந்தி பரம்பரையை உருவாக்கியவர் இந்திரா காந்திதான். லால்பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் இந்திரா காந்தி அமைச்சர் ஆனதும், பிறகு பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஜவாஹர்லால் நேருவின் மகள் என்ற அறிமுகத்தால்தான். ஆயினும் அவர், காந்தி என்பதுடன் நேருவையும் இணைத்துக் கொண்டால் தமக்குப் பெரும் ஆதரவு கிடைத்துவிடும் என்று கணக்கிட்டார்.

1966-இல் பிரதம மந்திரியாக ஆனபொழுது அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1966-இல் மாநிலங்களவை உறுப்பினர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சுருக்கமாக வெளியிடும் சிறு புத்தகத்தில், தமது பெயரை “”இந்திரா நேரு காந்தி” எனப் போட்டு, வாழ்க்கை வரலாற்றைத் தந்தார்.

அதே கையேட்டில் மத்திய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய பகுதிகளில் “இந்திரா காந்தி’ என்று மட்டுமே அவரின் பெயர் தரப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, 1967 தேர்தலில் ரேபரேலி தொகுதியில் ஐ.என். காந்தி (இந்திரா நேரு காந்தி என்பதன் சுருக்கம்) என்ற பெயரில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971 தேர்தலில் “இந்திரா நேரு காந்தி’ என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். 1975-77 நெருக்கடிகால கோர தாண்டவத்துக்குப் பிறகு, 1977 பொதுத்தேர்தலில் “இந்திரா நேரு காந்தி’ என்ற பெயரில் போட்டியிட்டாலும் மக்களின் ஆதரவு முற்றிலும் மங்கிப்போய், வட மாநிலங்களில் இந்திராவும் அவர் கட்சியினரும் கடும் தோல்வி கண்டனர்.

1980-இல் “இந்திரா காந்தி’ என்ற பெயரில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தார். ஆக, “நேரு – காந்தி’ பரம்பரையினர் என்று போட்டுக்கொள்வதாலேயே, மன்னர் ஆட்சியின் எதேச்சாதிகார முறையும், தேர்தல் காலத்தில் மக்களின் கண் மூடித்தனமான ஆதரவும் ஆட்சி பீடமும் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு.

நேரு – காந்தி பாரம்பரியம் என்று புதிய முறையில் ஆரம்பிப்பது சரியல்ல என்று கூறும்பொழுது, ஜவாஹர்லால் நேருவின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதிவிடக் கூடாது.

1942 ஜனவரி 15-இல் வார்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸின் பொதுக்குழுக் கூட்டத்தில் மகாத்மா காந்திஜி முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “”எனக்கும் ஜவாஹர்லாலுக்கும் சச்சரவு இருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறானது. என் அருகில் நெருங்கிய காலத்திலிருந்து, பலவகைகளில் மதநம்பிக்கை, சோஷலிசக் கோட்பாடுகள் ஆகியவற்றில் நேரு மிகவும் பிடிவாதமான முறையில் என்னிடமிருந்து மாறுபட்டவர். அவற்றுக்காக அவர், வெளிப்படையாகப் போராடுபவர். ஆயினும் தடியால் அடிக்கத் தண்ணீர் பிளவுபட்டு விடாது. அரசியலில் நான் எடுக்கும் முடிவுகளில் அவர் உறுதியாக நிற்பவர். எனக்குப் பிறகு என் அரசியல் வாரிசாக ஜவாஹர்லால்தான் இருப்பார்” என்று அதில் குறிப்பிட்டார்.

அந்த அளவு அரசியலில் மகாத்மா காந்தியின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த ஜவாஹர்லால் நேருவைப் பெயரளவில் வெறும் சத்தற்ற பாரம்பரியத்தின் ஆதி மனிதராக ஆக்கி விடவேண்டாம்.

ராகுல் காந்தியைக் குறிப்பிட்டு, “நேரு-காந்தி பரம்பரையின் நான்காவது வாரிசு’ என்று வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிட்டாலும், அதை ஒரு பெருமையாகக் காங்கிரஸ் தவைர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் போலிருக்கிறது. இல்லை என்றால் அது தவறான விளக்கம் என்று ஏன் ஒரு காங்கிரஸ் தலைவர்கூடக் கண்டிக்கவில்லை?

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தங்களுடைய செயல்பாடுகளாலும், மக்கள் தொண்டின் அடிப்படையிலும் மக்கள் மன்றத்தின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்ற காங்கிரஸ் தலைவர் ஒருவர்கூட இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. சுதந்திரப் போராட்ட காலத்திலும், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டங்களிலும், நேர்மை, தியாகம், தொண்டு போன்றவைகளின் அடிப்படையில் தலைவர்களான காங்கிரஸ் பரம்பரை, இந்திரா காந்தியின் தலைமைக்குப் பிறகு அறவே ஓரங்கட்டப்பட்டு இல்லை என்று ஆகிவிட்டது. அதனால் இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு மக்களைச் சந்திக்க “நேரு – காந்தி பரம்பரை’யின் வாரிசு தேவைப்படுகிறது.

காங்கிரஸ் பாரம்பரியத்தின் அழிவில் உருவாகி இருப்பதுதான் நேரு – காந்தி பரம்பரை. பாரம்பரியம் என்பது பலம். பரம்பரை பலமல்ல, சுமை என்பதை எப்போதுதான் காங்கிரஸ்காரர்கள் உணரப் போகிறார்களோ, தெரியவில்லை.

இரா.செழியன்