September 27, 2021

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!-

அடுத்த ஆண்டு இந்தியாவின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் மற்ற கட்சிகளைவிட அதிக முனைப்புடன் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
30 - Raghul and Modi.
பிரதமர் வேட்பாளராக, நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்த முனைகிறது ஆளுங்கட்சியான காங்கிரஸ். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை சந்தித்திராத வேதனைகளையும் சோதனைகளையும் மக்கள் சந்தித்து வருகிறார்கள். விவசாய நாடான இந்தியாவில் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சொந்த நிலத்தை விற்று விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்த விவசாயிகளின் எண்ணிக்கை விலைவாசியைப் போலவே வீங்கிக் கொண்டிருக்கிறது.

கிராமத்தில் கெüரவமாக வாழ்ந்தவர்கள் தங்கள் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு நகரங்களில் சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகளில் அன்றாடங்காய்ச்சிகளாக முறை சாரா தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2017 இல், நம் நாட்டின் மக்கள் தொகையில் ஒன்பது சதவீதம் பேர் குடிசைகளில் வாழ்வார்கள் என்கிறது பிரணாப் சென் கமிட்டி. அப்படி குடிசைகளில் வாழும் குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஏற்பட்டுள்ள முடக்கம், வேலைவாய்ப்பை கணிசமான குறைத்துள்ளது. படித்து விட்டு வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது போதாதென்று எங்கு நோக்கினும் ஊழல் என்னும் புற்றுநோய் பரவி உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் தாராளவாதம் கால்பதிக்க ஆரம்பித்த பின்பு, பெரும் முதலாளிகள், அதிகார வர்க்கம், ஊழல் அரசியல்வாதிகள் ஆகிய மூன்று தரப்பினரின் நிரந்தரக் கூட்டணி, உழைக்காமலே கொள்ளையடித்து மூலதனத்தை குவிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவே ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற ஊழல்கள்.

பெருமுதலாளிகள்தான் மந்திரி சபையையே தீர்மானிக்கிறார்கள் என்பதை, 2ஜி ஊழல் தொடர்பான டேப்புகளில் பதிவான டாடா நிறுவனத்தின் பிரதிநிதி நீரா ராடியாவின் பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். நிலக்கரி ஊழலில், பெரும் முதலாளியான பிர்லாவின் குடும்பத்தில் ஒருவரான குமார்மங்கலம் பிர்லா மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எதிராக எந்த குரலும் எழுப்பாமல், ஊழல் அழுக்கு மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு இந்தியாவை வெள்ளாவியில் வைத்து வெளுக்கப் புறப்படிருக்கிறார் ராகுல் காந்தி. இவரின் கீழ் வேலை செய்ய, ஐந்தாண்டுகள் நிதியமைச்சராகவும் ஒன்பதாண்டுகள் பாரத பிரதமராகவும் பணியாற்றிய மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிதான் கவலைக்கிடமாக இருக்கிறது என்றால் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் நோய்வாய்ப்பட்டுதான் இருக்கிறது. கட்சித் தலைமைக்குள் கோஷ்டி பூசல் கொடிகட்டிப் பறக்கிறது. கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆக பலரும் ஆசை கொண்டிருக்கும் வேளையில், ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு தனது செல்வாக்கின் மூலம் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. பா.ஜ.க வும் அதை ஏற்றுக் கொண்டது. இது பா .ஜ.க வின் உள்கட்சி ஜனநாயகத்தை (அப்படியொன்று இருந்தால்) நொறுக்கி, ஆர்.எஸ்.எஸ்ஸின் தேவைகளை நிறைவேற்றும் பிரதிநிதிதான் பா.ஜ.க என்பதை நிரூபித்துள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி தேர்ந்தெடுக்கும் தலைவரைத்தான், குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். என்கிற இந்து மதவாத இயக்கம் – தனது கடந்த காலம் முழுவதையும் சிறுபான்மையினருக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக , ஆதிவாசிகளுக்கு எதிராக செலவிட்ட இயக்கம் – தன் பணியை நிறைவேற்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு மோடியை முன்னிறுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். என்கிற “பெரிய அண்ணனை’ எதிர்த்து பேச பா.ஜ.க வில் ஆளில்லாததால் அமைச்சர் பதவியாவது பெற்று வாழ்ந்து விடலாம் என்று அனைத்து பா.ஜ.க உறுப்பினர்களும் மோடி புகழ் பாடி வருகிறார்கள்.

எல்லா ஊடகங்களும் நரேந்திர மோடியை ஒரு மீட்பராக மக்கள் மனதில் பதிய வைக்க முனைகின்றன. மூன்று முறை முதல்வரானதே அவரது தகுதி என்று அவை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அவரும் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுலா செல்ல ஆரம்பித்துவிட்டார்.

