October 18, 2021

நெசவு தொழிலுக்கு “பாடை” கட்டறாங்கோ ! – கதறும் கைத்தறியாளர்கள்

நம்ம இந்தியாவைப் பொருத்தவரையில் கைத்தறி தொழிலில் அரசு புள்ளி விவரங்களின்படி 43 இலட்சம் பேர் பணிபுரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஜவுளி உற்பத்தியில் 11 சத வீதமும், ஜவுளி ஏற்றுமதி வருவாயில் 11 சதவீதம் துணிகள் பங்கு வகிக்கின்றன. இதில் கைத்தறியின் பங்களிப்பு பிரதானமாக உள்ளது. பட்டு சேலை, பெட்ஷீட் – வேட்டி – லுங்கி – டவல் – திரைச்சீலை -மேட் – தரைவிரிப்பு உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற துணிகளை உற்பத்தி செய்யும் நுண்திறன் வாய்ந்த நெசவாளர்கள் போற்றப்படாத நிலையில் காஞ்சிபுரம் வட்டாரத்தில் பல தலைமுறைகளாகப் பின் பற்றப்பட்டு வந்த லுங்கி நெசவுத் தொழில் இன்று மிகக் குறைந்த கூலியால் சிறிது சிறிதாகக் காணாமல் போய்வருகிறது. இத்தொழிலின் நுணுக்கங்கள் அடுத்த தலைமுறைக்குத் தெரியாததால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இத்தொழில் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளது.
f897e268-b901-45ac-917d-4971d1f36572
காஞ்சிபுரத்துக்கு பட்டு மட்டுமல்லாது, லுங்கி கைத்தறியும் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் ஏராளமானோர் லுங்கி உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலில் அதிகமானோர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கைத்தறித் தொழில் தேய்பிறையாகி விட்டது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்த்தப்படாததால் இத்தொழிலை பலர் கைவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள், “நெசவுத் தொழிலில் நாங்கள் பல தலை முறைகளாக ஈடுபட்டு வருகிறோம். எங்களில் பலர் வீட்டிலேயே சொந்தமாக தறி வைத்து கூலிக்கு நூல் வங்கி நெய்து கொடுத்து வருகிறோம்.உரிமையாளரிடம் இருந்து நூலை வாங்கும் நாங்கள், அதை அச்சுப் புனைந்து, பாவிட்டு பின் உருளையில் சுற்றி தறியில் மாட்டுவோம். அதன்பின், நூலை டப்பாவில் இழைத்து, அதில் இருந்து கொயல் என்னும் சிறிய கட்டையில் சுற்றி, அதை நாடா என்னும் கருவியில் மாட்டி தறி நெய்கிறோம்.

நூல் உரிமையாளர்களிடம் இருந்து பாவு என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட நூலை வாங்கும் நாங்கள் அதை மேற்கண்ட பல்வேறு பணிகளுக்குப் பின் தறியில் மாட்டியபின், 7 நாள்கள் பணியாற்றினால் தான் 8 லுங்கிகள் வரை எங்களால் தயாரிக்க முடியும்.இதற்கு ஒரு பாவுக்கு கூலியாக ரூ. 1,350 கொடுக்கின்றனர். இந்தத் தொகையிலிருந்துதான், நூல் இழைப்பதற்கும், திரிப்பதற்கும் வேறு பணி யாளருக்கு ரூ. 100, அச்சு புனைய ரூ. 110, பாவிட ரூ. 100 ஆகிய கூலிகளை நாங்கள் ஒதுக்க வேண்டும். மீதி ரூ. 1,040 மட்டுமே நிற்கும்.

ஒரு மாதத்தில் ஒரு நெசவாளரால் 4 பாவு நூல்களை மட்டுமே நெய்ய முடியும். அதன்மூலம் மாதம் ஒருநாள் கூட விடுமுறையில்லாமல் 10 மணி நேரம் பணியாற்றினால், மாதம் ரூ. 4,000 மட்டுமே எங்களால் சம்பாதிக்க முடிகிறது. இதனால் குடும்பச் செலவு, பிள்ளைகள் படிப்புச் செலவுகளுக்கு கடன் தான் வாங்க வேண்டும்.இன்றைய விலைவாசி உயர்வுக்குப் பின் எல்லாத் தொழில்களிலும் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நெசவுத் தொழிலாளர்களின் கூலி மட்டும் உயர்த்தப்படவே இல்லை. நெசவாளர்களின் நலன் கருதி கடந்த ஆட்சியில் தமிழக அரசு எங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளித்தது. ஆனால், தற்போது எங்களுக்கு மின் கட்டணத்தில் இருந்து ரூ. 100 மட்டுமே மின்வாரியத்தினர் கழிக்கின்றனர்.

கைத்தறியில் தயாரிக்கப்படும் லுங்கி மிகவும் மென்மையானதாகவும், அதேசமயம் நீண்ட நாள் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். எனவே இந்த லுங்கிகள் அரபு நாடுகளுக்கும், பிற வெளிநாடு களுக்கும் ஏற்றுமதியாகின்றன.மிகக் குறைந்த வருமானம் என்பதால் எங்கள் பிள்ளைகளுக்கு இந்தத் தொழிலைக் கற்றுக் கொடுக்கவே தயங்குகிறோம். அவர்களும் வேறு வேலைகளின் மீதுதான் நாட்டம் செலுத்துகின்றனர். எனவே, மிகவும் நுணுக்கம் வாய்ந்த இத்தொழிலுக்கு அடுத்த தலைமுறையினர் வருவதில்லை. தற்போது இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலோர் 50, 60 வயதைக் கடந்த வர்களாகவே உள்ளனர். எங்களுக்குப் பின் இந்தத் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால், இந்தத் தொழில் முற்றிலும் அழிந்து விடும் ஆபத்து உள்ளது.

ஒரு காலத்தில் குன்றத்தூரில் 10,000 கைத்தறிகள் இயங்கின. ஆனால் இன்றோ ஆயிரம் தறிகளுக்கும் குறைந்த அளவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இத்தொழிலைப் பற்றி வரலாற் றில் மட்டுமே படிக்க முடியும். எனவே பாரம்பரியமான இந்தத் தொழில் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு மற்ற வேலைகளுக்கு இணையாக நெசவுத் தொழிலாளர்களின் கூலியும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழிலைவிட்டு பிற வேலைகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் இத்தொழிலில் ஈடுபட வருவர். மேலும் புதிதாக இத்தொழிலைக் கற்பதற்கும் அடுத்த தலைமுறையினர் முன்வருவர். நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வந்த இத்தொழிலை அழிய விடாமல், அடுத்த தலைமுறை மக்களுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.