September 23, 2021

பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலுக்கு டாட்டா!

தேமுதிக சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு ராமச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்தும் விலகுவதாகவும் இதையடுத்து தேமுதிக கட்சி பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்
panruti-s-ramachandran-owl
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆகவே, தேமுதிக-வின் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று முதல் (டிச.10) விலகிக்கொள்கிறேன்.தாயினும் மேலான அன்பு காட்டி, என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க ஆலந்தூர் தொகுதி மக்களின் காலத்தே செய்த இந்த உதவியை எனது வாழ்நாள் முழுதும் நெஞ்சில் நீங்காது நிலை நிறுத்துவதோடு, அவர்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதையொட்டி அவர் விஜயகாந்துக்கு எழுதிய கடிதத்தில்,””வணக்கம், எனது உடல் நிலை சரியில்லாததாலும், மருத்துவர் ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதாலும் இன்று (10.12.13) முதல் அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்.ஆகவே, தே.மு.தி.க. சார்பில் வகிக்கும் அவைத் தலைவர் உள்பட அனைத்து கூட்டுப்பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடன் பணியாற்றியபோது, தங்கள் என்னிடம் காட்டிய நல்லெண்ணத்தையும், நல்மதிப்பையும், பெருந்தன்மையையும் என்றும் மறவேன்.அதேபோன்று நிர்வாகிகளும், கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் காட்டியப் பாசத்திற்கு எனது இதயமார்ந்த நன்றி.

சேரும்பொழுது மகிழ்ச்சியும், பிரியும்பொழுது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. அதற்கு நானும் விதிவிலக்கல்ல” என்று கூறியுள்ளார்.