September 18, 2021

நேதாஜி ஆவணத்தால் வெடிக்கப் போகும் சர்ச்சைகள்!?

காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.நேதாஜி, 1945–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி முந்தைய சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது.
netaji
40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100–க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் இன்று வெளியிடப்படும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்து இருந்தார். இதன் காரணமாக அனைவரது கவனமும் இந்த ஆவணங்கள் எப்போது வெளியாகும் என்பதில்தான் உள்ளது. நேதாஜி 1964ம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், மம்தா அரசு வெளியிட உள்ள இந்த ஆவணம் தொடர்பாக செய்தி நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.