August 17, 2022

பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலாகிப் போன அரசியல்!

கடந்த பதினாறு ஆண்டு கால மின்சார அரசியல் அனுபவம், அரசியல் மின்சாரத்தை ஓரளவுப் புரிந்துகொள்ள உதவு கிறது. அரசியலி லிருந்தும், மின்சாரத்திடமிருந்தும் விலகி இருங்கள் (பொலிடிகா ந எலக்ட்ரிக் ப ரூக்கு) என்பது எத்தியோப்பிய நாட்டின் பிரதான மொழியான அம்ஹாரிக் மொழியில் வழங்கும் ஒரு பழமொழி. மின்சார அரசிய லையும், அரசியல் மின்சாரத்தையும் கையாள்பவர்கள் இந்த அறிவுரையை ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறோம்.
edit mar 27
தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், பணமயமாக்கல், மறுகாலனிமயமாக்கல் போன்ற விழுமியங்களால், இந்திய, தமிழக அரசியல் திசைமாறிப்போவதன் வெளிப்பாடுகளுள் ஒன்றுதான் இம்மாதிரியான விரக்தி மனப்பான்மை. தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வாழ்வாதார அழிப்பு, சுற்றுச்சூழல் வேரறுப்பு, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அழிவுத்திட்டங்கள் திணிப்பு, வாழ்வுரிமை மறுப்பு, தரமற்ற கல்வி, வேலை வாய்ப்பின்மை, தொழில் தேக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளைப் பார்க்கும்போது, சிந்திக்கும் திறன் கொண்ட யாராலும் வேதனைப்படாமல் இருக்க முடியாது.

தமிழகப் பொருளாதாரம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும், கடனிலும், கையாலாகாத்தனத்திலும் கிடந்து உழல் கிறது. எங்கும், எதிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. 2014-15 நிதியாண்டில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் கடன் ரூ. 1,81,036 கோடி என்று தெரிவித்து, அடுத்த நிதியாண்டில் (2015-16) இது ரூ. 2,11,483 கோடியாக உயரும் என்றார். ஆனால், தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2005-06 நிதியாண்டில் ரூ. 7,335 கோடிக்கு விற்ற மதுபானம் நடப்பு நிதியாண்டில் (2015-16) ஏறத்தாழ ரூ. 29,672 கோடியாக உயர்ந்திருக்கிறது.வரிச்சுமை, கடன் சுமை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய் ப்பின்மை, போதிய வருமானமின்மை, குடிநோய் எனப் பெரும் பொருளாதாரச் சீரழிவில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

ஆற்று மணலையும், கடல் மணலையும், குன்றுகளையும், மலைகளையும், மரங்களையும் தனியார் நிறுவனங்கள் அள்ளி விற்று கொள்ளை லாபம் அடைகின்றன. நம் எதிர்காலச் சந்ததிகள் வாழ்வாங்கு வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய இயற்கை வளங்கள் எல்லாம், ஒரு சில பணவெறியர்களின் பேராசைக்காக பலியிடப்படுகின்றன. அண் டை மாநிலங்களோடான தண்ணீர்த் தகராறுகளாலும், தமிழக அரசின் தண்ணீர் மேலாண்மைத் தவறுகளாலும், தமிழ் மக்கள் தண்ணீரின்றித் தவிக்கின்றனர்.

ஏராளமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் ஏறத்தாழ எழுபது விழுக்காடு நிலத்தடி நீரை நாம் இழந்துவிட்டோம் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. தமிழகத்தில் வாழ்க்கை எப்படி தரங்கெட்டிருக்கிறது என்பதைச் சற்றே கவனியுங்கள். 2014-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே அதிக தற்கொலை நிகழ்ந்த இரண்டாவது மாநிலம் தமிழகம் (16,122 பேர்).இந்தியாவின் 89 நகரங்களில், சென்னை நகரில்தான் அதிகம் பேர் (2,450) தற்கொலை செய்து கொண்டனர். 765 பட்டதாரிகள் தற்கொலை செய்து கொண்டனர் (இந்தியாவில் மொத்தம் 3,737 பட்டதாரிகள் தற்கொலை செய்து கொண்டனர்). வேலையில்லா திண்டாட்டத்தால் அதிகம் தற் கொலை செய்து கொண்டவர்கள் (312) தமிழ் நாட்டில்தான். 2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 வயதுக்குக் குறைந்த 34 பெண் குழந்தைகளும், 24 ஆண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 2014-ஆம் ஆண்டு 3,854 பேர் ஓட்டுனர் உரிமம் இல்லாத, உரிய வயது நிரம்பாதவர்களால் கொல்லப்பட்டனர். இவை தவிர, தமிழகத்தில் ஏராளமான சாலை விபத்துகளும், கூலிப்படைக் கொலைகளும் நடைபெற்றுள்ளன.

பொதுமக்கள் ஆட்சியாளர்களை எளிதில் அணுக இயலவில்லை. தங்கள் குறைகளை அவர்கள் கவனத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. தமிழகத்தில் சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் எனும் மும்மைதான் அரசியல் அரங்கை ஆட்டிப் படைக்கிறது. தமிழகத்தின் பெரிய கட்சிகள் தில்லி ஆட்சிபீடத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதால், தங்கள் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு, தமிழ் மக்கள் நலன்களைக் கண்டுகொள்ளாமல் கைவிடுகின்றனர். இதனால், அரசியல் நீரோட்டத்திலிருந்து மக்கள் அந்நியப்பட்டுக் கிடக்கிறார்கள். அரசியல் வாதிகளை, தலைவர்கள், வழிநடத்துனர்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக மக்கள் அவர்களை எதிரிகள் என்று பார்க்கும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது.

