September 18, 2021

பங்குச்சந்தையிலே இதெல்லாம் சகஜமப்பா! – ஆர்.பி.ஐ + மத்திய அரசு ஆறுதல்!

போன வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் பங்கு வியாபாரம் சரிவையேக் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 701.24 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 218.60 புள்ளிகள் சரிவடைந்தது. இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப் படும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தரப்பில் முன்னரே கணிக்கப்பட்டது. ஆனால், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்து உள்ளது.மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. இந்த ஆண்டின் மிகப்பெரிய சரிவு இதுவாகும். சீன பொருளாதார மந்த நிலை காரணமாக, முதலீட்டாளர்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டதால் இன்று பங்குகள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்றைய வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1741 புள்ளிகள் வரை சரிந்தது.
share aug 25
மின்துறை, வங்கி, ஆட்டோ, ஐ.டி., உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட் அனைத்து துறையின் பங்குகளுமே இன்று ஆட்டம் கண்டன. இதனால், முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையிலும் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. வர்த்தகத்தின் முடிவில் குறியீட்டெண் நிப்டி 490.95 புள்ளிகள் சரிந்து 7,809.00 புள்ளிகளில் நிலைபெற்றது. மொத்தத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பின் நேற்று ஒரே நாளில் பங்கு குறியீட்டு எண்கள் 6 சதவீதம் சரிவடைந்தன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 66.65–ஆக பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே பங்கு சந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார் என்றும் ஷேர் மார்க்கெட்டுலே இதெல்லாம் சகஜம்தான் எனவும் மத்திய அமைச்சர்அருண் ஜெட்லி கூறினார்.

நேற்றிரவு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களிடம், “பங்கு சந்தையில் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி சரிவடைந்தது. அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 66 ரூபாய் 64 காசுகளாக சரிவடைந்தது.பிரதமர் மோடி பங்கு சந்தை நிலவரம், இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கருத்து தெரிவித்து உள்ளார். நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது. ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய தேவை உள்ளது.

ஆனாலும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் உள்ள கொள்கைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சிக்கலை இந்தியாவுக்கான ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.உலகளவில் வர்த்தகத்தில் இப்படி நிலையற்ற தன்மை ஏற்படுவது இயற்கை யானதுதான். அனைத்து உலக சந்தைகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்போதுள்ள சூழ்நிலையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது”என்று அருண் ஜெட்லி கூறினார்.

இந்நிலையில், மும்பையில் இந்திய வங்கிகள் சங்கமும், பிக்கி அமைப்பும் இணைந்து நடத்திய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், ‘‘நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. எந்த ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமான அளவு அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், “நம்மிடம் ஏராளமான அன்னிய செலாவணி இருப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இறுதியாக மேற்கொண்ட மதிப்பீட்டின்படி 35,500 கோடி டாலர் கையிருப்பு உள்ளது. முடிந்த அளவு வட்டி விகிதங்களை குறைவாக நிர்ணயிக்க முயற்சி செய்கிறோம். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இணங்க அது அமையும். அடுத்து வெளியிடப்பட உள்ள பணவீக்க புள்ளிவிவரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.தற்போது காணப்படும் நிச்சயமற்ற தன்மைக்கு இனி வரும் மாதங்களில் முடிவு காணப்படும். அப்போது பணவீக்கம் மற்றும் பருவமழை பற்றிய முழுமையான மதிப்பீடுகள் வந்திருக்கும். அதற்கேற்ப ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் அடங்கி இருக்கும்.

ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையில் பொருத்தமான சமயத்தில் அன்னிய செலாவணி கையிருப்பை பயன்படுத்த நாங்கள் தயக்கம் காட்டப் போவதில்லை. யுவான் மதிப்பை குறைக்கும் சீனாவின் நடவடிக்கை அதன் அசாதாரண நிதிக்கொள்கையின் விளைவாக இருக்கிறது. அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது”என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்