September 18, 2021

பசுமையையும், விவசாயத்தையும் காப்பாற்றும் விந்தையை நாம் அறிவோமா?

‘அதள விதள பாதாளம்’ அதாவது மண், விண், கடல் என்ற மூவுலகும் மாசாகிவிட்டது. மண்ணையும், விண்ணில் உள்ள காற்றையும் மாசாக்கிய மனிதன் இப்போது விண்கலத்தில் பறந்து சந்திரனையும், செவ்வாய்கிரகத்தையும் மாசாக்குவது எப்படி என்று திட்டமிடுகிறான்! அதற்கு நிறைய அவகாசம் வேண்டும் என்பதால் நீர்மூழ்கிக் கப்பல் வழி சென்று ஆழ்கடலைத் தேடி அங்கு வாழும் அரிய உயிரினங்களை அழிக்க ஆரம்பித்து விட்டான்.
edit 25a
ஆற்று மணலை அள்ளுவதுபோல் பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி நாட்டினர் கடல் மண்ணை அள்ளுகிறார்கள். 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று “ஜி’க்கள் வளர்ச்சிக்கு உதவும் ஒலிவாங்கி மூலப்பொருள் தேடலா? அணுக்கதிர் வீச்சு மூலப்பொருள் தேடலா? ஆழ்கடல் ரகசியங்களை யார் அறிவார்?

மண்ணிலும், விண்ணிலும், ஆழ்கடலிலும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் கோடி கோடி கோடி என்று ஒன்றுக்குப் பின் எவ்வளவு கோடி பூஜ்ஜியங்களைப் போட்டாலும் நிரப்ப முடியாத நுண்ணுயிர்க் கூட்டமான உயிரியல் உலகம் பசுமையையும், விவசாயத்தையும் காப்பாற்றும் விந்தையை நாம் அறிவது நன்று.

குறிப்பாக, உணவு விவசாயத்துக்கும், உயிரிகளின் செயல்பாட்டுக்கும் உள்ள உறவு விசித்திரமானது. உயிரிகளின் செயல்பாட்டுக்குப் புத்துயிர் வழங்குவதன் மூலமே உலகம் பசியின்றியும், பிணியின்றியும் வாழ முடியும். ஏனெனில், மருத்துவத் துறையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு ஒப்பற்றது. கோடி கோடியாக லாபத்தை அள்ளித் தரும் துறை பயோ டெக்னாலஜி என்றால், பயோ டெக்னாலஜியின் மூலதனம் உயிரிகளின் உலகமே.

பாக்டீரியா என்றும், வைரஸ் என்றும், ஆல்கே என்றும், ஃபங்கஸ் என்றும், பிளாஸ் மிட் என்றும் அழைக்கப்படுபவை கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் என்றாலும், கண் விரித்துப் பார்க்கும் மாபெரும் யானைகளைவிட சக்தி மிகுந்தவை.

வேளாண்மை, உணவு, மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உயிரிகளின் பயன் அதிகம். எல்லாவற்றையும்விட நமது உயிர்ச் சூழல் மண்டலத்தில் (Ecological Zone) இடம் பெற்று மண்ணை வளப்படுத்துவதுடன், மண்ணை நஞ்சாக்க விடாமல் காப்பாற்றுவதும் நுண்ணுயிரிகளின் செயல்.

நைட்ரஜன் – கார்பன் – கந்தகம் போன்ற உலோகங்கள் கொண்ட மண் ரசாயன சுழற்சிக்கும் (Geo Chemical Cycle) கண்ணுக்குப் புலப்படாத உயிரிகளின் உலகமே ஆதாரம். உயிர்களுக்கு ஆதாரமான பஞ்சபூத சக்தி இயக்கமும் இதுவே.

உலகத் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள உயிரித் தொழில்நுட்ப வர்த்தகத்தில் ஏகபோகமாக அமெரிக்கா உள்ளது. இந்தியாவில் ஹைதராபாத், பெங்களூரு ஆகியன மென்பொருளில் மட்டுமல்ல; உயிரித் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியிலும் கொடி கட்டிப் பறந்தாலும், அது தேசியக் கொடியின் கீழ் அல்ல. அமெரிக்க தேசியக் கொடியின் கீழ்தான் வளர்ச்சி.

