August 11, 2022

”படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி”!- கோவைத் தம்பி தகவல்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்குப் போய் சினிமா பார்த்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்களுள் ஒன்று. தற்பொழுது, வேந்தர் மூவிஸ் வழங்க, மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் இயக்குனர் விஜய மனோஜ் குமார் இயக்கத்தில் உயிருக்கு உயிராக என்கிற படம் தயாராகி உள்ளது.

உயிருக்கும் உயிராக படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விஜய மனோஜ் குமார், “பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான மண்ணுக்குள் வைரம் – ஐ இயக்க வாய்ப்பளித்தார் கோவைத்தம்பி…25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விஜய வருடத்தில் எனது பெயருடன் விஜய சேர்த்து, விஜய மனோஜ்குமாராக எனது 25 ஆவது படமாக உயிருக்கு உயிராக படத்தை இயக்கும் வாய்ப்பினையும் அளித்திருக்கிறார்…
sep 3 - kovai thambi.Mini
தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள் படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம்மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்… இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்…

படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப்பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்… நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக அது இருக்கும்… இந்தப் படத்தில் ஒரு ஹீரோ ஏரோநாட்டிகல் இன் ஜினியர். இன்னொரு ஹீரோ கம்ப்யூட்டர் இன்ஜினியர்… எதிர்காலத்தில் போர்கள் தரையில் நடைபெறப்போவதில்லை… அவை வான்வெளியில் தான் நடைபெறும்… அப்படிப்பட்ட அபாயகரமான போர்களின் போது நமது இராணுவத்திற்குப் பெரிதும் பயன்படும் தீர்வினை இந்த மாணவர்கள் கண்டுபிடிப்பார்கள்…

படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்… என் வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன்… இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்…” என்றார்.

உயிருக்கு உயிராக படத்தில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்-பிரீத்திதாஸ் ஆகியோர் நாயக, நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் முக்கியமான கவர்னர் கதாபாத்திரத்தில் ரங்கபாஷ்யம் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குனர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத இசையமைக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாந்தகுமார்.

முத்தாய்ப்பாகப் பேசிய தயாரிப்பாளர் கோவைத்தம்பி, “படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி… பிரிவியூ ஷோ போடும் நாள் நிச்சயதார்த்த நாள்… அதன் பிறகு நீங்கள் பெண்ணிடம் குறைகண்டுபிடித்து மக்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது… அவளின் நிறைகளைத் தான் சொல்லவேண்டும்…அப்பொழுது தான் படத்தின் வெற்றி என்னும் திருமணம் இனிதே நடைபெறும் ..” என்று பேசி அவையைக் கலகலப்புடன் நிறைவு செய்தார்.

இந்தச் சந்திப்பில் கதாநாயகர்கள் சஞ்சீவ், சரண்குமார் கதாநாயகிகள் பிரீத்திதாஸ், நந்தனா, ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், இசையமைபபாளர் சாந்தகுமார், மென்பொருள் நிபுனராக இருந்து தற்பொழுது நடிக்க வந்திருக்கும் ரங்கபாஷ்யம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.