September 21, 2021

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காதீங்க டாக்டர்!

ஆறு கோடி பெரிய தொகை. 15 வருடத்துக்கான வட்டி சேர்ந்தால் இரு மடங்காகும். ஒரு மரணத்துக்கு இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கப்படுவது நமது நாட்டில் இது முதல் முறை. ஆனாலும் இந்த பணத்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க இயலாது என்பது குணால் சகாவுக்கு தெரியும். அவர் டாக்டர். மனைவி அனுராதாவும். அமெரிக்காவில் வசித்தவர்கள் கோடை விடுமுறைக்கு கொல்கத்தா வந்தனர். அனுராதாவுக்கு தோலில் கொப்புளங்கள் தோன்றின. சிகிச்சை அளித்தபின் நோய் தீவிரமானது. மும்பைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுராதா மரணம்.
25 - edit medical
டாக்டர்கள் அஜாக்கிரதையால் மரணம் என்று சகா வழக்கு போட்டார். இழப்பீடாக ரூ.77 கோடி கேட்டார். நுகர்வோர் மன்றம் 1.7 கோடி கொடுக்க சொன்னது. சகா ஏற்கவில்லை. 1998 முதல் வட்டி கணக்கிட்டால் 200 கோடி வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கேட்டார். 6 கோடி ஆணை வந்துள்ளது.

இந்திய நீதிமன்றங்களில் தீர்ப்பு பெற எத்தனை காலம் போராட வேண்டும், எத்தனை தடைகளை தாண்ட நேரும் என தெரிந்தும் சகா தளரவில்லை. மனைவி மீது அத்தனை அன்பு. துணையை அழித்தவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்திருக்கிறார். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? என்றாலும் ‘மேம்பட்ட சிகிச்சைக்கான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவி பிரசாரம் செய்தார். வரவிருக்கும் கோடிகளை அதற்காக செலவிடக்கூடும்.

இப்படி இழப்பீடு கொடுக்க சொன்னால் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க பயப்படுவார்கள்; அதனால் நோயாளிகளுக்குதான் பாதிப்பு என்று ஒரு வாதம் கேட்கிறது. ‘நானும் டாக்டர். எல்லா உயிரையும் டாக்டரால் காப்பாற்ற முடியாது என்று தெரியும். ஆனால் நோயாளிகளிடம் அலட்சியமாக, அஜாக்கிரதையாக, ஆணவமாக நடக்கக்கூடாது. அப்படி நடந்து பாதிப்பு நேர்ந்தால் அதற்கு தண்டனை அனுபவித்தாக வேண்டும்’ என்கிறார் சகா.

அனுவை முதலில் பார்த்த டாக்டர் முகர்ஜி, ‘அமெரிக்க குளிருக்கும் கொல்கத்தா வெயிலுக்கும் பொருந்தவில்லை. மருந்து வேண்டாம். ஓய்வு எடுத்தால் போதும்’ எனக்கூறி அனுப்பிவிட்டார்.

பல டாக்டர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நோயாளி என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை கேட்க தயாராக இல்லை. அவர்களாவது கேள்வி கேட்டு பதில் வாங்கி, அறிகுறிகள் அடையாளங்கள் என்ன என்று அறிந்துகொள்ளவும் முன்வருவதில்லை. சரசரவென்று சில பரிசோதனைகள் செய்ய சீட்டு எழுதிக் கொடுப்பவர்கள் அதிகம்.

சோதனை முடிவுகளை கொண்டு போய் காட்டினால் சில நொடிகள் பார்த்துவிட்டு அடுத்த சீட்டு எழுதிக் கொடுப்பார்கள்.

சோதனையில் என்ன தெரிந்தது என்பதை சொல்வதில்லை, எந்த மருந்து எதற்காக என விளக்குவதும் இல்லை. பொறுமை இல்லையா, நேரம் இல்லையா, மனம் இல்லையா. மூன்றுமே இல்லையா.

கொப்புளங்கள் குணமாகாமல் அனுராதா மீண்டும் வந்தபோது வீரியம் மிகுந்த ஊசி மருந்தை தினம் இரண்டு வீதம் செலுத்தியிருக்கிறார். இந்த ஓவர்டோஸ்தான் சிக்கலை பெரிதாக்கிவிட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் பின்னர் நிபுணர்கள் ஊர்ஜிதம் செய்தனர்.

அதற்கு முன் கொல்கத்தாவிலும் பின்னர் மும்பையிலும் சிகிச்சை அளித்தவர்கள் இந்த உண்மையை சொல்லவில்லை. இவ்வாறு 17 டாக்டர்கள் அஜாக்கிரதையாளர்கள் பட்டியலில் ஏறியுள்ளனர். மருத்துவ அறியாமையா, சக டாக்டரை காட்டிக் கொடுக்காத ரகசிய ஆணவமா என்பது அவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.

மருத்துவம் இன்று மிகப்பெரிய பிசினஸ். லாபம் மட்டுமே லட்சியம். அதில் வியப்பில்லை. ஆயினும் ஏனைய தொழில்களுக்கு இருப்பது போன்ற சில அடிப்படை நியதிகள், விதிகள் பின்பற்றப்பட்டால்தான் பிசினஸ் பிழைக்கும்.

மக்கள் மனநிலையும் சரியில்லை. அரசு மருத்துவமனையில் சரியாக பார்க்க மாட்டர்கள் என்று தனியாரிடம் போனதாக சொல்கிறார் சகா. சரும, கேச பராமரிப்புக்கு பவுடர், கிரீம், ஆயில் தயாரித்து விற்கும் பெரிய குழுமத்துக்கு சொந்தமானது அந்த மருத்துவமனை. என்ன ஒரு முரண், பாருங்கள். மும்பை ஆஸ்பிடலும் மிக உயர் ரகம்.

மனசாட்சியுள்ள டாக்டர்கள்கூட கார்ப்பரேட் மருத்துவமனைகளின் உத்திகளால் குறுகிய காலத்தில் அதிக நோயாளிகளை பார்த்து அதிக வருமானம் ஈட்டித்தரும் எந்திரங்களாக மாறிவிடுகின்றனர் என்ற புகாருக்கு அனுராதா முடிவு வலு சேர்க்கிறது.

நோயாளியை ஏடிஎம் மெஷினாக பார்க்காமல் அவன் சொல்வதை பொறுமையாக கேட்டு நோயை கண்டறிந்து அதன் பின்னணியை விளக்கி சிகிச்சையை பரிந்துரைக்கும் டாக்டர்தான் கடவுளுக்கு ஒப்பானவர்.

அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்?

Kathir Vel