யு.எஸ். உணவு – மருந்து நிர்வாக அமைப்பின் ஒப்புதலுடன் இயங்கும் இந்திய – அமெரிக்கக் கூட்டு நிறுவனங்களின் மதிப்பு 4.3 பில்லியன் டாலர். இதில் மருந்து உற்பத்தியின் பங்கு 64 சதவீதம். விவசாயம் என்ற போர்வையில் மரபணு மாற்ற விதை உற்பத்தி பெறுவது 14 சதவீதம். இந்த 14 சதவீதத்தில் மிகவும் அற்பமான தொகை மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிரிகளின் உற்பத்திக்குச் செலவிடப்படுகிறது.

உயிரித் தொழில்நுட்பத்தில் அமெரிக்க ஏகபோகத்தின் வளர்ச்சியுடன் உலக வரலாறைத் தொடர்பு செய்யலாம்.

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த யூதர்களே மாபெரும் விஞ்ஞானிகளாகத் திகழ்ந்தனர். காரணம், அவர்கள் முதலில் ஜார் மன்னரால் ரஷியாவிலிருந்து விரட்டப்பட்டனர். பின்னர் இரண்டாம் உலகப் போருக்கு முன் ஹிட்லரால் விரட்டப்பட்டனர். பொதுவாகவே ஐரோப்பியர்களுக்கு யூதர்களை (JEWS) பிடிக்காது.

இயேசு பிரானை யூதர்கள் வஞ்சனையால் கொன்ற காரணமா? ஆரிய ரத்தக் கலப்பு இல்லாத “செமிட்டிக்’ என்ற காரணமா? ஜெர்மானியர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டு ஹிட்லர் காலத்தில் யூதர்களைக் கொன்று குவித்ததைப் போல் ரஷியாவில் நிகழவில்லை. அன்றைய ரஷியாவில் யூதர்களால் ஒரு சென்ட் நிலம்கூட வாங்க முடியாது. மூன்றாம் தரப் பிரஜைகளாக இழிவு செய்யப்பட்டனர்.

யூதர்கள் மிகவும் புத்திமான்களாக இருந்ததுதான் அடிப்படைக் காரணம். அன்றைய ரஷியாவில் உயிரியல் – மண்ணியல் ஆய்வுகளைச் சிறப்புடன் நிகழ்த்தியவர்கள் யூத விஞ்ஞானிகளே. பென்சிலினுக்குப் பின் ஸ்ட்ரெப்டோமைசினை கண்டுபிடித்து நுரையீரலைப் புண்ணாக்கும் காச நோய்க்கு விடை வழங்கிய ஆல்பர்ட் ஷாட்ஸ் (Albert Schaltz) என்ற அமெரிக்க விஞ்ஞானி, ரஷியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர் ஒருவரின் வாரிசு ஆவார்.

உண்மையில் ஆல்பர்ட் ஷாட்ஸ் மண்ணை வளப்படுத்தும் பல நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்தவர். ஆல்பர்ட் ஷாட்ஸின் தாத்தாவுடன் அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தைத் தோற்றுவித்த ஜே.ஐ. ரோடேலின் தந்தையும் ஜார் – ரஸ்புடீனால் ரஷியாவிலிருந்து விரட்டப்பட்டவர்! ஷாட்ஸின் ஆய்வுகளை ஜே.ஐ. ரோடேல் நூலாக வெளியிட்டார்.

முதல் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலிருந்து விரட்டப்பட்ட யூதர்கள் லட்சக்கணக்கில் அமெரிக்காவில் அடைக்கலம் பெற்றனர். விஷயம் என்னவென்றால், யூதர் வெறுப்பு நிகழ்ந்திராவிட்டால் உயிரியல் தொழில்நுட்பத்தில் ரஷியாவும், ஜெர்மனியும் முதன்மை பெற்றிருக்கலாம்.