அவர் நாட்டுக்கு தேவையான மாற்றுக் கொள்கையைப் பற்றி பேசவில்லை. பொருளாதாரத்தை எப்படி சீர் செய்யப் போகிறேன் என்று பேசவில்லை. பா.ஜ.க வில் இருந்து கொண்டு ஊழலைப் பற்றி பேச முடியாது என்பதால் வடமாநிலங்களில் பாகிஸ்தான், சீனா பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் இலங்கையைப் பற்றி பேசுகிறார். அவர் பேச்செல்லாம் மத்திய அரசின் தவறுகளையே சுட்டுகின்றனவே அன்றி அவர் அதை எவ்வாறு சரி செய்யப் போகிறார் என்பதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

காங்கிரஸ் அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளாக மக்கள் மனதில் விதைத்த அதிருப்தியை அறுவடை செய்வதிலேயே மோடி குறியாக இருக்கிறார்.

பல அரசியல் ஸ்டண்டுகளை அடிக்கிறார் அவர். வல்லபபாய் பட்டேலுக்கு சிலை வைப்பேன் என்கிறார். 1948 ஜனவரி 30 ஆம் தேதி, மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே எனும் இந்து வகுப்புவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து 1948 பிப்ரவரி 4 ஆம் தேதி வல்லபபாய் படேல், “சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) கண்டிக்கத்தக்க தீய செயல்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த சங்கத்தின் வன்முறை வழிபாட்டால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வன்முறை வழிபாட்டில் கடைசியாக நமது விலைமதிப்பில்லாத காந்தி மகானையும் இழந்து விட்டோம்’ என்று கூறியதோடு தற்போது மோடியை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே அவர் தடை செய்தார். அந்த வல்லபபாய் படேலுக்குதான் சிலை வைக்கப் போவதாகக் கூறுகிறார் மோடி.

கோட்சேவிற்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் யாருக்காவதோ சிலை வைப்பேன் என்று அவர் சொன்னால் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், படேலுக்கு சிலை என்று அவர் சொல்லும்போது அவரது நோக்கம், மக்களின் மறதியைப் பயன்படுத்துவது மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது.

“கோயில்களைவிட கழிவறைகளே இந்தியாவுக்கு முக்கியம்’ என்று பேசி மக்கள் நலவிரும்பியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் மோடி தொடர்ந்து ஆண்டு வரும் குஜராத்தில் 18,321 அங்கன்வாடிகளுக்கும் 52 லட்சம் வீடுகளுக்கும் கழிவறைகளே இல்லை. 64 லட்சம் வீடுகளுக்கு சாக்கடை வசதி இல்லை. வளர்ச்சியைப் பொறுத்தவரை மகாராஷ்டிரம், ஹரியாணா, தமிழகம் ஆகிய மாநிலங்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே குஜராத் இருக்கிறது. ஆனாலும் மோடியை ஒரு மீட்பராகவே ஊடகங்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன.

“அப்பழுக்கற்றவர்’ என ஊடகங்கள் சொல்லும் மோடியின் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு: “குஜராத் மாநிலத்தில் துப்புரவுத் தொழிலாளி என்று அழைக்கப்படும் மனித மலம் அள்ளும் தொழிலாளிகளே இல்லை’ என்று குஜராத் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு துப்புரவுத் தொழிலாளிகளின் மறுவாழ்வுக்கு என மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று இருக்கிறது. இதுதான் மோடியின் நேர்மை. இரண்டாண்டுகளுக்கு முன் டாடா சமூக அறிவியல் கழகம் நடத்திய ஆய்வில் குஜராத்தில் மொத்தம் பனிரெண்டாயிரம் துப்புரவுத் தொழிலாளிகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதான் மோடியின் அப்பழுக்கற்ற தன்மையா?

காங்கிரஸýக்கும் பா.ஜ.க.வுக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் என்ன வித்தியாசம்? ஒன்பது ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன்றான ஊழல்களை மட்டுமே சாதனையாகக் கொண்ட ஆட்சியை நடத்தும் கட்சியின் துணைத் தலைவரான ஒருவர், தனக்கும் அரசுக்கும் எந்தவித ஒட்டோ உறவோ இல்லாததுபோல, ஊழலுக்கு எதிராக களம் இறங்குகிறார். இன்னொருவரோ, முன்னோடி மாநிலத்தின் முதல்வர் நான் என்கிற பொய்யான பிரசாரத்துடன் பிரதமராகத் துடிக்கிறார். ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்

திறமுமின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ – கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப்

பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ – கிளியே

நாளில் மறப்பா ரடீ

என்று ராகுல்களைப் பற்றியும் மோடிகளைப் பற்றியும் அன்றே பாடிவைத்தான் மகாகவி பாரதி.

டி.கே. ரங்கராஜன்