இன்னோரன்ன இழிநிலைகளால், தமிழ்ச் சமூகம் பெரும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு உரிமைப்பட்டத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட இயலாத நிலையில் தத்தளிக்கிறோம். நமது பாரம்பரிய ஜல்லிக் கட்டு விழாவை நடத்துவதற்குக்கூட தில்லியிடம் யாசகம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்க் குடிமைச் சமூகத் தை குடிகாரச் சமூகமாக்கி, கையறுநிலைக்குத் தள்ளி, தமிழர்களை கையேந்துபவர்களாக, இலவசங்களைக் கண்டு ஏமாறுபவர்களாக மாற்றியிருக்கின்றனர்.

கேரளத்திலிருந்து கர்நாடகத்துக்குப் போகும் கெயில் எரிவாயுக் குழாய்கள் தமிழக விளைநிலங்கள் வழியாக சுற்றிப் போகின்றன. கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, அனல் மின்நிலையங்கள், வேதியியல் தொழில்சாலைகள், கல், மண் குவாரிகள் என எங்கே பார்த்தாலும் அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பாலைவனமாக்கப்பட்டு, அங்கே மீத்தேன், நிலக்கரி போன்றவற்றைத் தோண்டி எடுப்பதற்குத் திட்டமிடுகின்றனர். நமது ஒன்றிய, மாநில அரசுகளால் ஒரு மழை வெள்ளப் பேரிடரைக்கூட திறமை யாகக் கையாள முடியவில்லை. மொத்தத்தில் தமிழர்கள் இன்னல்கள் நிறைந்து போய், இருளுக்குள் புதைந்து கிடக்கின்றனர். நிர்வாகத் தளத்தில் ஓர் ஏமாற்று அரசியல் நடந்துகொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தின் முதலிரண்டு அலகுகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தபோது, தமிழக ஆளுங்கட்சி அந்தத் திட்டம் முடியும் தருவாயில் இருப்பதால், உதவ இயலாது என்று கையை விரித்தது. தற்போது திட்டமிடப்படும் துவக்க நிலையில் இருக்கும் மூன்று-நான்காவது அலகுகளை நிறுத்துங்கள் என்று கேட்டால், பேச மறுக்கிறார்கள், திட்ட வேலைகளை மறைமுகமாக அனுமதிக்கிறார்கள்.

மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து கையெழுத்துப் போட்ட, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த இன்னொரு கட்சியினர், நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் இவற்றை யெல்லாம் எதிர்க்கிறோம் என்றனர்.நமது இன்றைய சமூக-பொருளாதார-அரசியல் யதார்த்தம் என்ன, அதைவிட முக்கியமாக நமது வருங்காலத் தேவைகள் என்ன, அவற்றை அடைவது எப்படி என்பது பற்றி பெரும்பாலான கட்சிகளுக்கு, தலைவர்களுக்குத் தெளிவான சிந்தனை, நிலைப்பாடு ஏதுமில்லை. இந்த சிந்தனை புலத்தில் தேர்ச்சி பெற, நம் ஆளுமைகள் ஆய்வு புலத்தில் சிறந்தோங்க வேண்டும். அப்படிப் பெறுகின்ற அறிவு, ஆற்றல், அனுபவங்களோடு செயற்புலத்தில் இறங்க வேண்டும்.

தமிழர்களின் வளம், வாழ்க்கை, வருங்காலம் போன்றவற்றை மீட்டெடுக்க, நாம் சில முக்கியமான சமூக-பொருளா தார-அரசியல் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். சமூகத் தளத்தில் கழகக் கலாசாரத்தை அழிப்பதும், வெறும் வார்த்தைகளை உண்மையின்றிக் கோர்த்தே வாய்ப்பந்தல் போடுவதை எதிர்ப்பதும், “கட் -அவுட்’, கொடிக் கம்பம், “ப்ளெக்ஸ் பேனர்’ வைத்து தலைமைக்கு வளம்சேர்க்கும் அரசியலைத் தடுப்பதும் முக்கியம்.

தரமான உணவின்றி, பாதுகாப்பான தண்ணீரின்றி, கண்ணியமான கழிப்பறையுமின்றி பெரும்பாலான தமிழ் மக்கள் மாண்பின்றி வாழும்போது, மலர்க் கிரீடம், வெள்ளி வாள், ஆளுயர மாலை என்று வேடமிடும் தலைவர்களைத் தவிர்ப்பதும் முக்கியம். பொருளாதாரத் தளத்தில் ஊழல், ஊதாரித்தனம், கடன்சுமை போன்றவற்றை அழித்தாக வேண்டும்.

அரசியலைப் பணம் போட்டு பணம் எடுக்கும் தொழிலாக்கும் போக்கைத் தடுத்தாக வேண்டும். திரையுலக மீட்பர் களுக்காக ஏங்கும், ஜாதிமத வெறியைப் பரப்பும், கொள்கை கோட்பாடுகளற்ற சந்தர்ப்பவாத அரசியல் மின்சாரம் நம்மை அழித்துவிடாமல் தடுத்தாக வேண்டும்.

சுப. உதயகுமாரன்