இந்திய விவசாயத்தில் ஏராளமாக நுண்ணுயிரிக் கலவைகளின் பயன்பாடு உயர்ந்துவிட்டது. ஒரு பயிர் நோயின்றி வாழ வேர் மண்ணில் ஹ்யூமஸ் என்று சொல்லப்படும் கரிமம் உயர வேண்டும். வனங்களில் இயற்கையாகவே கரிமங்கள் உருவாகின்றன.
edit 25b
ஒரு மரத்தின் அடியில் நின்றால் குவியல் குவியலாக சருகுகள் பரப்பப்பட்டிருக்கும். அவற்றை விலக்கிவிட்டு மண்ணைக் கையில் எடுத்துப் பாருங்கள். அது மண்போல் கனமாயிருக்காது. எடையில்லாமல் லேசாக இருக்கும். அதுவே இயல்பான கரிமம்.

இந்தக் கரிமத்தை சோதித்துப் பார்த்தால் கோடானு கோடி நுண்ணுயிரிகள் தென்படும். இப்படிப்பட்ட நுண்ணுயிரிகளை அடையாளப்படுத்தி செயற்கை முறையில் கல்ச்சர் செய்து குப்பிகளில் அடைத்து லிட்டர் ரூ.300 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது.

இவ்வாறு கல்ச்சர் செய்வதற்குரிய தாய் நுண்ணியிரிகளைக் கலந்து மலிவு விலையில் விற்பதுண்டு. இதில் உள்ள பிரச்னை கரிப்பொடி / டால்கம் கலவையில் நுண்ணுயிரிகளை நீண்ட நாள் சேமிக்க முடியாது. இறந்து விடும்.

ஆகவே, ஈத்தர் போன்ற குளிர்ச்சியான திரவங்களில் காப்பாற்றலாம். ஆகவேதான், பஞ்ச கவ்யம், மீன் அமினோ அமிலம், பன்றி அமினோ அமிலம் போன்ற குணப ஜலங்கள் கரிப்பொடி நுண்ணுயிரிகளைவிட சிறந்ததாக எண்ணப்படுகிறது.

விளைச்சலை உயர்த்தும் நுண்ணுயிரிகள் எவை? நெல்லுக்கு அசோஸ்பைரிலம், புஞ்சைப் பயிர்களுக்கு ரைசோபியம், அட்டோ ஃபாக்டர் ஆகிய நுண்ணுயிரிகள் தழைச் சத்தைப் பெற்றுத் தரும். நீலப் பச்சைப் பாசி, அசோல்லாவும் அவ்வாறே.

பாஸ்போ பாக்டீரியா, மைக்கோரிசா (வேம்) மணிச் சத்தைப் பெற்றுத் தரும். இதை உயிரியல் தழைச் சத்து / மணிச் சத்து ஏற்றம் என்பர். மைக்கோரிசா ஒரு வகை காளான். உதிர்ந்த மரச் சருகுகள் மக்கும்போது இயல்பாகவே கிட்டும். காற்றில் உள்ள நைட்ரஜனை நைட்ரேட்டாக மாற்றிப் பயிருக்குப் பசுமை ஊட்டுவதும் மைக்கோரிசாவின் பணி.

எல்லாவிதமான பிராணிகள், பறவைகள் ஆகியவற்றின் கழிவுகளிலும் – தொழுவுரத்திலும் உள்ள நைட்ரஜனை நைட்ரேட்டாக பயிருக்கு ஏற்றுவதில் நுண்ணுயிரி பாக்டீரியாக்களின் பணி ஒப்பற்றவை.

ஆகவே, நிறைய மகசூல் பெற வேண்டுமானால் தொழுவுரம், கம்போஸ்ட் உரம், மண்புழு உரம் ஆகியவற்றுடன் பாக்டீரியா நுண்ணுயிரிகளை விட்டு ஊட்டமேற்றிய கலவையை வழங்கினால் பலன் பெறலாம்.

பாலைத் தயிராக்கும் லாக்டோபேசிலஸ் நுண்ணுயிரிகளும் மகசூலுக்கு உதவும். பயிருக்கு ஊட்டமேற்றி அதிக மகசூலை இயற்கையாகவே பஞ்சகவ்யம், குணப ரசம் தயாரித்தும் 5 சதவீத அடிப்படையில் (10 லிட்டர் நீரில் 500 மில்லி) தெளிப்பதால் பலன் உண்டு.

பஞ்ச கவ்யத்தையும் குணப ரசத்தையும் பயன்படுத்திய நமது முன்னோர் நல்ல விஞ்ஞானிகளே. ஏனெனில், அவற்றை சோதனைக் கூடத்தில் பரிசோதித்தபோது அனைத்து நுண்ணுயிரிகளும் லட்சக்கணக்கில் பெருக்கமாவது புலனாயிற்று.

செயற்கையாக கல்ச்சர் செய்யப்படும் நுண்ணுயிர் திரவங்களில் பேரூட்டங்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் இருக்காது. நாமே தயாரிக்கும் பஞ்சகவ்யம், குணப ரசங்களில் பேரூட்டங்களும் உண்டு.

விஞ்ஞான அடிப்படையில் டிரைக்கோ டெர்மா விருடி (காளான்), சூடோமோனஸ் (பாக்டீரியா), பாசிலஸ் சப்டிலஸ் (பாக்டீரியா), புவேரியா பஸ்ஸியானா (காளான்) போன்ற பல்வகை நுண்ணுயிரிகள் பயிர்களின் வேரில் உருவாகும் நோய்களுக்கு மருந்துகளாக உள்ளன. பஞ்சகவ்யத்தைப் பற்றி வள்ளலார் வழங்கிய திருவருட்பா உபதேசம் (பக்கம் 121) கூறியுள்ளது வியப்பாக உள்ளது.

“பஞ்சகவ்யத்தின் உண்மை யாதெனில்: கோ மயம் (சானி), கோ ஜலம் (மூத்திரம்), கோ கிருதம் (நெய்), கோ தகி (தயிர்), கோ க்ஷீரம் (பால்) – கோ மயத்தால் பிருதிவி (மண்) சுத்தி. கோ ஜலத்தால் – ஜல சுத்தி (நீர்), கோ கிருதத்தால் அக்னி சுத்தி, கோ தகியால் வாயு சுத்தி, கோ க்ஷீரத்தால் ஆகாச சுத்தி.

இதுபோல் பிண்டத்தில் பிருதிவியாகவுள்ள தேகத்தில் குருகல்களையும், அசுத்த மலங்களையும் கோ மயம் போக்கும். நீர்க்கட்டு, கோவை ஆகியவற்றை கோ ஜலம் போக்கும். உஷ்ண ஆபாசம் முதலியவற்றை கோ கிருதம் போக்கும். வாயுவின் கெடுதியாகிய மலபந்தம் முதலியவற்றை கோ ததி போக்கும். ஆன்மாவாகிய பிராணச் சோர்வை கோ க்ஷீரம் போக்கும். மேலும் பசு மிருகத்தின் ஆகாரமாகிய விருக்ஷங்களின் பலன்களே பஞ்சகவ்யம்…’

உயிர்களுக்கு ஆதாரமானவை பஞ்சபூத சக்திகளே என்று வள்ளலார் முன்வைத்துள்ளதை நுட்பமாக ஆராய்ந்தால் – விஞ்ஞான முடிவின்படி பஞ்சகவ்யத்தில் பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும் அனைத்து நுண்ணுயிரிகளும் அடங்கியுள்ளன. உயிரியல் உலகமே பஞ்சகவ்யத்தில் உள்ளதை எடுத்துரைக்க அருட்பெருஞ்சோதி தனிப்பெருந் தெய்வமாயுள்ள ராமலிங்க அடிகளாரை விடப் பொருத்தமானவர் வேறு யாரும் உண்டோ?

ஆர்.எஸ். நாராயணன்